முஸ்லிம் கணவர் தமது மனைவியுடன்
இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்
இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஆன்மாவிற்கு நிம்மதியையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், இதயத்திற்கு உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய ஓர் உறவாகும். ஓர் ஆணும், பெண்ணும் அன்பு, நேசம், கருணை, ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவி, நலவை நாடுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளுடன் இணைந்து வாழ வழி அமைப்பதாகும். இதன்மூலம் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான இல்லறத்தை ஏற்படுத்திக் கொள்ள சக்தி பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகள்தான் நிறைவு பெற்ற, பாதுகாக்கப்பட்ட இஸ்லாமியத் தலைமுறையாக உருவாகிறார்கள்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அமைந்த இந்த இயற்கையான, நிரந்தரமான தொடர்பை மிகத் துல்லியமாக வர்ணிக்கிறது அல்குர்ஆன். அந்த வர்ணிப்பில் மன நிம்மதி, பாதுகாப்பு மற்றும் ஆறுதலின் அழைப்புகள் பரவி நிற்கின்றன. கருணை, அன்பு மற்றும் புரிந்துணர்வின் நறுமணம் அங்கே கமழ்கிறது.
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்க ளுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)
திருமணம் என்பது ஆன்மாவை ஆன்மா வுடன் இணைக்கும் உறுதிமிக்க ஒரு பந்தமாகும். இதில் பாசத்துடன் கூடிய கருணை மற்றும் தூய்மையான அன்பு செழிப்புற்று விளங்குகின்றன. நேசமும் இதமும் மிக்க இந்த இல்லறத்தில் ஆண், பெண் இருவரும் மன நிம்மதி, மன மகிழ்ச்சி, மற்றும் பாதுகாப்பு எனும் அருட்கொடைகளை முழுமையாகப் பெறுகிறார்கள். இதற்காகத்தான் அல்லாஹ் இரு ஆன்மாக்களுக்குமிடையே திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறான்.
நல்ல பெண் இந்த உலக வாழ்வின் சிறந்த இன்பம் என்றும் ஓர் ஆணுக்கு அல்லாஹ் வழங்கும் மகத்தான அருட்கொடை அந்தப் பெண்ணே என்றும் இஸ்லாம் கூறுகிறது. ஏனென்றால், ஒரு கணவன் தன் வாழ்வில் துன்பங்களையும் சோதனைகளையும் சிரமங்களையும் சந்தித்த நிலையில் இல்லம் திரும்பும் போது, தன் மனைவியிடம்தான் நிம்மதியையும் மனஆறுதலையும் இன்பத்தையும் அடைகிறான். இந்த இன்பத்திற்கு இணையாக உலகில் வேறெந்த இன்பமும் இருக்க முடியாது.
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியது எவ்வளவு உண்மையாக உள்ளது!
”உலகம் அனைத்தும் இன்பமே. அதன் இன்பத்தில் மிகச் சிறந்தது நல்ல பெண். ” (ஸஹீஹ் முஸ்லிம்)
இப்படித்தான், திருமணம் அதன் உயர்ந்த, பிரகாசமிக்க தரத்தில் அமைய வேண்டும் என இஸ்லாம் கருதுகிறது. அவ்வாறே, பெண்ணையும் அவளது பெண்மையின் மிக உயர்ந்த தரத்தில் வைத்து இஸ்லாம் பார்க்கிறது.
முஸ்லிம் தேடும் மனைவி
பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சியையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத்தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
(வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்’ என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)
மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
முகீரா இப்னு ஷுஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி (ஸல்) அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்” என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸாம்)
அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!’ என அவருக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸாம்)
ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: ”மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளை விட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.” (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
(இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ‘பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?’ என கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்’ என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)
கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.
உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிட மாட்டார். மாறாக, அவளை விட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.
மணவாழ்வில் இஸ்லாமிய வழி காட்டலைப் பின்பற்றுவார்
உண்மை முஸ்லிம் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ச்சி செய்தால் நிச்சயமாக, அவை நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன.
இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
”பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
”பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
”பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி (ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி (ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலையையும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்!
நபி (ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் உபதேசிக்க மறந்து விடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)
நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி (ஸல்) வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோராக ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!” (ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, ‘பரிபூரண நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிபூரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக ”முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், ”அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது. தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது.
தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் ”உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும்.
உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும்.
உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
”முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
முன்மாதிரி கணவர்
மனைவியிடம் நீதமான அழகிய நடத்தையைக் கொண்டிருக்க வேண்டுமென இந்த ஆதாரங்கள் அனைத்தும் வலியுறுத்துவதை உண்மை முஸ்லிம் அறிந்திருப்பார். எனவே, நிச்சயமாக அவர் ஒரு முன்மாதிரி கணவராகத் திகழ்வார். காலமும் வயதும் எவ்வளவு நீண்டாலும் அவன் மிருதுவான குடும்ப வாழ்க்கையில் இன்புற்று, அவன் உன்னதமான பண்பட்ட உயர்ந்தத் தோழமையில் வாழ்வதை அவரது மனைவி பாக்கியமாகக் கருதுவாள்.
வீட்டினுள் நுழைந்தால் அவர் தமது மனைவி, மக்களை முகமலர்ச்சியுடன் அணுகுவார் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூப்பார். அல்லாஹ் ஏவிய பிரகாரம் அழகிய முகமனைக் கூறியபடி அவர்களைச் சந்திப்பார். அந்த முகமனை இஸ்லாமிற்கு மட்டும் உரித்தான உயரிய தனித்துவமிக்கதாக அல்லாஹ் ஆக்கி இருக்கின்றான்.
”(நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது நொண்டி மீதும் குற்றமாகாது நோயாளி மீதும் குற்றமாகாது உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித் தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை).
ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்த போதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (ம்ஸலாமுன்’ என்னும்) வாக்கி யத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக் கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!” (அன்னூர் 24:61)
இந்த முகமனைக் கூறும்படி நபி (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அனஸ் (ரழி) அவர்களிடம், ”என் அருமை மகனே! நீ உனது குடும்பத்தாரிடம் சென்றால் ஸலாம் கூறிக் கொள். அது உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் அருளாக அமையும்” என்று உபதேசித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி)
ஒரு மனிதர் தமது குடும்பத்தாரை ஸலாம் கூறிச் சந்திப்பது எவ்வளவு அருள்வள- மிக்க (பரக்கத்) காரியம்! இவ்வாறு சந்தித்து குடும்பத்தினரின் வாழ்வை மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் உடையதாக ஆக்கி, இல்லத்தில் அன்பையும் அருளையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறார்.
ஒரு கணவர் தமது மனைவிக்கு ஏதேனும் உதவி தேவை இருப்பின் அவளுக்கு உதவ வேண்டும். வேலைப் பளுவின் காரணமாக அவளுக்கு களைப்பு, சடைவு, சஞ்சலம் ஏற்பட்டால் மென்மையாகப் பேசி அவளுக்கு ஆறுதலும் ஆனந்தமும் அளிக்கவேண்டும்.
‘தான் ஒரு சங்கைமிக்க உயர்ந்த குணமும் வலிமையும் கொண்ட கணவன் நிழலில் இருக்கிறோம்’ என்ற உணர்வை தம் மனைவியின் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். அவளைப் பாதுகாத்துப், பராமரித்து அவளது காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமது சக்திக்கு ஏற்ப அவளது முறையானத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும். மார்க்கம் அனுமதியளித்த அலங்காரங்களைக் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொண்டு அவளது பெண்மையை மகிழ்விக்க வேண்டும். தமது தேவைகள் அல்லது நண்பர்கள் அல்லது பொழுதுபோக்குகள் அல்லது படிப்புகள் என்று தம்மை ஈடுபடுத்திக்கொண்டு நேரம் அனைத்தையும் அவற்றில் மட்டும் செலவிட்டு விடாமல் மனைவியின் தேவைக்கெனவும் நேரங்களை ஒதுக்க வேண்டும்.
கணவன் மூலம் சுகமனுபவித்துக் கொள்ளும் விஷயத்தில் மனைவியின் உரிமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. எனவேதான், அவர் தமது அனைத்து நேரங்களையும், தொழுகை, நோன்பு, திக்ரு போன்ற காரியங்களிலேயே சிறந்த வணக்க வழிபாடுகளில் செலவிடுவதைக் கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், இது இந்த மகத்தான மார்க்கம் நிர்ணயித்துள்ள சமநிலைப் பேணுதல் என்ற அடிப்படைக்கு எதிராகும். இக்கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் காண்கிறோம்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸின் அளவுக்கதிகமான வணக்கங்களைப் பற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் ”நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?” என்று கேட்டார்கள். அவர் ”ஆம் அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அப்படிச் செய்யாதீர். நோன்பு வையுங்கள் நோன்பின்றியும் இருங்கள்! தொழவும் செய்யுங்கள் தூங்கவும் செய்யுங்கள்! நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களைச் சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உஸ்மான் இப்னு மள்வூனின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் (ரழி), நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் அலங்கோலமான ஆடையுடன், அழகற்ற நிலையில் வந்தார். அதைக் கண்ட அன்னையர், ”உனக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இந்தக் கோலத்தில் இருக்கிறாய்)” என்று கேட்டார்கள். கவ்லா (ரழி) தமது கணவரைப் பற்றி ”அவர் இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார் பகல் காலங்களில் நோன்பு வைக்கிறார்” என பதிலளித்தார். அன்னையர், நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு மள்வூனைக் கண்டித்தவர்களாக ”என்னி டத்தில் உமக்கு முன்மாதிரி இல்லையா?” என்றார்கள். அவர் ‘ஆம்’ இருக்கிறது. ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றார்கள். அதற்குப் பிறகு கவ்லா (ரழி) மணம் பூசி அலங்காரமாக வந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ”உஸ்மானே! நமக்கு துறவறம் விதிக்கப்பட வில்லை என்னிடம் உமக்கு முன்மாதிரி இல்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுகிறவன் உங்களில் அதிகமாக அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுகிறவன் நான்தான்” என்று கூறினார்கள். (தபகாத் இப்னு ஸஅத்3ஃ394)
ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தங்களது அழகிய வழிமுறையைத் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலையுடன் நடக்க வேண்டும் என்று வழி காட்டினார்கள். ஆகவேதான், மார்க்கத்தில் நடுநிலையைக் கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்கைப் பண்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. அவர்களில் ஒருவர் இதற்கு மாறு செய்யும்போது மற்றவர் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவார்கள்.
அபூஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரழி) அவர்களுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அபுத்தர்தா (ரழி) அவர்களைச் சந்திக்க ஸல்மான் (ரழி) சென்றிருந்தார்கள். அங்கு அவர்களது மனைவி மிக சாதாரண ஆடையில் இருந்தார். அவரைப் பார்த்த ஸல்மான் (ரழி) ”உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கவர் ”உமது சகோதரர் அபுத்தர்தாவுக்கு இந்த உலகில் எதுவும் தேவையில்லை” என்றார்.
வெளியிலிருந்து வந்த அபுத்தர்தா உணவு தயார் செய்து ஸல்மான் (ரழி) அவர்களிடம் ”நீங்கள் சாப்பிடுங்கள் நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்றார். அதற்கு ஸல்மான் (ரழி) அவர்கள் ”நீர் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்” என்று மறுத்துவிட்டார். பின்னர் அபுத்தர்தா (ரழி) அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார்கள். இரவில் அபுத்தர்தா (ரழி) நின்று வணங்க ஆயத்தமானார். ஸல்மான் (ரழி) ”தூங்குங்கள்” என்று கூறியவுடன் தூங்கிக் கொண்டார். பின்பும் அபுத்தர்தா (ரழி) தொழ முயன்ற போது ”தூங்குங்கள்” என ஸல்மான் (ரழி) கூறினார்கள்.
