ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-4)

4 – நல்லெண்ணமும் நற்கூலியும்

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். நபியவர்கள் கூறினார்கள்: சிலபேர் (நம்முடன் புறப்பட இயலாமல்) மதீனாவில் உள்ளனர். நீங்கள் எந்த ஒரு பாதையில் நடந்தாலும் எந்த ஓர் ஓடையைக் கடந்தாலும் அவர்கள் உங்களுடன் இல்லாமல் இல்லை. நோய் அவர்களைத் தடுத்து விட்டது, – மற்றோர் அறிவிப்பில்: கூலியில் உங்களுடன் அவர்கள் கூட்டாகாமல் இல்லை’ என உள்ளது.

இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் பதிவு செய்துள்ள அனஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘நாங்கள் தபூக் யுத்தத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொஞ்சம் பேர் நம்முடன் வர இயலாமல் மதீனாவில் உள்ளனர். அவர்களும் நம்முடன் உள்ள நிலையிலேயே தவிர நாம் எந்த ஒரு கணவாயிலும் எந்த ஓர் ஓடையிலும் நடந்து செல்வதில்லை. அவர்களைத் தக்க காரணம் தடுத்து விட்டது’

தெளிவுரை

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரோமானியர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காகப் புறப்பட்டிருந்தார்கள். இதற்கு தபூக் யுத்தம் என்று பெயர். நோய், முதுமை போன்ற காரணத்தாலும் வாகன வசதியின்மையாலும் முஸ்லிம்கள் சிலர் மதீனாவிலேயே தங்கி விட்டனர். ஆனால் அவர்களின் உள்ளத்தில் வாய்மை இருந்தது. அதிமுக்கியமான இந்தப் போரில் நம்மால் பங்கேற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது! ஆரம்பத்தில் பலர் நபியவர்களின் சமூகம் வந்து-போருக்குப் புறப்படுவதற்காக, இரவலாக வாகனம் தந்து உதவுமாறு வேண்டி நின்றனர். சிலருக்குத்தான் நபியவர்களால் வாகனம் வழங்க முடிந்தது. வாகனம் கிடைக்காதவர்களோ அழுதுகொண்டே திரும்பிச் சென்றார்கள். இத்தகைய வாய்மையான முஸ்லிம்களை நினைவுகூர்ந்தே நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறினார்கள். தபூக்கில் இருந்து திரும்பும் வழியில்!

இந்த நபிமொழியின் கருத்து இதுதான்: ஒரு மனிதன் நல்ல அமல் ஒன்றை-பணியைச் செய்ய வேண்டுமென நாடினான். பிறகு ஏதேனும் தடை ஏற்பட்டு அதைச் செய்ய இயலவில்லை என்றால் அதற்கான கூலி அவனுக்கு உண்டு. அதாவது, ஒரு நல்ல பணியைச் செய்திட நிய்யத் – எண்ணம் வைத்தான் எனும் வகையில் அவன் பெயரில் நற்கூலி பதிவு செய்யப்படும்.

ஆனால் முன்னரே அந்த அமலை செய்து வருவது அவனுக்கு வழக்கமாக இருந்து-அதைச் செய்ய இயலாவண்ணம் தற்போது தடை ஏற்பட்டு விட்டது என்றால் அந்த அமலைச் செய்ததற்கான முழுக் கூலியுமே அவனுக்குக் கிடைக்கும்.

ஏனெனில் மற்றொரு தடவை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் அடியான் நோயுற்று விட்டாலோ பயணம் புறப்பட்டு விட்டாலோ – முன்னர் ஆரோக்கியமாக ஊரில் தங்கியிருந்த பொழுது அவன் செய்து வந்த அமல்களின் கூலி அவன் பெயரில் எழுதப்படும்’ (நூல்: புகாரி)

எடுத்துக்காட்டாக, ஒருவன் எல்லாத் தொழுகைகளையும் பள்ளிவாசல் சென்று ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவது வழக்கம். ஆனால் ஒரு பொழுது அயர்ந்து தூங்கி விட்டான். அல்லது நோயுற்று விட்டான். அதனால் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள இயலவில்லையானால் – ஜமாஅத் தொழுகைக்கான முழுக்கூலியும் -எவ்விதக் குறைவுமின்றி அவன் பெயரில் எழுதப்படும்.

