29. ஆறுதல் சொல்வது, யாருக்கு? எப்படி?
ஹதீஸ் எண்: 29. உஸாமா(ரலி) அவர்கள், (நபியவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்களின் மகன். இவரும் இவருடைய தந்தை ஜைத் அவர்களும் நபியவர்களின் பிரத்தியேக அன்புக்குரியவர் ஆவர்.) கூறுகிறார்கள்: நபியவர்களின் மகளார்- என் மகன் உயிர் பிரியும் நெருக்கடியான நிலையில் இருக்கிறான். எனவே நீங்கள் எங்களிடம் அவசியம் வரவேண்டும் என்று நபியவர்களுக்குத் தூது அனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள் ஓர் ஆள் மூலம் இவ்வாறு பதில் அனுப்பினார்கள்: மகளுக்கு ஸலாம் உரைத்து இவ்வாறு சொல்லவும்: எதனை அல்லாஹ் எடுத்துக் கொண்டானோ அது அவனுக்குரியதே. எதனை வழங்கியிருக்கிறானோ அதுவும் அவனுக்கே சொந்தம்! ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத் தவணை உண்டு! எனவே என் மகள் பொறுமையுடன் இருக்கட்டும். அதற்கான கூலியை (அல்லாஹ்விடத்தில்) எதிர் பார்க்கட்டும்.
ஆனால் நபியவர்களின் மகளோ – அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நபியவர்கள் அங்கு வரத்தான் வேண்டும் என்று மீண்டும் அவர்களுக்குத் தூது அனுப்பினார்கள்.
எனவே நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். மேலும் ஸஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல், உபை இப்னு கஅப், ஜைத் பின் ஸாபித் (ரலி -அன்ஹும்) மற்றும் தோழர்கள் சிலரும் உடன் சென்றார்கள். அப்பொழுது நபியவர்களிடம் குழந்தை கொடுக்கப்பட்டது. நபியவர்கள் அதனைத் தமது மடியில் ஏந்தினார்கள். அப்போது குழந்தைக்கு மூச்சு வாங்கியது! (அதனைக் கண்ணுற்ற) நபியவர்களின் கண்களும் கண்ணீர் வடித்தன! அப்பொழுது ஸஅத் பின் உபாதா(ரலி) அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?, அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்: ‘அல்லாஹ் தன் அடியார்களின் இதயங்களில் வைத்துள்ள இரக்கமாகும் இது!’ – மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: தன் அடியார்களில் தான் நாடுவோரின் இதயங்களில் இதனை அல்லாஹ் அமைத்துள்ளான். தன் அடியார்களில் (துன்பத்திற்குள்ளானோர் மீது) இரங்குகிறவர் யாரோ அவர்கள் மீதுதான் அல்லாஹ் இரங்குகிறான். (நூல்: புகாரி, முஸ்லிம்).
தெளிவுரை
இதன் அறிவிப்பாளராகிய உஸாமா(ரலி) மற்றும் அவர்களின் தந்தை ஜைத்(ரலி) இருவரின் சிறப்பு குறித்து இரண்டு வார்த்தைகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்று: மௌலா ரஸூல்-அடிமைத் தளையில் இருந்து நபியவர்களால் விடுதலை செய்யப்பட்டவர். அதாவது, சிறு வயதில் அடிமையாய் இருந்த ஜைத்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி நபியவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள், அவர்களின் மனைவி கதீஜா(ரலி) அவர்கள்! நபியவர்களோ ஜைத்(ரலி) அவர்களுக்கு முழு விடுதலை அளித்தார்கள். இதனால்தான் ஜைத்(ரலி) அவர்களுக்கு மௌலா ரஸூல் (நபியவர்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள்) என்று கூறுவது நபித் தோழர்களின் வழக்கம் ஆனது!
மற்றொன்று: ஹிப்பு – அதிக அன்புக்குரியவர் என்பது அதன் பொருள். அதாவது, தந்தை மீதும் மகன் மீதும் நபியவர்கள் அதிக அன்பு வைத்திருந்ததால் ஹிப்புந் நபி (நபியின் பிரத்தியேக அன்புக்குரியவர்) எனும் சிறப்புப் பெயரை இருவரும் பெற்றனர்.