இரவின் கடைசிப் பகுதி வந்ததும் ஸல்மான் (ரழி) அவர்கள் ”இப்போது எழுந்திருங்கள்” என்று கூற, இருவரும் எழுந்து தொழுதார்கள். அபுத்தர்தா (ரழி) அவர்களிடம் ”உமது இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உண்டு உமது உயிருக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உண்டு உமது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமையை நிறைவேற்றுங்கள்” என்று ஸல்மான் (ரழி) கூறினார்கள்.
பிறகு அபுத்தர்தா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் ”ஸல்மான் சரியானதையே (உண்மையே) உரைத்தார்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அறிவும் இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம் தமது மனைவியுடனான இல்லறத்தை பசுமையாக வைத்திருக்க வேண்டும். இன்பமூட்டும் விளையாட்டி னாலும் ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும் தமது மனைவிக்கு அவ்வப்போது மகிழ்ச்சி யூட்டி, தங்கள் இருவடையே உள்ள உறவைச் செழிப்பாக்க வேண்டும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களை முன்மாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்தை நிலைநிறுத்துவது, முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவது, அறப்போருக்காக ராணுவத்தைத் தயார்படுத்துவது, இன்னும் இதுபோன்ற எத்தனையோ பல முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தும் இப்பொறுப்புகள் எல்லாம் நபியவர்களை ஒரு முன்மாதிரிக் கணவராக இருப்பதை விட்டும் தமது மனைவியருடன் அழகிய பண்புகளுடனும் பரந்த மனதுடனும் பழகி, அவர்களுடன் கொஞ்சி விளையாடுவதை விட்டும் தடுக்கவில்லை.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக ‘ஹரீர்’ என்ற உணவைச் சமைத்து எடுத்துக் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் ஸவ்தா (ரழி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். நான் ஸவ்தாவிடம் ”சாப்பிடுங்கள்!” என்று கூறினேன். ஸவ்தாவோ (ரழி) மறுத்து விட்டார். ”கண்டிப்பாக அதைச் சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லையெனில், அதை உங்கள் முகத்தில் பூசிவிடுவேன்” என்றேன். ஆனாலும் அவர் மறுத்து விட்டார். நான் ஹரீராவை எடுத்து நன்றாக அவரது முகத்தில் பூசிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக தமது கரத்தால் கொஞ்சம் ஹரீராவை எடுத்து ஸவ்தாவிடம் நீட்டி ”ஆயிஷாவின் முகத்தில் நீ இதைப் பூசிவிடு” என்றார்கள். (அல்ஹைஸமி)
மனைவியின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அழகிய நடத்தையுடன் இனிமை தரும் விதமாக செயல்பட்டதிலிருந்து அவர்களது நற்குணத்தையும் பெரிய மனதையும் மலர்ந்த பண்பையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களோடு ஆயிஷா (ரழி) அவர்களும் இருந்தார்கள். இருவரும் ஓட்டப்பந்தயம் வைத்தபோது ஆயிஷா (ரழி) அவர்கள் முந்தி விட்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்களுக்குக் கொஞ்சம் சதைபோட்டப் பிறகு மீண்டும் இருவரும் ஓடினார்கள். அப்போது நபி (ஸல்) ஆயிஷாவை முந்திவிட்டார்கள். ”இது அந்தப் பந்தயத்திற்குப் பதிலாகிவிட்டது” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே தெரிவித்துள்ளார்கள். (ஸுனன் அபூதாவூது, முஸ்னது அஹ்மது)
தமது நேசமிகு இளம் மனைவியின் இதயம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளைக் காண்பித்து அதை அவர்கள் பார்த்து ரசித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது சிறுவர்கள், பெரியவர்களின் ஆரவாரத்தைச் செவியுற்றார்கள். அங்கு சில ஹபஷி (நீக்ரோக்)கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ”ஆயிஷாவே! இங்கு வந்து பார்” என்றார்கள். எனது கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் இடையிலிருந்து பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் ”ஆயிஷாவே, உனக்குத் திருப்தியா? ஆயிஷாவே, உனக்குத் திருப்தியா?” என்று கேட்க ஆரம்பித்தார்கள். என் மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்து கொள்வதற்காக நான் ”இல்லை” என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலியின் காரணமாக) தங்களது இருபாதங்களில் ஒன்றை மாற்றி ஒன்றின் மீது நிற்பதைப் பார்த்தேன். (ஸுனனுன் நஸாம்)
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களை என்னுடைய அறையின் வாசலில் நிற்கக் கண்டேன். ஹபஷிகள் சிலர் ஈட்டியைக் கொண்டு மஸ்ஜிதில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் காதுக்கும் தோளுக்கும் இடையிலிருந்து அந்த விளையாட்டைக் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேலாடையால் மறைத்துக் கொண்டார்கள். நானாகத் திரும்பிச் செல்லும்வரை எனக்காக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வயதுப்பெண் எவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுப் பாருங்கள்!” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியரிடம் கொண்டிருந்த நல்லுறவு, நகைச்சுவை போன்ற பண்புகளைக் காணும் ஓர் உண்மை முஸ்லிம், தமது மனைவியிடம் நல்லவராகவும் அவளுக்கு உறுதுணையாகவும் அவளுடன் அன்பான குணமுடையவராகவும் மிருதுவானவராகவும் நடந்து கொள்வார்.
