16,17,18 சூரியன் மேற்கிலிருந்து உதித்தால்!
ஹதீஸ் 16: அபூ மூஸா அல் – அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ், பகலில் பாவம் செய்த மனிதன் பாவமீட்சி தேடட்டும் என்பதற்காக இரவில் தனது கையை விரித்து வைக்கிறான். இரவில் பாவம் செய்தவன் பாவமீட்சி தேடட்டும் என்று பகலில் கையை விரித்து வைக்கிறான். (இது) சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரையில் (நடந்து கொண்டிருக்கும்) (நூல்: முஸ்லிம்)
ஹதீஸ் 17: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதற்கு முன் (அதாவது யுக முடிவு நாள் வருவதற்கு முன்) யார் பாவமீட்சி தேடுகிறரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’ (நூல்: முஸ்லிம்)
ஹதீஸ் 18: உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் மனிதனின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்., அம்மனிதனின் உயிர் ஊசலாடும் கட்டத்தை அடையாதிருக்கும் வரையில்!’ (நூல்:திர்மிதி)
தெளிவுரை
இந்த மூன்று நபிமொழிகளின் கருத்து இதுதான்: பாவம் செய்த மனிதனை இறைவன் உடனுக்குடன் தண்டிப்பதில்லை. பாவமன்னிப்புத் தேடுவதற்கு அவனுக்கு அவகாசம் அளிக்கிறான். மனிதன் தாமதமாகப் பாவமன்னிப்புத் தேடினாலும் அதை ஏற்றுக் கொள்கிறான்.
ஒருவன் பகலில் பாவம் செய்துவிட்டு இரவில் தாமதமாகத்தான் மன்னிப்புக் கோருகிறான் என்றாலும் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்கிறான். இதே போன்று இரவில் பாவம் செய்த மனிதன் உடனே பாவமீட்சி தேடாமல் விடிந்த பிறகுதான் பகலில் பாவமன்னிப்புத் தேடுகிறான் என்றாலும் அல்லாஹ் அதனை ஏற்று அவனுக்கு மன்னிப்பு வழங்குகிறான். தன் மீது நம்பிக்கை கொண்ட மனிதன் திருந்தவேண்டும். நல்வழியில் திரும்ப வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். எனவேதான் மனிதனது தாமதமான பாவமீட்சியையும் ஏற்றுக் கருணை பொழிகிறான்.
ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. அதுதான் சூரியன் மேற்கில் இருந்து உதயமாவது. அப்படி சூரியன் மேற்கில் இருந்து உதயமாகி விட்டால் பாவமன்னிப்பு வழங்குவது முடிவடைந்துவிடும்.
சூரியன் எப்படி மேற்கில் உதயமாகும்? கிழக்கில் உதயமாவது தானே உலகின் நியதி என்று இங்கு ஒருகேள்வி எழலாம்!
ஆம்! இறைவன் சூரியனைப் படைத்த காலம் முதல் அது கிழக்கில் இருந்துதான் உதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக முடிவுநாள் நெருங்கும்பொழுது அது மேற்கில் உதித்து வரும்!
அதாவது, பூமியின் வேகச் சுழற்சி படிப்படியாகக் குறைந்து வரும்பொழுது அது தலைகீழாகச் சுழலத் தொடங்கும். கிழக்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும் பூமி, மேற்கு நோக்கிச் சுற்றத் தொடங்கும். அப்பொழுது சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதாகத் தோன்றும்!
கோளங்களின் சுழற்சியில் இப்படிப்பட்ட மாற்றத்தை மக்கள் காணும்பொழுது எல்லோரும் ஈமான் – இறைநம்பிக்கை கொள்வார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட எல்லா நிராகரிப்பாளர்களின் உள்ளங்களிலும் திடீர் விசுவாசம் பிறக்கும். ஆனால் யார் யாரெல்லாம் அதற்கு முன்பு நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பயனளிக்காது!
சூரியன் மேற்கில் இருந்து உதயமாவதைக் கண்டதும் எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள்! ஐயோ! நாம் பாவங்களிலேயே மூழ்கிக்கிடந்து விட்டோமே! இதோ! கேள்வி கணக்கு கேட்கப்படும் மறுமைநாள் உண்மையாகி விட்டதே! என்று பதறித்துடித்து அவசர அவசரமாக பாவமீட்சி தேடுவார்கள். ஆனால் மறுமைக்கான அடையாளங்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டால் ஈமான் கொள்வதோ பாவமீட்சி தேடுவதோ எவ்விதப் பயனும் அளிக்காது.
இதே போன்று தான் மனிதன் நன்கு ஆரோக்கியமாக வாழும்போதே பாவமீட்சி தேடி இறைவனின் மன்னிப்பைப் பெற்றிட வேண்டும். காலம் முழுவதும் தீமைகளைச் செய்து கொண்டிருந்துவிட்டு – இறைமறையின் எச்சரிக்கைகளையும் இறைத்தூதரின் அறிவுரைகளையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்து விட்டு உயிர் தொண்டையை அடைத்து நிற்கும் மரணவேளையில் பாவமீட்சி தேடினால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்தவிவரம் குர்ஆனிலும் நேரடியாகக் குறிப்பிடப் பட்டுள்ளது:
‘எவர்கள் தீய செயல்கள் புரிந்தவண்ணம் இருந்து, அவர்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது இப்பொழுது நான் பாவமீட்சி தேடுகிறேன் என்று சொல்கிறாரோ அத்தகையவர்களுக்குப் பாவமன்னிப்பு கிடையாது’ (4:18)
கேள்விகள்
1) மனிதனின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதற்குரிய கால அவகாசம் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன?
2) சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்பதன் விளக்கம் என்ன?
3) இந்நபிமொழிகளின் அறிவிப்பாளர்கள் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?