பொறுமையைக் கடைப்பிடிப்பது கடமை என்று வலியுறுத்தக்கூடிய ஆதாரங்களுள் இந்த நபிமொழியும் ஒன்று. இதனாலேயே இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இந்தப் பாடத்தின் கீழ் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள்.
மகனின் உயிர் பிரியும் நெருக்கடியான நிலையைக் கண்டு மனம் நொந்து தூது அனுப்பிய தம் மகளுக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பிய வார்த்தை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
‘அவள் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். கூலியை எதிர் பார்த்திருக்கட்டும்’
-அதாவது, பதற்றப்படாமல், சஞ்சலம் அடையாமல் மனத்தைக் கட்டுப்படுத்தட்டும். பொறுமைக்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்த்து அமைதி கொள்ளட்டும்.- இப்னு அபீ ஷைபா(ரஹ்) அவர்களின் நபிமொழித் தொகுப்பில், இவ்வாறு தூது அனுப்பியது நபியவர்களின் மகளார் ஜைனப்(ரலி) அவர்கள் என்றுள்ளது.
துன்பத்திற்குள்ளானவருக்குச் சொல்லும் ஆறுதல் மொழிகளில் நபி(ஸல்) அவர்கள் மொழிந்த இவ்வார்த்தை பொருட்செறிவானது மட்டுமல்ல, மனதிற்கு உண்மையான ஆறுதலளிக்க வல்லதுமாகும். பொறுமையை மேற்கொள்ளும்பொழுது அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும் என்பது முக்கியம். ஆறுதல் சொல்பவர் இதனையும் சேர்த்து நினைவூட்டுவது அதனினும் முக்கியம்.
ஏனெனில் இன்று நம்மில் பலர் துன்பத்தின்பொழுது பொறுமையைக் கடைப்பிடிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அதற்கான கூலியை அல்லாஹ் தர வேண்டும் என்கிற நாட்டமும் தேட்டமும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அதிகமான நன்மைகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது.
‘எதனை அல்லாஹ் எடுத்துக் கொண்டானோ அது அவனுக்குரியதே! எதனை வழங்கியிருக்கிறானோ அதுவும் அவனுக்குரியதே!’
பெரியதோர் உண்மையை உணர்த்தும் மகத்தான வார்த்தையாகும் இது. நம்முடைய உடைமைகள் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் எனும் பொழுது அவனது நாட்டப்படி எதையும் – எப்பொழுதும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உள்ளது. அது குறித்து பதறவும் பரிதவிக்கவும் என்ன இருக்கிறது!
இதனால்தான் துன்பத்திற்குள்ளாகும் பொழுது – இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (பொருள்: திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் திண்ணமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள்) என்று சொல்வது இஸ்லாத்தின் நடைமுறையாய் உள்ளது.
அனைத்தும் அல்லாஹ்வின் உடமைகள் எனும் ரீதியில்தான் அவன் நமக்கு வழங்கியவற்றை நம் விருப்பப்படி கையாளுவதற்கு நமக்கு அனுமதி இல்லை. அல்லாஹ் அனுமதித்த முறையில்தான் கையாள வேண்டும். மேலும் நம் உடைமைகளில் நாம் பெற்றிருக்கும் உரிமை முழுமையானதல்ல. ஒரு வரையறைக்கு உட்பட்டதே ஆகும்.
ஒருவன் தனது சொத்தில் மனஇச்சைப்படி ஆதிக்கம் செலுத்த நாடினால் – ஷரீஅத் அனுமதிக்காத முறையில் அதைக் கையாள விரும்பினால் அவனுக்கு நாம் சொல்வோம்:
‘இப்படிச் செய்ய உனக்கு அனுமதி இல்லை. உன் கைவசமுள்ளவை அல்லாஹ்வின் சொத்துக்கள். அவற்றை அவன் உனக்கு வழங்கியிருப்பது தற்காலிகமாகத்தான்!’
குர்ஆன் இதனை ஓர் இடத்தில் கூறுகிறது: ‘அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்’ (24:33) எனவே அவன் அனுமதித்த முறைப்படி அவற்றைக் கையாளுவதுதான் அவனது பேருதவிக்கு நன்றி செலுத்துவதாகவும் ஆகும்.
