தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்.

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.

புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).

1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), ‘நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்க, ஸுபைர் (ரலி), ‘நான்” என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்” என்று கூறினார்கள்.

புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)

1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி – ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு… அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, ‘என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள், ‘என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, ‘என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்’ எனக் கூறினார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , . Bookmark the permalink.