உண்மை முஸ்லிம் அற்பமானக் காரணங்களுக்கெல்லாம் கோபத்தை வெளிப்படுத்தும் மூடக்கணவர்களைப் போன்று நடந்து கொள்ளமாட்டார். விருப்பத்திற்கேற்ப உணவு தயார் செய்யவில்லை அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு பரிமாறவில்லை என்பது போன்ற அற்பமானக் காரணங்களுக்கெல்லாம் சிலர், வீட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி விடுகின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பவர் தமது ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) அவர் களின் நற்பண்புகளை நினைவில் நிறுத்தி, அன்பும் நேசமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட கணவராகத் திகழ்வார்.
உண்மை முஸ்லிம் இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடத்தையை நினைவு கூர்வார். நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதே இல்லை. விரும்பினால் அதைச் சாப்பிடுவார்கள் பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியிடம் ஆணத்தைக் கொண்டு வரக் கூறினார்கள். குடும்பத்தினர் ”எங்களிடம் காடி (வினிகர்) மட்டும்தான் இருக்கிறது” என்றனர். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வரச் சொல்லி ”காடி மிகச் சிறந்த ஆணம் காடி மிகச் சிறந்த ஆணம்” என்று கூறிக்கொண்டே சாப்பிட்டார்கள். (ஆணம் – குழம்பு) (ஸஹீஹ் முஸ்லிம்)
தங்களது மனைவியிடம் ஏற்படும் சிறிய குறைகளைப் பார்த்து கோபித்துக் கொள்பவர்கள் நன்கு கவனத்தில் வைத்துக் கொள்ளட்டும். உணவு தாமதமாகுதல், தான் விரும்பிய ருசியின்மை போன்ற காரணங்களுக்காக கோபப்படும்போது அந்த அப்பாவி மனைவியிடம் அக்குறை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில சமயங்களில் அவளுக்குச் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே பலர் கோபப்பட்டு விடுகிறார்கள்.
உண்மை முஸ்லிம், தம் மனைவியிடம் மட்டுமல்லாது அவளது உறவினர், தோழியரிடமும் நல்லுறவைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு வயோதிகப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து செல்வார். ”நபி (ஸல்) அவர்கள் அந்த மூதாட்டியைக் கண்ணியப்படுத்தி அவரிடம் ”நீர் எப்படி இருக்கிறீர்? உம் நிலை எப்படி இருக்கிறது? நமது சந்திப்பிற்குப் பிறகு எப்படி இருந்தீர்?” என்று விசாரிப்பார்கள். அந்தப் பெண் ”நலமாக இருக்கிறேன். என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறுவார்.
ஒரு நாள் அந்த மூதாட்டி வந்து சென்ற பிறகு அன்னை ஆயிஷா (ரழி) ”இந்த மூதாட்டியை இந்தளவிற்கு நீங்கள் வரவேற்கிறீர்களே! நீங்கள் யாருக்குமே செய்யாத சில காரியங்களையெல்லாம் அவருக்குச் செய்கிறீர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இந்தப் பெண் நாங்கள் கதீஜா (ரழி) அவர்களின் வீட்டில் இருக்கும் போது எங்களைச் சந்திக்க வருவார். நேசிப்பவர்களைக் கண்ணியப் படுத்துவது ஈமானில் (நம்பிக்கையில்) கட்டுப்பட்டது என்பது உமக்குத் தெரியாதா?” என்றார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
சில சமயங்களில் மனைவி கணவர் மீது கோபப்படலாம். ஏதேனும் ஒரு காரணத்தால் ஆத்திரத்தை வெளிப்படுத்தலாம். இந்த மாதியான சந்தர்ப்பங்களில் பெண்ணின் குண இயல்புகளை ஒரு முஸ்லிம் ஆழ்ந்து அறிந்தவராக இருப்பதால், மிகுந்த சகிப்புத் தன்மையுடனும் அழகிய குணத்துடனும் அதை எதிர்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் நபி (ஸல்) அவர்கள் மீது கோபித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சகித்துக் கொள்வார்கள். மனைவியரில் சிலர் இரவு வரையிலும் கூட நபி (ஸல்) அவர்களுடன் பேசாதிருப்பர்.
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ”குறைஷி குலத்தைச் சேர்ந்த நாங்கள், பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனா வந்தபோது அந்நகரப் பெண்கள், ஆண்கள் மீது ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். எங்களது குடும்பப் பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக் கொண்டார்கள்.” நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமய்யா இப்னு ஜைத் கோத்திரத்தாருடன் வசித்து வந்தேன்.
ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு, என்னை எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்கவர் ”நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலிலிருந்து இரவு வரை பேசுவதில்லை” என்று கூறினார்.
பின்பு நான் எனது மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன். ”ஹஃப்ஸாவே! நீ நபி (ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ”ஆம்” என்றார். ”உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிலிருந்து இரவு வரை கோபமாக இருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா ”ஆம்” என்றார். நான் கூறினேன்: ”உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்து விடுவார்.
உங்களில் ஒருவர் மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால், அதனால் அல்லாஹ்வும் கோபமடைவான். அதனால் ‘அவர் அழிந்துவிடுவார்’ என்ற அச்சம் அவருக்கு இல்லையா? நீ இறைத்தூதரிடம் எதிர்த்துப் பேசாதே அவர்களிடம் எதையும் கேட்காதே. உனக்குத் தேவையானதை என்னிடமே கேள்!” என்று கூறினேன். பிறகு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும் தனது மகள் ஹஃப்ஸாவுக்கு மிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை நற்பண்புகளிலும் செயல்பாடுகளிலும் பின்பற்ற நினைக்கும் முஸ்லிம், இதுபோன்ற நற்குணங்களைத் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இஸ்லாம் என்பது உயர்ந்த சமூக வாழ்க்கைக்குரிய மார்க்கம் என்பதை அவர் ஆதாரத்துடன் நிலை நாட்டியவராவார். மேலும், இன்று தனி மனிதர் அல்லது குடும்பம் அல்லது சமூகத்தில் ஏற்படுகின்ற அதிகமான பிரச்சினைகள், பிரிவினைகள், நெருக்கடிகள், குழப்பங்கள் அனைத்திற்கும் காரணம், இஸ்லாம் போதிக்கும் உயர்ந்த பண்புகளை விட்டும் தூரமாக இருப்பதுதான் அவற்றை அறியாமல் இருப்பதுதான் அவற்றின் மீது அவர்களுக்கு இருக்கும் தப்பான எண்ணம்தான். இதை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லவும் முடியும். உண்மையில் இஸ்லாம் போதிக்கக் கூடியவை அனைத்தும் மிக உயர்ந்த நற்பண்புகளாகும், நல்ல பழக்க வழக்கங்களாகும். கணவன் மனைவி இருவரும் இவற்றை மேற்கொள்ளும்போது சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் குடும்பத்தை விட்டும் நீங்கிவிடும். இல்லங்களில் ஈடேற்றம், நற்பாக்கியம், நிம்மதி, மகிழ்ச்சி எனும் இறக்கைகள் சிறகடிக்கும்.
