1532. ‘இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை’ என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ‘கல்லே! என்னுடைய ஆடை!’ என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை’ என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.”அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்” என அபூஹுரைரா (ரலி) கூறினார்.
1533. உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா (அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், ‘இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்’ என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, ‘நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையைவைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்” என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா (அலை) ‘இறைவா! அதற்குப் பிறகு?’ எனக் கேட்டதும் அல்லாஹ், ‘பிறகு மரணம் தான்’ என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் ‘அப்படியானால் இப்பொழுதே (தயார்)’ எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும் புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா (அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள்.
1534. ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா (அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.
1535. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா?’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், ‘தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.