2 – கஅபாவை இடிக்க வரும் கயவர் கூட்டம்!
உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் படையொன்று கஅபாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வரும். அப்படையினர் பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் நிலை கொண்டிருக்கும் பொழுது அப்படையின் முதலாமவரும் இறுதியானவரும் -அனைவரும் பூமியினுள் விழுங்கப்பட்டு விடுவார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் – அனைவரும் பூமியினுள் எப்படி விழுங்கப் படுவார்கள்? அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் அந்தப் படையில் சேராத சாமானியர்களும் இருப்பார்களே என்று! அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் – அனைவரும் பூமியினுள் விழுங்கப்படத்தான் செய்வார்கள். பின்னர் மறுமை நாளில் அவரவரின் நிய்யத் – எண்ணத்திற்கு ஏற்ப எழுப்பப்படுவார்கள்’ (நூல் : புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
கஅபா என்பது திருமக்கா நகரிலுள்ள தொன்மையானதோர் இறையாலயம் ஆகும். மனிதர்கள் இறைவனை வழிபடுவதற்காக உலகில் முதன் முதலில் கட்டியெழுப்பப்பட்ட மஸ்ஜித் – பள்ளிவாசல் இதுவே! உலக முஸ்லிம்கள் அனைவரும் இதனை முன்னோக்கியே அல்லாஹ்வை தொழுது வருகிறார்கள். மேலும் ஆண்டு தோறும் இந்த ஆலயத்திற்கு நேரில் சென்று ஹஜ் எனும் புனிதக் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க இறையாலயத்தை இடித்துத் தகர்க்க இறுதிக் காலத்தில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அது முறியடிக்கப்படுவதோடு அதை மேற்கொள்ளும் கயவர் கூட்டம் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறது இந்நபிமொழி.
இந்த கஅபா ஆலயத்தை இப்ராஹீம் நபியவர்களும் அவர்களின் இன்னுயிர் மைந்தர் இஸ்மாயீல் நபி (அலை) அவர்களும் கட்டினார்கள். அவ்விருவரும் கஅபாவின் அடித்தளத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி முழுமையாகக்கட்டி முடித்தபொழுது இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சினார்கள்:
‘எங்கள் இறைவனே! எங்களுடைய இந்தப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே எல்லாம் செவியுறுபவன்., எல்லாம் அறிபவன்’ (2:127)
இத்தகைய சிறப்புமிக்க புனித கஅபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் அதனை இடிப்பதற்கான தீய முயற்சி முன்னொரு சந்தர்ப்பத்தில் நடை பெற்றதுண்டு. யமன் தேசத்தின் அப்ரஹா என்ற மன்னன் கஅபா ஆலயத்தை இடித்துத் தகர்ப்பதற்குத் திட்டமிட்டுப் பெரும் அளவில் படை திரட்டிக் கொண்டு வந்தான். அந்தப் படைமுன்னே பிரமாண்டமான யானை ஒன்று தலைமை வகித்து வந்தது. அநீதியிழைக்க நாடிவந்த அப்ரஹாவின் ஆனைப்படை மக்காநகரில் நுழைந்து கஅபா ஆலயத்தை நோக்கி நெருங்கி வந்தது. அல் முஃகம்மஸ் என்ற இடத்தை அடைந்தபோது – அந்தப் படைக்கு முன்னால் பவனி வந்துகொண்டிருந்த யானை கீழே படுத்து விட்டது. தொடர்ந்து முன்னேறிச் செல்லவில்லை.
கஅபாவை நோக்கிச் செல்லுமாறு எப்படியெல்லாமோ அதை உசுப்பிப் பார்த்தார்கள். அப்ரஹாவின் கூலிப்படையினர். ஊஹூம் …! யானை தன் இடத்தை விட்டு ஓரடி கூட நகரவில்லை! ஆனால் யமன் தேசத்தை நோக்கித் திரும்பிச் செல்லும்போது யானை எழுந்தோடுகிறது, எல்லோருக்கும் முன்னால்!