வெற்றிகரமான கணவர்
மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் தூய்மைமிக்க, நல்ல மனைவியின் நேசத்திற்குரியவராகவும் திகழமுடியும். இஸ்லாமின் நேரியவழி காட்டுதலின் காரணமாக அவர் தமது மனைவியிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்து கொள்வார். நற்குணங்களால் நிரம்பிய இஸ்லாமிய வாழ்வியலை கடைப்பிடிக்க தமது மனைவிக்கு முழுமையாக வழிகாட்டுவார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறை வேற்றுவதில் தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவார். பெண், விலா எலும்பினால் படைக்கப்பட்டவள் என்பதையும் விலா எலும்பை நேராக்குவது அறவே சாத்தியமற்றது என்பதையும் ஒரு விநாடி கூட மறந்து விடமாட்டார்.
மனைவியிடம் நுண்ணறிவுடன், விவேகத்துடன் நடந்து கொள்வார்
உண்மை முஸ்லிம், தம் மனைவியிடம் நுண்ணறிவுடன், விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவளது குடும்பத்தார் எவரையும் அவளுக்கு முன் தவறாகப் பேசக் கூடாது. அவளது உறவினர் பற்றி அவளது இதயத்தைக் காயப்படுத்தும் படியான எந்த வார்த்தையையும் பேசிவிடக் கூடாது. கணவனும் இதில் கவனமாக இருக்க வேண்டும். மனைவியும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்கு மன வருத்தம் தரும் எந்தக் காரியத்தையும் செய்துவிடாமல் இருக்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கும் சொல்லாலோ செயலாலோ எவ்வித தீங்கும் இழைத்து விடாமல் நடந்துகொள்ள வேண்டும்.
தம்மிடம் தம் மனைவி வெளிப்படுத்திய ரகசியங்கள் எதையும் பிறரிடம் பகிரங்கப் படுத்தக்கூடாது. இதில் ஏற்படும் கவனக் குறைவும் அலட்சியமும் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சினைகளின் எரிமலையை வெடிக்கச் செய்து அவர்களிடையே நிலவும் அன்பொளியை அணைத்து விடுகிறது. எல்லா நிலையிலும் இஸ்லாமின் தூய ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற உறுதி உள்ள புத்திசாலியான முஸ்லிம் இவ்வாறான சூழல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
மனைவியின் குறைகளைச் சீராக்குவார்
மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் தமது மனைவியின் கல்வியறிவிலோ நடத்தையிலோ ஏதேனும் குறைகளைக் கண்டால் அவளிடம் அறிவார்ந்த முறையில் மென்மையாக நடந்து, அவளது குறைகளைக் களைந்து, அவளைச் செம்மைப் படுத்துவதில் ஆர்வம் கொள்ள வேண்டும். அவளைப் பண்படுத்தும் முயற்சியில் அவளிடம் ஆர்வக் குறைவோ, வெறுப்போ வெளிப்பட்டால் அதை மென்மையாகவும் புத்திக் கூர்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.
எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு மத்தியில் அவளைக் கண்டிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கடுமையாகப் பாதிக்கும் விஷயம் என்னவென்றால், அவளைத் தண்டிப்பதைப் பிறர் பார்ப்பதும், அவளைக் கண்டிப்பதைப் பிறர் கேட்பதும்தான். இறையச்சமுள்ள முஸ்லிம், பிற மனிதர்களைவிட உணர்வால் மிக நுட்பமானவராக இருப்பார். அவ்வாறே மற்றவர்களின் உணர்வுகளையும் மிக அதிகமாக மதிப்பார்.
பெற்றோர் மற்றும் மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்
நற்பண்புள்ள முஸ்லிம், தமது பெற்றோர் மற்றும் மனைவி இருவரையும் எப்படி திருப்திப்படுத்துவது என நன்கறிவார். இருவரில் எவருக்கும் அநீதி இழைத்து விடாமல், அந்த இருவருடனான உறவில் சமநிலை பேணி, பெற்றோருக்கு நோவினை அளிக்காமலும், மனைவிக்கு அநீதியிழைத்து விடாமலும் விவேகத்துடன் நடந்து கொள்வார்.
பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து, உபகாரம் புரிந்து அவர்களது கடமையை நிறைவேற்றுவார். அவ்வாறே மனைவியின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். பெற்றோருக்கு உபகாரம் செய்வதாலும் அவர்களைப் பேணுவதாலும் மனைவியைப் புறக்கணித்து விடக்கூடாது.
உண்மை முஸ்லிம் இறையச்சமுடையவராகவும் இஸ்லாம் போதித்த நற்பண்புடையவராகவும் இருப்பதால், இவ்வாறு சமநிலை மேற்கொள்வதில் அவருக்குச் சிரமம் ஏதுமில்லை. இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர், மனைவியிடையே எவ்வாறு நீதமாக நடந்து, அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய சரியான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்பதை அவருக்குப் போதித்துள்ளது. எனவே, அதைப் பேணி நடப்பார்.