‘ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு’
குர்ஆனும் இதனை இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ஒவ்வொரு பொருளுக்கும் அவன் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான்’ (13 : 8)
ஆம்! ஒவ்வொன்றுக்கும் -அவற்றின் காலம், இடம், தன்மைகள் ஆகியவற்றைக் கவனித்து ஒரு வரையறை உள்ளது. அப்படி இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதியை முற்படுத்தவோ பிற்படுத்தவோ யாராலும் முடியாது.
குர்ஆன் மற்றோரிடத்தில் கூறுகிறது: ‘ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு காலத்தவணை உண்டு. அவர்களுடைய தவணை முழுமையாகி விட்டால் அவர்கள் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்’ (10 : 49)
எனவே மனிதர்களின் இறப்பு குறித்து அழுது புலம்புவதனால், அமைதி இழந்து பதறிப் பரிதவிப்பதனால் விதி மாறிடப் போவதில்லை!
‘நபியவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது’
– நபியவர்கள் மனம் பதறித்தான் அழுதார்கள் எனப் புரிந்து கொண்டு ஸஅத் பின் உபாதா(ரலி) அவர்கள் வியப்புத் தெரிவித்தார்கள். ஆனால் நபியவர்கள் அழுதது சிறுவனின் நெருக்கடியான நிலைகண்டு மனம் இளகியதால்தான்! இரங்கியதால்தான்!
கடும் பிணியினால் துன்பத்திற்குள்ளானோரைக் கண்டு மனம் இரங்கி கண்ணீர் வடிப்பதற்கு அனுமதி உண்டு என்பதையே இது காட்டுகிறது. சப்தமிட்டு அழுது புலம்பவோ ஒப்பாரி வைக்கவோ அனுமதி இல்லை. அப்படி மனம் இரங்கி நீங்கள் அழுவது உங்கள் உள்ளத்தில் ரஹ்மத் – கிருபை உள்ளது என்பதற்கும் அதனால் அல்லாஹ்வின் கிருபைக்கு நீங்கள் தகுதி பெற்று விட்டீர்கள் என்பதற்கும் அடையாளம் என்று இந்த அறிவிப்பு காட்டுகிறது.
இங்கே ஓர் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆறுதல் சொல்வதென்பது வாழ்த்துக் கூறுவதல்ல. மக்களில் சிலர் அவ்வாறு தவறாகப் புரிந்துகொண்டு தவறாகச் செயல்படுகின்றனர். இறந்த வீட்டில், பகட்டுக்காக வண்ண விளக்குகள் ஏற்றி, வருபவர்களை வர வேற்று, உயர்தர இருக்கைபோட்டு அமரச்செய்து மகிழ்விக்கின்றனர். மகிழ்கின்றனர்! இப்படிச் செய்வது எந்த வகையிலும் பொருத்தமாகாது! இது தவறு.
ஆறுதல் என்பது வாழ்த்துவது அல்ல. கவலைக்குள்ளான மனிதனின் மனத்தைச் சாந்தப்படுத்துவதும் சஞ்சலம் தவிர்த்து பொறுமை கொள்ளுமாறு செய்வதும்தான் ஆறுதல் என்பது!
மேலும் பாருங்கள். ஒரு முஸ்லிம் தன் உறவினர் மரணம் குறித்து கவலைப்படாமல் இருக்கிறார். யார் இறந்தால் நம்கென்ன என்று வாளாவிருக்கிறார் என்றால் அவரிடம் சென்றும் ஆறுதல் சொல்லத்தான் வேண்டுமா? இது மிகவும் நுட்பமான – கவனிக்கத்தக்க விஷயமாகும்.
கவலைக்குள்ளானவருக்கு ஆறுதல் கூறுவது ஸுன்னத் – நபிவழி என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர உறவினருக்கு ஆறுதல் கூறுவது ஸுன்னத் என்று சொல்லப்படவில்லை!
ஒரு முஸ்லிமின் மரணத்தினால் அவருடைய உறவினர் கவலைப்படாமல் இருக்க, எவ்வித உறவு முறையுமில்லாத அவருடைய உயிர்த்தோழர் கடும் கவலைக்கும் துயரத்திற்கும் ஆளாகலாம். இந்தச் சூழ்நிலையில் இந்த நண்பருக்குத்தான் ஆறுதல் கூற வேண்டுமே தவிர அந்த உறவினருக்கல்ல!
