போர் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன?

கிறிஸ்தவ மதத்தைப் போன்றே இஸ்லாமும் போர் புரிவதை அனுமதித்திருக்கின்றது. ஆனால், அந்தப்போர் சுய பாதுகாப்புக்காகவோ அல்லது தமது மார்க்கத்தைப் பாதுகாக்கவோ அல்லது தங்களின் தாய் மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கப்பட்டதற்குப் பதிலடி தரக்கூடியதாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனை!

அதுமட்டுமல்ல, போரின்போது கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளையும் இஸ்லாம் முன்வைக்கின்றது: குடிமக்களை துன்புறுத்துவது, தாவரங்கள், நெற்பயிர்கள், தானிய இருப்புகளை அழிப்பது போன்ற ஈனத்தனமான செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது.

மேலும், நல்ல மனிதர்கள் சத்தியத்திற்காக தங்கள் வாழ்வை பணயம் வைத்துப் போராடாவிடில், உலகில் அசத்தியம் மேலோங்கி விடும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

திருக்குர்ஆன் பறைசாற்றுகின்றது:

மேலும், உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:190)

மேலும் கூறுகின்றது:
(நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகி விடும். இன்னும் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்! (அல்குர்ஆன்: 8:61)

எனவே, போர் என்பது இறுதி ஆயுதமே! மேலும், மீள முடியாத – போரைத் தவிர்க்க முடியாததொரு கடினச்சூழலில் மட்டுமே போர் ஆகுமானதாகின்றது. இது இறைச்சட்டம்! (இதில் எந்த உரிமை மீறலும் இல்லை)

அடுத்து ஜிஹாத்! மொழியியல் வழக்கில் இச்சொல்லுக்கு முதல் பொருள் – போராடுதல்! முஸ்லிம்களைப் பொறுத்தவரை இருவகையான ஜிஹாத் இருப்பதாக நம்புகின்றார்கள்.

ஒன்று: இறைவழியில் போராடுதல்! மற்றொன்று தாம் கொண்டுள்ள இறை நம்பிக்கைக்கு மாற்றமான வரம்பு மீறிய நாட்டங்கள், இறுமாப்பு கொள்ளும் வகையிலான விருப்பங்கள் ஆகிய ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆத்ம திருப்தியை பெறுதல்! இதுவும் ஒருவகை ஜிஹாத்!

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.