மனைவியைச் செம்மையாக நிர்வகிப்பார்
இவ்வாறான உயரிய பண்புகள் மற்றும் அழகிய பழக்கவழக்கங்கள் மூலம் ஒரு முஸ்லிம், தமது மனைவியின் இதயத்தை கொள்ளை கொண்டிருப்பார். எனவே, அவள் அவருக்குப் பணிந்து, அவரது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்யாமல் நடந்து கொள்வாள்.
ஆணுக்குப் பெண்ணைவிட பல நற்பண்புகளை இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. பல தகுதிகளை வழங்கியுள்ளது, பல சட்டங்களையும் வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளது. இதனால் பெண்ணை நிர்வகிக்கும் தகுதியையும் ஆணே பெறுகிறார்.
ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். காரணம், அவர்களில் (-ஆண்கள், பெண்களில்) சிலரை (-ஆண்களை) சிலரைவிட (-பெண்களை விட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். மேலும் ஆண்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்கின்றனர். (அன்னிஸா 4:34)
இந்த நிர்வகிக்கும் அதிகாரத்திற்கென சில கடமைகளும் உள்ளன. கணவர் அந்தக் கடமைகள் குறித்து விசாரிக்கப்படுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தனது குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தனது கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளன் தனது எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே; தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஆம், சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. அந்த ஒவ்வொருவரும் சமுதாயத்தைப் பற்றி ஏதேனும் ஒரு வகையில் விசாரிக்கப்படுவார். ஏனெனில், இஸ்லாமியப் பார்வையில் வாழ்க்கை என்பது முயலுதல், செயல்படுதல், உருவாக்குதல் ஆகும். அது வீண் கேளிக்கையோ நோக்கமற்ற ஒன்றோ அல்ல.
இஸ்லாம் பெண்களைப் பேண வேண்டிய விஷயத்தில் ஆண்களுக்குப் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது, மேலும், பெண்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அவ்வாறே வாழ்வில் அவள், தான் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, மார்க்கம் பெண்ணுக்கு என நிர்ணயித்துள்ள வரம்புகளுக்குள் நிற்க வேண்டுமெனவும் கட்டளையிடுகிறது. அப்போதுதான் வருங்காலத் தலைமுறைகளை உருவாக்குவதிலும் வாழ்க்கையை இன்பத் தாலும் நற்பாக்கியத்தாலும் செழிப்பாக்கு வதிலும் தன் கணவனுடன் பங்கெடுத்துக் கொண்டு வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றியவளாவாள்.
இஸ்லாம், ஒரு கணவன் தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடக்க வேண்டுமென கூறும் அதே நேரத்தில், மனைவியும் அல்லாஹ் அனுமதித்த மற்றும் நீதமான செயல்களில் கணவருக்குக் கட்டுப்பட வேண்டுமெனவும் மிக உறுதியாக கட்டளையிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமென நான் ஏவுவதாக இருந்தால், கணவருக்கு ஸஜ்தா செய்யுமாறு மனைவியை ஏவியிருப்பேன்.” (ஜாமிவுத் திர்மிதி)
மேலும், மனைவி சொர்க்கம் செல்வதற்குக் கணவன் திருப்தியைப் பெற்றிருக்க வேண்டுமெனவும் இஸ்லாம் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எந்தப் பெண் கணவன் திருப்தியைப் பெற்ற நிலையில் மரணம் அடைகிறாளோ அவள் சொர்க்கம் செல்வாள்.” (ஸுனன் இப்னுமாஜா)
கணவருக்குக் கட்டுப்படாத பெண், திருந்தி தனது கணவருடன் இணக்கமாக நடந்து கொள்ளும்வரை அவளை வானவர்கள் சபிக்கிறார்கள் என்று நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள்: ”ஒரு பெண் தனது கணவன் படுக்கையை வெறுத்த நிலையில் இரவைக் கழிப்பாளாயின் விடியும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கிறார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஆண், பெண்ணை நிர்வகிப்பவர் பெண், ஆணைத் திருப்திப்படுத்த வேண்டும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதை உறுதி செய்யும் விதமாகவே ரமழான் அல்லாத காலங்களில் கணவன் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது என்றும், அவரது அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும் வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் பெண்ணிற்கு வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”கணவர் தன்னுடன் இருக்கும் போது அவரது அனுமதியின்றி (உபரியான) நோன்பு நோற்பது பெண்ணுக்கு ஆகுமானதல்ல. மேலும், கணவன் வீட்டில் அவரது அனுமதியின்றி எவரையும் அவள் அனுமதிக்கக் கூடாது.” (ஸஹீஹுல் புகாரி)
உண்மையில் கணவர் ஓர் ஆண் மகனாக இருந்து குடும்பத்தைப் பாதுகாத்து, நேர்வழியின்பால் அழைத்துச் செல்ல தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதால்தான் இஸ்லாம் ஆணுக்குப் பெண்ணை நிர்வகிக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. மேலும், பெண்களின் குழப்பங்களுக்கு ஆண்கள் ஆளாகுவதைக் கடுமையாக எச்சரிக்கிறது. ஆண்கள், பெண்களின் குழப்பங்களுக்கு ஆளாகும் போது அவர்கள் கண்கள் குருடாகி விடுகின்றன் அவர்கள் வீரம் இழந்து விடுகின்றனர். மார்க்கத்தில் பலவீனமடைந்து விடுகின்றனர். நேரிய பாதையிலிருந்து தவறி விடுகின்றனர். இறுதியில் கடிவாளம் அவர்களது கையை விட்டு நழுவி, வழி தவறிய பெண்ணின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் குடும்பம் சிக்குண்டு விடுகிறது. பின்பு அவளது பேச்சை மறுக்க முடியாத, அவளது கட்டளையை மீற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக முன் அறிவிப்புச் செய்தார்கள்:
”எனக்குப் பின் ஆண்களுக்கு, பெண்களை விட மிக இடைåறு தரும் ஒரு சோதனையை நான் விட்டுச் செல்லவில்லை.” (ஸஹீஹுல் புகாரி)
வழி தவறிய மனைவியின் எந்தவொரு குழப்பத்திற்கும் முன்பாக முஸ்லிம் பலவீனமடையமாட்டார். அவளது குழப்பம் எவ்வளவு கடுமையாக இருப்பினும் சரியே! மனைவியின் அன்பு உள்ளத்தில் இருந்தாலும் ”அல்லாஹ்வின் பொருத்தம்தான் மிக விரும்பத்தக்கது கணவர், மனைவியை விரும்புவது எவ்வளவு அதிகமாக இருப்பினும் அது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் அன்பை விட குறைந்ததுதான்” என்பதை அவளுக்கு மிக அழகாக புரிய வைக்க முயல்வார்.
