23,24. இருவரும் சுவனம் சென்றனர்!
ஹதீஸ் 23: ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஆதத்தின் மகனுக்கு ஓர் ஓடை நிறைய தங்கம் கிடைத்தால் இரண்டு ஓடைகள் நிறைய தங்கம் வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை! எவர் பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான் ” (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஹதீஸ் 24: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘இந்த இரண்டு மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கொல்கிறார். பிறகு இருவரும் சுவனம் செல்கிறார்கள். – ஒருவர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகிறார். கொல்லப்படுகிறார். பிறகு கொலை செய்தவர் தௌபா – பாவமீட்சி தேடி மீளவே அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கி கருணை பொழிகிறான். அவர் இஸ்லாத்தைத் தழுவுகிறார். பிறகு அவரும் (இறைவழிப் போரில் கொல்லப்பட்டு) ஷஹீதாகிறார்! ” (நூல்: புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
இந்த இரண்டு நபிமொழிகளும் பாவமீட்சி பற்றி விளக்குகின்றன. மனிதன் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் திருந்தி, மனம் வருந்தி, வாய்மையுடன் தௌபா- பாவமீட்சி தேடினால் அவனை அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்பதே இவற்றின் மையக் கருத்தாகும்.
குர்ஆனும் ஓரிடத்தில் இதனையே எடுத்துரைக்கிறது: ‘(கருணைமிக்க இறைவனின் உண்மையான அடியார்களாகிய) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும் (கொலை செய்யக் கூடாதென) அல்லாஹ்வினால் தடைசெய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி கொலை செய்வதில்லை. மேலும் விபச்சாரம் செய்வதில்லை. இந்தச் செயல்களைச் செய்தவன் யாராயினும் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான். மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்புத் தண்டனை கொடுக்கப்படும். மேலும் அவன் இழிவுக்குரியவனாய் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பான். ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பிறகு) எவன் மன்னிப்புக் கோரி, இறை நம்பிக்கை கொண்டு நற்செயலும் செய்யத் தொடங்கினானோ அவனைத் தவிர! இத்தகையவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான். அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்” (25: 68 -70)
முதல் ஹதீஸின் கருத்து இதுதான்: மனிதன் பணத்தின் மீது பேராசை கொண்டவன். அவனிடத்தில் பணம் அபரிமிதமாகவே இருந்தாலும் இன்னும் பணம் வேண்டும்., இன்னும் பணம் வேண்டும் என்றுதான் பேராசைப் படுகிறான்! பணத்தாசை மரணம் வரையிலும் அவனைத் தொடர்கிறது! அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை என்கிற வார்த்தை சுட்டிக்காட்டுவது இதையே! -எவ்வாறாயினும் பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் அவன் மீளவேண்டுமென நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுகிறார்கள்.
ஏனெனில் பேராசையுள்ள மனிதன் பணத்திற்காகத் தவறான வழிகளின் மூலம் வருவாய் ஈட்ட தயங்குவதில்லை. பணம்தான் அவனுக்கு முக்கியம்! இந்த நோய்க்கு மருந்தென்ன? வாய்மையான முறையில் பாவமன்னிப்புத் தேடிக் கொள்வதே அதன் அருமருந்தாகும்.
ஆம்! மனிதன் திருந்திவிட்டால், மனம் வருந்தி பாவமன்னிப்புத் தேடி விட்டால் அல்லாஹ்விடம் அதற்கு மன்னிப்பு உண்டு. பொருளீட்டுவது தொடர்பான பாவமாக இருந்தாலும் சரியே!
இரண்டாவது ஹதீஸின் கருத்து இதுதான்: இறைநிராகரிப்பாளன் தனது நிராகரிப்புப் போக்கை கைவிட்டு பாவமீட்சி தேடினால் – இஸ்லாத்தை ஏற்றால் அல்லாஹ் அவனுக்கு மன்னிப்பு வழங்குகிறான். ஒரு முஸ்லிமை அவன் கொலை செய்திருந்தாலும் சரியே! ஏனெனில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவுதல் என்பது முந்தைய பாவங்கள் அனைத்தையும் மாய்த்து விடுகிறது!
அந்த இருமனிதர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிப்பதற்குக் காரணம் இதுதான்: உலகில் அவ்விருவரிடையே கடுமையான பகைமை இருந்தது. கொலை செய்யும் அளவுக்கு ஒருவரை ஒருவர் வெறுத்தனர். பிறகு ஷஹீத் (இறைவழிப் போரில் இறந்த தியாகி) எனும் அந்தஸ்தில் அவ்விருவருமே சுவனம் சென்றுவிட்டனர்! பரஸ்பரம் நேசம் கொள்ளக் கூடியவர்களாய் மாறி விட்டனர். ஏனெனில் சுவனம் சென்ற பிறகு அவர்களின் உள்ளத்தில் இருந்த பகைமையை அல்லாஹ் மாற்றி விடுகிறான். சுவனம் புகுந்த அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கக் கூடியவர்களாய் ஆகிவிடுகிறார்கள்! பொறாமை, பகைமை போன்ற எவ்விதமான இழிக் குணங்களும் இல்லாத தூயநிலை அடைந்து விடுகிறார்கள்!
சுவன வாசிகளின் யதார்த்த நிலை பற்றி குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அவர்களின் உள்ளங்களில் படிந்திருந்த குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள் ” (15: 47)
கேள்விகள்
1) மனிதன் பணத்தின் மீது பேராசை கொள்வதால் ஏற்படும் கேடுகளை விளக்கவும்.
2) அவனது வாயை மண்ணத்தைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை என்பதன் கருத்து என்ன?
3) இந்த இரு மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான் என்பதன் விளக்கம் என்ன?
4) கொலை பாதகச் செயல் செய்தவனும் சுவனம் செல்கிறான் எனில் அதன் அடிப்படை என்ன?
5) அறிவிப்பாளர்கள் குறித்து நீ அறிந்துள்ள தகவல்கள் என்ன?