நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.

1519. மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2359 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி).

1520 ‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றபின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

புஹாரி :2360 ஸுபைர்(ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , . Bookmark the permalink.