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறும்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் உங்கள் பொருட்களும், நஷ்டமாகி விடுமோ என நீங்கள் பயந்து மிக எச்சரிக்கையுடன் செய்து வரும் வியாபாரமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள உங்கள் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்கள் அல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். (இது போன்ற) பாவிகளை அல்லாஹ், நேரான வழியில் செலுத்துவதில்லை. (அத்தவ்பா 9:24)
தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று இஸ்லாமிற்கு மாற்றமாக நடக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லத்தில் காண இயலாது.
ஒருவர் தமது மனைவியை அல்லது சகோதரிகளை அல்லது மகள்களை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவர்களாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கங்களுக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் மாறாக உள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர் ஆணுக்குரிய வீரத்தை இழந்து, மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதே பொருளாகும். இந்த இழிவிலிருந்து அவர் மீளுவதாக இருந்தால் அதற்காக மனம் வருந்தி உண்மையான பாவமன்னிப்புக் கோர வேண்டும், நேரான வழியின் பக்கம் திரும்ப உறுதி கொள்ள வேண்டும்.
இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளைக் கற்றுக் கொடுத்து அவளுக்கு தனித்த ஆடை அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டை விட்டு வெளியேறுவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய ‘ஹிஜாப்’-பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.
ஒரு முஸ்லிம் பெண்மணி, இஸ்லாமியப் பண்பாட்டில் வளர்ந்தவள் இஸ்லாமின் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே, இஸ்லாம் கூறும் ஹிஜாபைத் திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், மிகுந்த ஆழமான விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். ஹிஜாப் அணிவது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். அது ஆணின் வற்புறுத்தலுக்காகவும் இல்லை அல்லது ஆணின் அகம்பாவத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. அல்லது அதைத் தூக்கி எறிவதற்கு அது ஒன்றும் இஸ்லாமிய மன்னர்களால் புதிதாக உருவாக்கப்பட்டதுமல்ல.
எவ்விதக் கல்வி ஆதாரமுமின்றி, அருள்மறையின் வழிகாட்டுதலும் இன்றி, வெட்கமற்ற வீணான ஆண் பெண்களுக்கு இந்த ஹிஜாபைப் பரிகசிப்பது இன்பமாகத் தோன்றுகிறது.
அன்னை ஆயிஷா (ரழி) கூறினார்கள்: ”முதலாவதாக ஹிஜ்ரத் செய்த பெண்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
தங்களது ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்… (அன்னூர் 24:31)
என்ற பொருள் கொண்ட அல்குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.”
ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ”அந்தப் பெண்கள் தங்களது போர்வைகளின் ஓரப்பகுதியைக் கிழித்து தங்களை மறைத்துக் கொண்டனர்” என்று காணப்படுகிறது.
ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நாங்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் இருந்த போது குறைஷிப் பெண்களையும் அவர்களது மேன்மைகளையும் நினைவு கூர்ந்தோம். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாகக் குறைஷிப் பெண்களுக்குச் சில சிறப்புகள் உள்ளன. அல்லாஹ்வின் நூலை (குர்ஆனை) உண்மைப்படுத்துவதில் காட்டும் உறுதி, அருளப்பட்டதை ஈமான் (நம்பிக்கை) கொள்வது போன்ற விஷயங்களில் அன்சாரிப் பெண்களை விட சிறந்த பெண்களை நான் பார்த்ததில்லை.
”….தங்கள் அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பை மறைத்துக் கொள்ளவும்…” என்ற பொருளுடைய வசனம் அருளப்பட்ட போது, ஆண்கள் அவற்றை ஓதிக் காட்டுவதற்காக அந்தப் பெண்களிடம் சென்றார்கள். ஒவ்வோர் ஆணும் தனது மனைவி, மகள், சகோதரியிடமும் நெருங்கிய ஒவ்வோர் உறவினரிடமும் ஓதிக் காட்டினார்கள். உடனே அனைத்துப் பெண்களும் தங்களது கம்பளி ஆடைகளை எடுத்து தங்கள் மீது சுற்றிக் கொண்டனர். இவ்வாறு அல்லாஹ் அருளியதை உறுதியாக நம்பிக்கை கொண்டு உண்மைப்படுத்தினார்கள். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தங்களது தலையில் துணி போர்த்தியவர்களாக ஸுப்ஹு தொழுகைக்கு வந்தார்கள். அது பார்ப்பதற்கு, காகம் தலையில் உட்கார்ந்திருந்ததைப் போன்று இருந்தது. (ஃபத்ஹுல் பாரி)
அல்லாஹ் அந்த அன்சாரிப் பெண்கள் மீது அருள் பொழியட்டும்! அவர்களது நம்பிக்கை (ஈமான்) எவ்வளவு உறுதியானது! அவர்களது இஸ்லாம் எந்தளவு உண்மையானது! குர்ஆன் வசனங்கள் இறக்கப்படும் போது அவற்றை அவர்கள் ஒப்புக் கொண்டதுதான் எவ்வளவு அழகு! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் அந்த அன்சாரிப் பெண்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவர்களைப் போன்று தனித்தன்மைமிக்க இஸ்லாமிய ஆடையைத் தான், தாமும் கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அணியும் அரைகுறை ஆடைகளையும் ஹிஜாப் இன்றி சுற்றித் திவதையும் பொருட்படுத்தக் கூடாது.