இது தொடர்பான – இதேபோன்ற ஆச்சரியமான நிகழ்ச்சி ஒன்று ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்தது. அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். திடீரென அது கீழே படுத்துக் கொண்டது. இதனைக் கண்ட நபித்தோழர்கள் – காரணம் எதுவுமின்றி ஒட்டகம் கீழே படுத்துக் கொண்டது! காரணம் எதுவுமின்றி ஒட்டகம் கீழே படுத்துக் கொண்டது! என்று கூறினார்கள். சிலர் அந்த ஒட்டகத்தை உசுப்பி எழுப்பவும் அடித்துத் துன்புறுத்தவும் முனைந்தார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நமது ஒட்டகம் காரணமில்லாமல் கீழே படுக்கவில்லை. அப்படிச் செய்வது அதன் வழக்கமுமில்லை!’
மேலும் சொன்னார்கள்: நமது ஒட்டகம் காரணமில்லாமல் கீழே உட்காரவில்லை. (கஅபாவை இடிக்க வந்த அப்ரஹா மன்னன் படைதிரட்டி வந்தபொழுது) அந்த யானையைத் தடுத்து நிறுதிய இறைவன்தான் இப்பொழுது இந்த ஒட்டகத்தையும் தடுத்து வைத்துள்ளான்’
‘என் உயிர் எந்த இறைவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! குறைஷிகள் எந்த ஒரு சமாதானத் திட்டத்தை என்னிடம் கேட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறாத வகையில் அது இருக்க வேண்டும்’ (நூல்: புகாரி)
-ஒட்டகம் கீழே உட்கார்ந்தது குறித்து நபியவர்கள் இவ்வாறு கூறியதன் கருத்து என்னவெனில், அந்த சந்தர்ப்பத்தில் குறைஷிகளுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். போர் தவிர்க்கப்பட வேண்டும் என்று இறைவன் உணர்த்துகிறான். அதற்காகவே ஒட்டகத்தை தடுத்து வைத்து விட்டான் என்பதாகும். – அவ்வாறே அன்று ஹுதைபிய்யா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- ஹுதைபிய்யாவின் வரலாற்றில் ஒட்டகத்தை இறைவன் தடுத்து வைத்தது, குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்திட!
- மக்காவின் வரலாற்றில் யானையைத் தடுத்து வைத்தது, கஅபா ஆலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட!
ஆம்! யானை எழுந்திட மறுத்தபொழுது அப்ரஹா மன்னனும் அவனுடைய கூலிப்படையினரும் அவ்விடத்திலேயே தடைபட்டு நின்றனர். அப்பொழுது அவர்கள்மீது பறவைக் கூட்டங்களை அல்லாஹ் அனுப்பினான். அவை தத்தம் கால்களில் கற்களைச் சுமந்து வந்து அநீதியாளனாகிய அப்ரஹா மீதும் அவனுடைய படைபட்டாளத்தின் மீதும் அவற்றை எறிந்தன. அந்தக் கற்கள் அவர்களின் உச்சந்தலையைத் தாக்கி உடலைத் துளைத்துக் கொண்டு பின் துவாரத்ததின் வழியாக வெளியேறின! இவ்வாறாக அவர்களின் உடல்களைச் சிதைத்துச் சின்னாப் பின்னமாக்கி விட்டான், இறைவன். குர்ஆன் குறிப்பிடுவது போன்று!
பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கி விட்டான்’ (105 : 5)
அரபிக் கவிஞர் உமைய்யா பின் ஸல்த் என்பார் பாடுகிறார்:
‘இறைவன் அந்த யானையை
அல்முஃகம்மஸில் தடுத்தான் – அது
தவழ ஆரம்பித்தது.
குதிங்கால்கள் வெட்டப்பட்டது போன்றானது’
– இவ்வாறாக கெடுமதி கொண்ட அப்ரஹாவின் தீய சூழ்ச்சியில் இருந்து தனது ஆலயத்தை அல்லாஹ் பாதுகாத்தான்.