ஆனால் இன்று நம்மிடையே ஆறுதலுக்கான அளவுகோல் தலைகீழாக மாறிவிட்டது. உறவினருக்குத்தான் ஆறுதல் சொல்வது என்றாகி விட்டது. ஏற்பட்ட இறப்பினால் அவர் எவ்வளவுதான் ஆனந்தக் கூத்தாடினாலும் சரியே! வலியச் சென்று அவருக்கே மக்கள் ஆறுதல் சொல்கின்றனர்! அது ஒரு சடங்குச் சம்பிரதாயமாகி விட்டது!
இதனை இன்னும் தெளிவாக்குகிறது இந்த உதாரணம். ஓர் ஏழை. அவருக்கு சிறிய தகப்பனார் அல்லது சிறிய தகப்பனாருடைய மகன் இருக்கிறார். இவருக்கும் அவருக்கும் பல விஷயங்களில் சண்டை-தகராறுகள்! இந்நிலையில் அவர் இறந்து விடுகிறார். அவரது பல லட்சம் பெறுமான சொத்துக்கு இவர் மட்டும்தான் வாரிசு. அவரது இறப்பு குறித்து இந்த ஏழை கவலைப்படுவானா? நிச்சயம் கவலைப்பட மாட்டான். நம்மைப் பிடித்த தொல்லை தீர்ந்தது என்றிருப்பது மட்டுமல்ல. அவரை மரணிக்கச் செய்து அவருடைய ஏகப்பட்ட சொத்துக்கு நம்மை வாரிசு ஆக்கினானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றுகூறி ஆனந்தம் அடைவான். இப்பொழுது இவனுக்கு ஏதாவது சொல்லித்தான் ஆக வேண்டுமெனில் வள வாழ்வு கிடைத்ததற்காக வாழ்த்துத்தான் சொல்ல வேண்டும்!
அறிவிப்பாளர் அறிமுகம் – உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்கள்
உஸாமா(ரலி) அவர்களின் தாயார் பெயர் உம்மு ஐமன்(ரலி) அவர்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயார். நபியவர்கள் தங்களது அந்திம காலத்தில் உஸாமா(ரலி) அவர்களை சிரியா தேசத்து கிறிஸ்தவர்களுடன் போர் செய்யப் பணித்து தளபதியாக்கி அனுப்பி வைத்தார்கள். அப்படையில் அபூபக்ர், உமர்(ரலி) போன்ற மூத்த ஸஹாபாக்களும் இடம்பெற்றிருந்தார்கள். உஸாமா(ரலி) அவர்களுக்கு அப்பொழுது பதினேழு வயதுதான்!
ஆனால் போர்க் களத்தை அடையும் முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணம் அடைந்த செய்தி கிடைக்கவே அப்படை மதீனா திரும்பியது. பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நபியவர்கள் விரும்பியபடியே – உஸாமாவின் தலைமையிலேயே அந்தப் படையை அனுப்பி வைத்தார்கள்!
மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்கள் தீயோரால் கொலை செய்யப்பட்ட பிறகே – பிந்திய காலத்திலேயே உஸாமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்தார்கள். அது ஹிஜ்ரி 54 ஆம் ஆண்டு என்றொரு கருத்து உண்டு.
கேள்விகள்
1) உறவினரின் மரணத்தின் பேரில் துன்பத்திற்குள்ளானவருக்கு எந்த வார்த்தையைக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும்? அந்த வார்த்தையின் பொருளையும் விவரிக்கவும்.
2) நபியவர்களின் கண்கள் கண்ணீர் வடித்தன என்று வந்துள்ளது., அப்படியெனில் உறவினரின் மரணத்திற்காக அழுவது கூடுமா? விளக்கம் என்ன?
3) ஆறுதல் சொல்வது என்றால் யாருக்குச் சொல்ல வேண்டும்? மரணம் அடைந்தவரின் உறவினருக்கு – அவர் துன்பப்படாவிட்டாலும் ஆறுதல் கூறத்தான் வேண்டுமா?
4) உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்களின் வரலாற்றுக் குறிப்பைத் தரவும். அவர்களும் அவர்களின் தந்தையும் பெற்றிருந்த சிறப்பு என்ன?
5) ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்கள் சிறு வயதில் அடிமையாக ஆனதெப்படி? அந்த வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்கவும்.