நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்பு.

1536. ஒருவர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச்சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3416 அபூஹுரைரா (ரலி).

1537. நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (‘யூனுஸ் இப்னு மத்தா – மத்தாவின் மகன் யூனுஸ்’ என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3413 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்பு.

நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்.

1532. ‘இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை’ என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ‘கல்லே! என்னுடைய ஆடை!’ என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை’ என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.”அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்” என அபூஹுரைரா (ரலி) கூறினார்.

புஹாரி : 278 அபூஹுரைரா (ரலி).

1533. உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா (அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், ‘இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்’ என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, ‘நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையைவைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்” என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா (அலை) ‘இறைவா! அதற்குப் பிறகு?’ எனக் கேட்டதும் அல்லாஹ், ‘பிறகு மரணம் தான்’ என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் ‘அப்படியானால் இப்பொழுதே (தயார்)’ எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும் புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா (அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 1339 அபூஹூரைரா (ரலி).

1534. ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா (அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

புஹாரி : 2411 அபூஹூரைரா (ரலி).

1535. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா?’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், ‘தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

புஹாரி : 2412 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்.

போர் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன?

கிறிஸ்தவ மதத்தைப் போன்றே இஸ்லாமும் போர் புரிவதை அனுமதித்திருக்கின்றது. ஆனால், அந்தப்போர் சுய பாதுகாப்புக்காகவோ அல்லது தமது மார்க்கத்தைப் பாதுகாக்கவோ அல்லது தங்களின் தாய் மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கப்பட்டதற்குப் பதிலடி தரக்கூடியதாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனை!

அதுமட்டுமல்ல, போரின்போது கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளையும் இஸ்லாம் முன்வைக்கின்றது: குடிமக்களை துன்புறுத்துவது, தாவரங்கள், நெற்பயிர்கள், தானிய இருப்புகளை அழிப்பது போன்ற ஈனத்தனமான செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது.

மேலும், நல்ல மனிதர்கள் சத்தியத்திற்காக தங்கள் வாழ்வை பணயம் வைத்துப் போராடாவிடில், உலகில் அசத்தியம் மேலோங்கி விடும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

திருக்குர்ஆன் பறைசாற்றுகின்றது:

மேலும், உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:190)

மேலும் கூறுகின்றது: Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on போர் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன?

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்.

1529. இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி’யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3356 அபூஹுரைரா (ரலி).

1530. (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு” என்று கேட்போது அல்லாஹ்? ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்றுகேட்டான். அவர்கள், ‘ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடை வதற்காக இப்படிக் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3372 அபூஹுரைரா (ரலி).

1531. இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத்தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், ‘இப்படிச் செய்தது யார்?’ என்று கேட்டபோது,’ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது” என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களை யார் அந்தப் பெண் எனக்கேட்க இப்ராஹீம் (அலை)அவர்கள் இவள் என் சகோதரி என்று கூறி ஸாரா (அலை) அவர்களிடமும் அவனிடம் அவ்வாறே பதிலளிக்க கூறினார். அவன் ஸாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்), ‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், ‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக்கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு, ஹாஜிரா அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து,’என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.'(அபூஹுரைரா (ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.

புஹாரி : 3358 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்.

நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.

1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி).

1527. ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, ‘நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் – என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.

புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி).

1528. மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், ‘நீ திருடினாயா” என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘இல்லை எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!” என்று பதிலளித்தான். உடனே ஈஸா (அலை) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்தேன்” என்று கூறினார்கள்.

புஹாரி :3444 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான், கேள்வி பதில் | Tagged , , , , , | Comments Off on நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.

ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?

கேள்வி எண்: 96. ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.

1521. ‘தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்னார்” என்று கூறினார்கள். அப்போதுதான் ‘இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி:4621 அனஸ் (ரலி).

1523. நபித்தோழர்கள் (சிலர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, ‘(நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை” என்றார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தம்தம் ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?’ என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஹுதாஃபா (தாம் உன் தந்தை)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்த சுவருக்கு அப்பால் கண்டேன்” என்றார்கள்.

புஹாரி :6362 அனஸ் (ரலி).

1524. ‘நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் ‘நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். ‘யார் என்னுடைய தந்தை?’ என்று கேட்டதற்குவர்கள் ‘ஹுதாபாதான் உம்முடைய தந்தை’ என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து ‘என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க ‘உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம்
என்பவர் தாம்’ என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்’ என்றார்கள்”.

புஹாரி : 92 அபூ மூஸா (ரலி).

1525. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3589 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.

1519. மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2359 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி).

1520 ‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றபின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

புஹாரி :2360 ஸுபைர்(ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.

1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்றார்கள்.

புஹாரி :6101 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.

மரணம் குறித்து முஸ்லிம்களின் கண்ணோட்டம் என்ன?

மரணத்துக்குப் பின் வரவுள்ள நிரந்தர மறுமை உலகத்துக்காகத் தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதற்கான செயற்களமே இந்த உலகம் என்று யூதர்கள், கிறிஸ்தவர்களைப் போன்றே முஸ்லிம்களும் நம்புகின்றனர்.

இறுதித் தீர்ப்பு நாள், மீண்டும் உயிர்தெழுதல், சுவனம்-நரகம் ஆகியன இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்களில் அடங்கும். ஒரு முஸ்லிம் – அவர் ஆணாக இருப்பினும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி மரணமடைந்து விட்டால் முதலில் அவர்கள் குளிப்பாட்டப்படுகின்றார்கள். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் அவர்களைக் குளிப்பாடுவது வழக்கம். பின்னர் தூய வெள்ளை ஆடை உடுத்தப்பட்டு, அவர்களுக்காக ஜனாஸா தொழுகை எனும் மரணித்தோருக்கான தொழுகை எளிய முறையில் நடத்தப்படுகின்றது. மரணித்த அதேநாளில் அவர்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றார்கள்.

மரணித்த தமது உறவினருக்காக தாம் புரியும் இறுதிச் சேவையாக இதனை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்களைக் குறித்த நினைவுகளை இப்பூமியில் நிலைத்திருக்க வைக்கும் ஒரு வாய்ப்பாக அந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

(இந்த உலகில்) ஒருவர் புரிந்த மூன்று செயல்கள் அவருடைய மரணத்துக்குப் பின்னரும் அவருக்கு உதவி புரிந்து கொண்டிருக்கும்: “அவர் புரிந்த தர்மம், (பிறருக்கு) அவர் கற்றுத்தந்த அறிவு, நல்லவர்களான அவருடைய பிள்ளைகள் அவருக்காகப் புரியும் பிரார்த்தனை!”

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | 1 Comment