புனித கஅபாவில் யார்-எப்பொழுது எவ்வித அநீதி இழைக்க நாடினாலும் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘எவர்கள் இந்தப் பள்ளிவாசலில் நேர்மை தவறிக் கொடுமை இழைக்க நாடுகிறார்களோ அத்தகையவர்களுக்கு நாம் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்’ (22 : 25)
– இவ்வாறுதான் இறுதிக் காலத்தில் கெடுமதி கொண்ட கயவர் கூட்டம் ஒன்று கஅபாவை இடிக்க வரும். அப்பொழுது அனைவரையும் பூமி விழுங்கிவிடும். அவர்கள் தங்கியிருக்கும் மைதானத்தில் வியாபாரம் செய்ய வந்தவர்களும் அழிந்துபோவர்! வேடிக்கை பார்க்க வந்தர்களும் தப்பிக்க முடியாது! – எனும் வாசகங்களிலிருந்து, மக்கள் கூட்டம் கடலென அங்கு திரண்டிருக்கும் என்று தெரிய வருகிறது!
நபியவர்கள் இவ்வாறு முன்னறிவிப்புச் செய்தபொழுது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு சந்தேகம். அந்த மைதானத்தில் குழுமியிருக்கும் எல்லோருமே தண்டனைக்கு ஆளாவார்கள் என்றால் நிரபராதிகளும் அதில் சிக்கிக் கொள்வார்களே! அவர்களையும் தண்டிக்க வேண்டியது வருமே! தீயோரைத் தண்டிக்க வேண்டியதுதான். நிரபராதிகளைத் தண்டிப்பது எப்படி நியாயம் ஆகும் என்பதுதான் அந்தச் சந்தேகம்!
நபியவர்கள் சொன்ன விளக்கம் இதுதான்: அங்கு கூடியிருக்கும் எல்லோரையும் பூமி விழுங்கும்பொழுது நிரபராதிகளும் அதில் சிக்கத்தான் வேண்டியது வரும். ஆனால் மறுமையில் எழுப்பப்படுவது அவரவரின் நிய்யத் – எண்ணத்தின்படி அமையும்! நிரபராதிகள் எனில் தண்டனை கிடையாது!
இந்த நபிமொழி வழங்கும் படிப்பினை இதுதான்: அசத்தியவாதிகளுடன் யார் யாரெல்லாம் சேர்ந்திருக்கிறார்களோ- அநீதி புரிய, அக்கிரமம் செய்யத் துணைபோகிறார்களோ அவர்கள் அதற்கான தண்டனையின் பொழுதும் உடன் இருந்துதான் ஆகவேண்டும். தீயோரைத் தீண்டும் தண்டனை எல்லோரையும் சூழ்ந்து கொள்ளும். யாரையும் விட்டு வைக்காது.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
‘உங்களில் அநீதி இழைத்தோரை மட்டும் பிடிப்பதோடு நின்று விடாத குழப்பத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ (8 : 25)
அறிவிப்பாளர் அறிமுகம் – ஆயிஷா (ரலி) அவர்கள்
நபி(ஸல்)அவர்களின் மனைவியும் அபூபக்ர்(ரலி) அவர்களின் மகளாருமான ஆயிஷா (ரலி)அவர்கள், நபித்துவ நான்காம் ஆண்டு பிறந்தார்கள். இவர்கள் சிறுமியாக இருந்தபொழுதே இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆறு வயதின் போது இவர்களை நபியவர்கள் திருமணம் முடித்து ஒன்பது வயதின் போது வீடு கூடினார்கள். நபியவர்கள் மரணம் அடைந்தபொழுது இவர்களுக்கு பதினெட்டு வயது. அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் வாழ்ந்த ஆயிஷா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 57 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள். அவர்களின் ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தியது அபூஹுரைரா (ரலி) அவர்கள்! ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்து 1210 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேள்விகள்
1) கஅபா எங்கு உள்ளது? அதன் சிறப்பு என்ன?
2)அப்ரஹாவும் அவனுடைய கூலிப்படையினரும் தோற்றது எப்படி?
3) கஅபாவை இடிக்கவரும் கயவர்க் கூட்டம் தண்டிக்கப்படுவார்கள் என்று நபியவர்கள் சொன்னபோது ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் என்ன? அதன்பதில் என்ன?
4) இந்த நபிமொழி தரும் படிப்பினை என்ன?
5) ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றி சுருக்கமாக விளக்கி எழுதவும்.
6) ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி நீ அறிந்திருப்பதென்ன?