ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-32)

32. இந்தப் பொறுமையாளருக்குச் சுவனமே கூலியாகும்!

ஹதீஸ் 32. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உயர்வு மிக்கவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசியான என்னுடைய அடியானுக்கு என்னிடத்தில் கூலி – உலக வாழ்மக்களில் அவனுக்கு மிகப் பிரியமானவரின் உயிரை நான் கைப்பற்றினால் பிறகு அவன் (விதியைப் பொருந்திக் கொண்டு பொறுமை காத்து அதற்கான) கூலியை எதிர்பார்த்திருந்தால், (என்னிடத்தில் அவனுக்குரிய கூலி) சுவனத்தைத் தவிர வேறில்லை’ (புகாரி)

தெளிவுரை

அல்லாஹ் கூறியதாக வருகிற இவ்வகை ஹதீஸ், நபிமொழிக் கலையில் ஹதீஸுல் குத்ஸி (புனிதமான ஹதீஸ்) என அழைக்கப்படுகிறது.

மூலத்தில் அஸ்ஸஃபிய்யு – அதிகப் பிரியமானவர், உயிருக்குயிரானவர் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அகராதிப் பொருள், தேர்வு செய்யப்பட்டவர், உண்மையான நேசத்திற்குரியவர் என்பதாகும்.

அதாவது, ஒரு மனிதன் எவரை தனது அதிக நேசத்திற்கும் ஆழமான உறவுக்கும் நெருக்கத்திற்கும் உரியவராகத் தேர்வு செய்கிறானோ அவரைக் குறித்தே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. அவர் அவனுடைய மனைவியாகவோ மகனாகவோ தந்தையாகவோ தாயாகவோ சகோதரனாகவோ அல்லது நண்பனாகவோ இருக்கலாம். இத்தகைய உயிருக்கு உயிராய் நேசிக்கப்பட்டவர் -நெருங்கிப் பழகியவர் மரணமாகி விடும்பொழுது அந்த மனிதன் கடுமையான சஞ்சலத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகிறான். அதுவும் அந்த மரணம் திடீரென வந்து விடும்பொழுது அவனது இதயமே நொறுங்கி விடுகிறது. துன்பம் வந்து வாட்டும் இத்தகைய சூழ்நிலையில் உள்ளத்தைத் திடப்படுத்தி பொறுமை கொண்டால், பதறித் துடிக்காமல்- அழுது பிதற்றாமல் அமைதி காத்தால் அல்லாஹ் அவனுக்குச் சுவனத்தைக் கூலியாக வழங்குகிறான்.

பொறுமையின் பல வகைகளில் இந்தக் குறிப்பிட்ட பொறுமை தனிச் சிறப்புடையதாகும்.

இதேபோல் அல்லாஹ் தன் அடியார்களின் மீது பொழியும் கருணையின் சிறப்பும் இந்ந நபிமொழியில் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனில், நீங்கள் யாரை உயிருக்குயிராய் நேசிக்கிறீர்களோ அவரும் நீங்களும் – இருவரும் அல்லாஹ்வின் உடைமைகளே. தன் உடைமைகளில் யாரையும் – எப்பொழுதும் மரணமடையச் செய்வதற்கு அல்லாஹ்வுக்கு முழு அதிகாரம் உண்டு. அப்படியிருக்க நீங்கள் பொறுமையை மேற்கொள்கிறீர்கள் என்கிற வகையில் உங்களுக்கு சுவனத்தை அல்லாஹ் கூலியாக வழங்குகிறான் எனில் அது அவனது கருணையல்லாமல் வேறென்ன!

இந்நபிமொழி மூலம் மேலும் தெரிய வருகின்றது: உயிரை நான் கைப்பற்றினால் எனும் வாசகம், தான் விரும்பியதை அல்லாஹ் செயல் படுத்தக்கூடியவன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த இடத்தில், இன்னோர் உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அல்லாஹ்வின் செயல்பாடுகள் அனைத்தும் நன்மைக்குரிவையே! தீமை என்றுள்ள எதுவும் அவனுடன் சேர்க்கப்படமாட்டாது. எங்கேனும் – ஏதேனும் தீமை நிகழ்கிறதெனில் செய்யப்படுகிற பொருள்களில் நிகழ்கிறதே தவிர செயல் படுகிறவனின் அதாவது இறைவனின் செயலில் அல்ல!