இதேபோல் ஸுன்னத் தொழுகைகளை நிறைவேற்றுவது அவனது வழக்கம். ஆனால் ஒருபோது ஏதோ காரணத்தால் அவற்றை விடவேண்டியதாயிற்று என்றால் ஸுன்னத் தொழுகைக்கான முழுக்கூலியும் – எவ்விதக் குறைவுமின்றி அவன் பெயரில் எழுதப்படும்!

ஆனால் முன்னர் அதனைச் செய்யும் வழக்கம் இல்லையாயின் தற்பொழுது நிய்யத்-எண்ணம் வைத்ததற்கான கூலி மட்டும் அவன் பெயரில் எழுதப்படும். நபியவர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று இதற்கு ஆதாரமாக உள்ளது.

ஒருதடவை ஏழைத் தோழர்கள் சிலரின் உள்ளத்தில் ஓர் எண்ணம் பிறந்தது. நம்முடைய செல்வந்த சகோதரர்கள் அதிக அளவு தானதர்மங்கள் செய்கிறார்கள். நற்பணிகளுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். அடிமைகளை விலைக்கு வாங்கி விடுதலை செய்கிறார்கள்! நமக்கும் இறைவன் செல்வத்தை வழங்கினால் நாமும் இவ்வாறு செய்யலாமே! அதிக நற்கூலிகளைப் பெறலாமே என்கிற நல்லார்வம் எழுந்தது.

நபி(ஸல்) அவர்களிடம் வந்து கேட்டனர்: அல்லாஹ்வின் தூதரே! செல்வம் படைத்தவர்கள் நற்கூலியையும் நிலையான மறுமைப் பேறுகளையும் அடைவதில் எங்களை முந்தி விட்டனரே!

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு ஒன்றை அறிவித்துத் தரட்டுமா? அதனை நீங்கள் செயல்படுத்தினால் உங்களை முந்திச் சென்றவர்களை நீங்கள் அடைந்து விடுவீர்கள். பின்னர் வருபவர்களில் நீங்கள் செயல்பட்டது போன்று செயல்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் உங்களை வந்து சேர்ந்திட முடியாது! நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸுப்ஹானல்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹு அக்பர் என்று 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவையும் சொல்லி வாருங்கள்.

– அவ்வாறே அந்த ஏழை முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வந்தார்கள். இதனைச் செல்வந்தர்கள் அறிந்தபொழுது அவர்களும் அதைப்போன்று செய்யலானார்கள்.

அதனால் அந்த ஏழை முஸ்லிம்கள் மீண்டும் நபியவர்களிடம் வந்து சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை செல்வந்தர்களான எங்கள் சகோதரர்கள் கேள்விப்பட்டார்கள். பிறகு அவர்களும் அவ்வாறு செய்யத் தொடங்கி விட்டார்களே!

அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் நாடுபவர்களுக்கு அதனை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருட்கொடையாளன். (நூல்: புகாரி, முஸ்லிம்)

– அந்தச் செல்வந்தர்கள் செய்த தர்மங்களுக்கான கூலியை ஏழைகளாகிய நீங்களும் பெற்று விட்டீர்கள் என்று நபியவர்கள் சொல்லவில்லை. ஆனால் அமல் செய்யவேண்டுமென நிய்யத் – எண்ணம் வைத்ததற்கான கூலி நிச்சயம் அவர்களுக்கு உண்டு.

இன்னொரு நபிமொழியில் இதனை இன்னும் தெளிவாகக் காணமுடிகி றது. அதில் வருகிறது: இருமனிதர்கள் உள்ளனர். ஒருவருக்கு அல்லாஹ் அதிக செல்வம் வழங்கியுள்ளான். அதனை அவர் நன்மையான காரியங்களில் செலவு செய்கிறார். இன்னொருவர் ஏழை. அவர் எண்ணுகிறார்: எனக்கும் இவ்வாறு அதிகச் செல்வங்கள் இருந்தால் இந்த மனிதரைப் போல் நானும் நற்பணிகளுக்கு வாரி வழங்குவேனே! என்று கூறுகிறார். இந்த இரு மனிதர்களைப் பற்றி நபியவர்கள் கூறினார்கள்:

‘இந்த (ஏழை) மனிதர் தனது எண்ணத்தின் பிரதிபலனைப் பெறுகிறார். இருவரும் சமமான கூலியைப் பெறுகின்றனர்’ (நூல்: திர்மிதி)

அதாவது, நிய்யத் – எண்ணத்திற்கான கூலியில் இருவரும் சமமானவர்களே! ஆனால் செயலைப் பொறுத்து அதனை வழக்கமாக செய்து வந்தால்தான் -இடையே ஏதேனும் தடை ஏற்பட்டாலும் செயல்பட்டதற்கான கூலி எழுதப்படும்.