இந்த இடத்தில் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை நினைவு கூர்கிறேன். அந்த பெண்மணியிடம் அன்சாரிப் பெண்களிடம் காணப்பட்டதற்கு சற்றும் குறையாத ரோஷ உணர்வு வெளிப்பட்டது. டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் ”இந்தக் கடுமையான கோடை காலத்தில் பர்தா அணிவது சிரமமாக இல்லையா?” என ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கேட்ட போது அந்தப் பெண்மணி, அல்குர்ஆனின் வசனத்தையே பதிலாகக் கூறினார்:
”(நபியே!) கூறுவீராக! நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பமுடையது.” (அத்தவ்பா 9:81)
இப்படிப்பட்ட பரிசுத்தமான முஸ்லிம் பெண்களால்தான் இல்லங்கள் செழிப்புறுகின்றன் சிறப்புமிக்க தலைமுறையினர் ஒழுக்கப்பயிற்சி பெறுகின்றனர். சமுதாயத்தில் வீரமிக்க – செயல் திறன்மிக்க ஆண்கள் உருவாகின்றனர். சமூகத்தில் இத்தகைய பெண்கள் இன்றும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றனர். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
தமது பெண்கள், வீட்டிலிருந்து வெளியேறும்போது இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பின்பற்றி வெளியே செல்கிறார்களா? ஹிஜாபைக் கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிப்பது உண்மை முஸ்லிமின் பொறுப்பாகும். மனைவியோ அல்லது சூழ்நிலையோ மிகைத்து, மார்க்கத்தை மீறுவதற்கு தூண்டும் போது கணவன் திருத்த முடியாமல் பலவீனப்பட்டு நிற்பானேயானால் அது அவனது மார்க்கமும் ஆண்மையும் அவனிடமிருந்து எடுபட்டு விட்டன என்பதற்குரிய அடையாளமாகும்.
தமது மனைவியின் விஷயத்தில் கணவன் பொறுப்பு, அவளது வெளித் தோற்றங்களுக்கு மட்டுமல்ல. மாறாக, அவளது வணக்க வழிபாடுகள் மற்றும் குணங்கள் அனைத்திற்கும் கணவர் பொறுப்பாளியாவார். மனைவி வணக்க வழிபாட்டில் குறை செய்தால், அல்லாஹ்வுடைய கடமையில் அலட்சியம் அல்லது பாவம் செய்து வரம்பு மீறினால் அதற்காக கணவர் விசாரிக்கப்படுவார். மேலும் அவளின் குணங்கள், பழக்க வழக்கங்கள் அவள் தனது கடமைகளை நிறைவேற்றுவது குறித்தும் கணவடமும் விசாரிக்கப்படும். இந்த விஷயங்களில் எந்த ஒன்றிலும் அவளிடம் குறைவு ஏற்பட்டால் அது கணவனின் ஆண்மைக்குப் பாதகமாகவும், அவனது இஸ்லாமிய மார்க்கப்பற்றுக்கு பங்கம் விளைவிப்பதாகவும், அல்லாஹ் அருளிய நிர்வகிக்கும் தகுதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அமையும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், இஸ்லாம் பெண்ணை ஆணிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளது. பெரும்பாலும் மனைவி கணவன் வழியை அடியொற்றி நடப்பவளாகத்தான் இருப்பாள். அவர் அவளைத் தம்முடன் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் அல்லது நரகிற்கு இழுத்துச் செல்வார். அதனால்தான் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு உத்தரவிடுகிறான். தங்களது மனைவி, மக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்… அவர்களைச் சத்தியப்பாதையில் வழிநடத்தவில்லையென்றால் அதற்காக அல்லாஹ் கூறும் தண்டனையைக் கேட்கும்போது இதயம் நடுங்குகிறது. பயத்தால் தலை சுற்றுகிறது.
”நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின குணமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.” (அத்தஹ்ரீம் 66:6)
முஸ்லிம் தமது குடும்பத்தை வழிநடத்துவதில் முழுமையான வெற்றி பெறும்போதுதான் பெண் மீது தமக்கிருக்கும் நிர்வகிக்கும் உரிமையை இஸ்லாம் விரும்பியபடி நிலைநாட்டியவராவார். முஸ்லிம் கணவர் கடின இதயமும், கீறிக் கிழிக்கும் நாவும், அடக்குமுறையும் கொண்ட பிடிவாதக்காரராக இருக்கக் கூடாது. ஏனென்றால், இது அறியாமைக்கால ஆண்மையாகும். இஸ்லாமில் ஆண்மை என்பது முற்றிலும் இதுவல்ல.
இஸ்லாமில் ஆண்மையின் இலக்கணம் என்னவென்றால், வலிமை, நேசம், உயர்குணம், சிறிய தவறுகளை மறந்து மன்னித்தல், அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பில் மிக உறுதியாக இருத்தல், அல்லாஹ்வின் கட்டளைகளைக் குடும்ப உறுப்பினர் அனைவர் மீதும் சமமாகப் பேணுதல், நன்மையின்பால் அழைத்துச் செல்வது, வீண் விரயமும் கஞ்சத்தனமும் இல்லாத கொடைத்தன்மை, இம்மை மறுமையின் கடமைகளை ஆழ்ந்து அறிதல், முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் எப்படியிருக்க வேண்டுமென்பதை விளங்கியிருத்தல். இவையே இஸ்லாம் விரும்பும் உண்மை முஸ்லிமின் தன்மைகளாகும்.