எடுத்துக்காட்டாக, விதியில் அல்லாஹ் நிர்ணயித்த ஒன்று, ஒரு மனிதன் வெறுக்கும்படியாக உள்ளதெனில், அது அவனைப் பொறுத்து தீமை என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அது, அல்லாஹ்வின் நிர்ணயத்தைப் பொறுத்து தீமை அல்ல! ஏனெனில் அல்லாஹ் ஏற்படுத்திய நிர்ணயத்தின் பின்னணியில் ஏதேனும் மகத்தான தத்துவம் – பெரும் பயன்பாடு அமைந்திருக்கும். அது அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட மனிதனுக்குரிய பயன்பாடாக இருக்கும். அல்லது பொதுவாக எல்லோருக்கும் உரிய பயன்பாடாக இருக்கும்.

இதோ, பாருங்கள்! நிகழ்ந்துவிட்ட மரணத்தை அந்த மனிதன் பொறுமையுடன் எதிர்கொண்டு அதற்கான கூலியை எதிர்பார்த்திருந்தான் எனில் அது அவனுக்குப் பெரும் நன்மையாக அமைந்து விடுகிறது. அதாவது அப்படி ஒரு தீங்கு அவனுக்கு ஏற்பட்டதன் காரணமாக அல்லாஹ்விடம் அவன் அடைக்கலமாகிறான். பணிவோடு பிரார்த்தனை செய்து உதவி கேட்கிறான். அல்லாஹ்வின் கருணையும் உதவியும் மீண்டும் அவனை அரவணைத்துக் கொள்கிறது! அதன் மூலம் முன்னைவிட அதிகமாக அல்லாஹ்வின் பக்கம் அவன் நெருங்கிச் செல்ல வழிபிறக்கிறது. இது மிகப்பெரிய பயன் அல்லவா?

மட்டுமல்ல, மனிதனிடம் ஒரு பலவீனம் உள்ளது. அவனுக்குத் தொடர்ந்து நன்மைகளே கிடைத்துக் கொண்டிருந்தால் நன்றி மறந்து விடுகிறான். ஏதேனும் கஷ்டம் வரும்பொழுது தான் அவனுக்கு மீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு வருகிறது. பணிவுடனும் பக்தியுடனும் இறைவன் முன்னிலையில் உதவி கேட்டு மன்றாடுகிறான்! இவ்வாறாக அந்தத் தீமை அந்த மனிதனைப் பொறுத்து பெரும் நன்மையாக மாறுகிறது.

அதே தீமை மற்றவர்களைப் பொறுத்து நன்மையாக அமைவது எவ்வாறெனில், ஒரு மனிதனுக்கு மண் வீடுதான் உள்ளதென்று வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையில் அல்லாஹ் பெருவாரியான மழையைப் பொழிவிக்கிறான். அது மண்வீட்டுக்காரனுக்கு பெரும் தொல்லைதான்! அதே நேரத்தில் அதே மழை ஏனைய மக்களுக்கு பெரும் நன்மையாகிறது! இதோ! அந்த மழையால் அவர்களது விவசாயம் செழிக்கிறது. கால் நடைகள் பல்கிப் பெருகுவதற்கு வழிபிறக்கிறது!

அந்தப் பெரு மழையினால் ஏற்படும் துன்பம் மண்வீட்டு வாசிக்கும்கூட ஒருவகையில் நன்மையாக அமையலாம்! எப்பொழுதெனில், அந்தத் துன்பத்தின் மூலம் அவன் படிப்பினை பெற்று அல்லாஹ்வின் பக்கம் அடைக்கலமாகி பணிவையும் பயபக்தியையும் மேற்கொள்ளும்பொழுது அதற்கான கூலி அல்லாஹ்விடம் கிடைக்கிறது. இது, அந்தச் சிறிய தீமையை விடவும் பெரிய நன்மையாகிறது அவனுக்கு!

கேள்விகள்

1) அஸ்ஸஃபிய்யு எனும் சொல்லின் அர்த்தம் என்ன? விளக்கம் என்ன?

2) உயிரை நான் கைப்பற்றினால் எனும் வார்த்தையின் உள்ளர்த்தம் என்ன? இறைவனின் செயல்கள் முழுக்க முழுக்க நன்மை விளைவிப்பவையே என்பது எப்படி?

3) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.