தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்.

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.

புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).

1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), ‘நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்க, ஸுபைர் (ரலி), ‘நான்” என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்” என்று கூறினார்கள்.

புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)

1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி – ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு… அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, ‘என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள், ‘என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, ‘என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்’ எனக் கூறினார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்.

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).

1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதை கேட்டேன்.

புஹாரி : 2905 அலீ (ரலி).

1562. ”(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்’ எனச்) கூறினார்கள்” என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.

புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

உணவைக் குறித்து….

இஸ்லாம் அனுமதிக்கும் உணவு குறித்த சட்டம், பழங்கால மற்றும் கிறிஸ்தவ-யூத மதங்களைப் பின்பற்றும் உணவு குறித்த சட்டங்களை விட்டும் முற்றிலும் மாறுபட்டது. மனித நலனுக்கு முற்றிலும் உகந்தது. குறிப்பாக (உடலுக்குக் கேடான) பன்றி இறைச்சி, மது போன்ற போதைப் பொருட்கள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:

“உங்கள் உடலுக்கும்
உங்கள் மீது
உரிமை இருக்கிறது”

உணவை வீண் விரயம் செய்யாமல் இருத்தல், ஆரோக்கியமான நல்வாழ்வைப் பேணுதல் ஆகியன மார்க்கக் கடமைகளின் வரம்புக்குள் அடங்குகின்றன.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on உணவைக் குறித்து….

அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1556. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), ‘குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 4416 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1557. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, ‘அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்” என்று கூறக் கேட்டேன். உடனே, நபித் தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர் பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீ எங்கே?’ என்று கேட்டார்கள். ‘அவருக்குக் கண்வலி” என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ (ரலி), ‘நம்மைப்போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்றார்கள்.

புஹாரி : 2942 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

1558. அலீ (ரலி) கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. ‘நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ, ‘அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்” என்றோ அல்லது, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ சொல்லிவிட்டு, ‘அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், ‘இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

1559. நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (ரலி)யை காணவில்லை. உன் பெரிய தந்தையின் மகன் எங்கே? என்று ஃபாத்திமா (ரலி)விடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. கோபித்துக் கொண்டு சென்று விட்டார். என்னிடம் தங்கவில்லை என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர் எங்கே என்று பார்த்து வாரும்! என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது அலி (ரலி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டு மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்! எனக் கூறினார்கள்.

புஹாரி : 441 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1554. நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று கூறினார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (ஆற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3693 அபூமூஸா (ரலி).

1555. நான் என் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர். நான் (நபி (ஸல்) – அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச்சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), ‘இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(நானே) அபூபக்ர் (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (நபி – ஸல் – அவர்களிடம்) சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், ‘உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்” என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப்பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), ‘அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்” என்று சொல்லிக் கொண்டேன்.” இன்னார்’ என்று அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி) கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டே” என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். வந்தவர், ‘(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்) என்று சொன்னார். நான், ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, ‘இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் சென்று, ‘உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். ‘அல்லாஹ் இன்னாருக்கு (என்சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான் என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான்,’யார் அது?’ என்று கேட்டேன். அவர், ‘(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தார். உடனே, ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்.அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், ‘உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்)அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:

ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்), ‘நான் (நபி – ஸல் அவர்களும், அபூபக்ர் (ரலி ) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3674பூமூஸா அல் அஷ்அரி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்

காஃபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?

கேள்வி எண்: 97. காஃபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும்  இரு பெண்மணிகள் யாவர்? Continue reading

Posted in கேள்வி பதில் | 2 Comments

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1545. உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், ‘உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, ‘(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி – ஸல் – அவர்கள் மற்றும் அபூபக்ர் – ரலி – அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.

புஹாரி : 3685 இப்னு அப்பாஸ் (ரலி).


1546. ‘நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு ‘மார்க்கம்’ ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”.

புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) .

1547. ‘நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘கல்வி’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி: 82 இப்னு உமர் (ரலி).

1548. நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை.. இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3664 அபூஹுரைரா (ரலி).

1549. கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி… அல்லது இரண்டு வாளிகள்… தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3682 இப்னு உமர் (ரலி).

1550. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், ‘(கனவில்) ‘நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்’ அல்லது ‘சொர்க்கத்திற்குச் சென்றேன்’ அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், ‘இது யாருடையது?’ என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), ‘இது உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது” என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப் (ரலி), ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள்.

புஹாரி :5226 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1551. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோதுஅவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.

புஹாரி : 3242 அபூஹூரைரா (ரலி).

1552. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே” என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.

புஹாரி :3294 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1553. (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) எழுந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!” என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்” என்று கூறிவிட்டு, ‘(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான். நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இவர் நயவஞ்சகராயிற்றே!” என்று கூறினார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்” எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.

புஹாரி : 4670 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1540. நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘இந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!”என்று கேட்டார்கள்.

புஹாரி :3653 அபூபக்கர் (ரலி).

1541. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), ‘அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), ‘தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், ‘இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், ‘தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்’ என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று கூறினார்கள் – இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் – அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3904 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1542. நபி (ஸல்) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3662 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).

1543. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, ‘நான் வந்து தங்களைக் காண(முடிய)வில்லையென்றால்..?’ என்று, – நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :3659 ஜூபைர் பின்முத்இம் (ரலி).


1544. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?’ என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, ‘இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது’ .இதைக் கேட்ட மக்கள், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,’நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

புஹாரி 3471 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

கிள்ர் (அலை)அவர்கள் சிறப்பு.

1539. (இறைவனின்) தூதராகிய மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ‘மக்களில் பேரறிஞர் யார்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறி விட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்’ என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் ‘என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?’என்று கேட்டார்கள். ‘கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒருமீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா (அலை) தம் பணியாளரிடம், ‘இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?’ என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும்வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் ‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விட்டேன்’ என்றார். ‘(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்’ என்று மூஸா (அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்தவர்களாய் (வந்த வழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் ‘உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?’ என்று கேட்டார்கள். ‘நான்தான் மூஸா’ என்றார்கள். ‘இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?’ என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்!’ என்று கூறினார்கள். ‘உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?’ என்று கேட்டார்கள். கிள்ரு (அலை) அவர்கள், ‘நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!’ என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள். ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது.
அப்போது கிள்று அவர்கள், ‘மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்து விடும்’ என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் ‘நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?’ என்று கேட்டார்கள். ‘மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்’ என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திருகி) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் ‘யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?’ என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் ‘மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாய்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்து விட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா (அலை) அவர்கள் ‘நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!’ என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், ‘இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவினையாகும்’ என்று கூறி விட்டார்கள். ”(இச்சம்பவத்தை) நபி (ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) ‘மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள்”.

புஹாரி : 122 உபை இப்னு கஹ்ஃப் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கிள்ர் (அலை)அவர்கள் சிறப்பு.

நபி யூஸூஃப் (அலை)அவர்களின் சிறப்பு.

1538. (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!” என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரையான) கரங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3353 அபூ ஹுரைரா(ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நபி யூஸூஃப் (அலை)அவர்களின் சிறப்பு.