மேற்சொன்ன நபிமொழியிலிருந்து மேலும் தெரியவருகிறது: அல்லாஹ்வின் பாதையில் போர்புரியச் செல்பவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடைக்கும் எட்டுக்கும் கூலி உண்டு.

நீங்கள் எந்த ஒருபாதையில் நடந்தாலும் எந்த ஓர் ஓடையைக் கடந்தாலும் அவர்கள் உங்களுடன் இல்லாமல் இல்லை. எனும் வாசகம் இந்த உண்மையைத் தான் உணர்த்துகிறது. குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

‘அது எதற்காகவெனில், அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் களைப்பின் எந்தத் துன்பத்தை அவர்கள் சகித்துக் கொண்டாலும் மேலும் சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பாக இருக்கும் பாதையில் எந்த ஓர் அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும் மேலும் பகைவனிடம் (அவனது சத்திய விரோதப் போக்கிற்காக) எந்தப் பழியை அவர்கள் வாங்கினாலும் அவை ஒவ்வொன்றிற்கும் பகரமாக அவர்களின் பெயரில் நன்மை எழுதப் படாமல் விடப்பட மாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நற்பணியாற்றுவோரின் கூலியை வீணாக்குவதில்லை. மேலும் அவர்கள் (அல்லாஹ்வின் பாதையில்) சிறிய அளவிலோ பெரிய அளவிலோ செலவு செய்யும் எதுவும் மேலும் (ஜிஹாதுக்காக) ஏதேனும் பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்வதும் அவர்களின் பெயரில் பதிவு செய்யப்படாமல் விடப்படவே மாட்டாது. எதற்காகவெனில் இவர்கள் செய்து கொண்டிருந்த அமல்களில் சிறப்பானவற்றிற்கான கூலியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காகத்தான்’ (9 : 119-120)

இதுபோன்று தான் தொழுகையிலும். உளூ செய்துகொண்டு தொழுகைக்காகப் பள்ளிவாசல் நோக்கிச் செல்பவனின் ஒவ்வோர் எட்டுக்கும் பகரமாக ஓர் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது. ஒருபாவம் மன்னிக்கப்படுகிறது.

இவ்வாறாக- ஒருநற்செயலைச் செய்வதற்கும் நற்கூலி உண்டு. அதற்குத் தூண்டுதலாகவும் துணையாகவும் உள்ள காரணிகளுக்கும் நற்கூலி உண்டு எனும் ஷரீஅத்தின் நியதி அல்லாஹ்வின் பெரும் அருட்கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.

அறிவிப்பாளர் அறிமுகம் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்

அபூ அப்துல்லாஹ் என்பது இவர்களது குறிப்புப் பெயர். மதீனாவாழ் அன்ஸாரிகளில் ஒருவராகிய இவர்கள், நபியவர்களின் அன்புக்குரியவர்கள். ஸஹாபாக்களிலே இவர்கள்தாம் வயதால் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிக்ஹ் சட்ட நுணுக்கங்களில் திறமைபெற்றுத் திகழ்ந்த ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தலைமைப் பதவிக்குரிய தகுதியும் சிறப்பும் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு 91 வது வயதில் மரணம் அடைந்தார்கள்!

கேள்விகள்

1) இந்த நபிமொழியில், ‘கூலியில் உங்களுடன் அவர்கள் கூட்டாகாமல் இல்லை” எனும் வாசகத்தின் கருத்து என்ன?

2) தபூக் யுத்தத்தில் முஸ்லிம்கள் சிலர் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விட்டதற்கு என்ன காரணம்?

3) ஏழை நபித்தோழர்கள் சிலர் நபியவர்களிடம் வந்து என்ன கோரிக்கை வைத்தார்கள்? நபி(ஸல்) அவர்கள் அதற்கு என்ன பதில் சொன்னார்கள்? அந்நிகழ்ச்சியில் நமக்குள்ள படிப்பினைகள் என்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.