1622. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ‘ரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள்.
நபித்தோழர் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களின் சிறப்பு.
அபூஹுரைரா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1621. ‘அபூஹுரைரா (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே’ என்று நீங்கள் (குறையாகக்) கூறுகின்றீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா? தவறா? என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்மை) செல்வங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள். நான் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், ‘நான் என் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை தம் மேல்துண்டை விரித்து வைத்திருந்து பிறகு அதைச் சுருட்டி (நெஞ்சோடு சேர்த்து அணைத்து)க் கொள்கிறவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்” என்றார்கள். உடனே நான் என் மீதிருந்த மேலாடையை (எடுத்து) விரித்தேன். நபி (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! நான் நபியவர்களிடமிருந்து கேட்ட எதையும் (அன்றிலிருந்து) மறந்ததில்லை.
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1616. மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர் (ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலி), ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), ‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.
1617. நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.
1618. (ஒரு முறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.
1619. (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, ‘(அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள்” என்று பாடினார்கள். அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா (ரலி), ‘ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்”) என்று கூறினார்கள்.(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) கூறினார்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்), ‘அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு” என்று (திருக்குர்ஆன் 24:11ல்) கூறுகிறானே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது?’ என்று கூறிவிட்டு, ‘அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக அல்லது இறைத்தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவிபாடுபவராக இருந்தார் என்று கூறினார்கள்.
1620. (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசைபாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), ‘மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்” என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.
1614. நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், ‘இவர் சொர்க்கவாசி” என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, ‘மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்” என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.
1615. நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், ‘இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார். அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், ‘இவர் சொர்க்கவாசி’ என்று கூறினர்” என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் – அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் – அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், ‘இதில் ஏறு” என்று சொல்லப்பட்டது. நான், ‘என்னால் இயலாதே” என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்தி விட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், ‘நன்கு பற்றிப் பிடித்துக் கொள்” என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, ‘அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறங்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) தாம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சிறப்பு.
1612. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘அனஸ் தங்களின் சேவகர், (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.
1613. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிள் சிறப்புகள்
1611. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூற ‘அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1610. ‘நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் ‘இந்தத் தண்ணீரை யார் வைத்தது?’ என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே ‘இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்”.
நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளது- என்று இறைவன் கூறும் வசனம் எது?
கேள்வி எண்: 100. நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக விட்டு வைக்கப்படடுள்ளது- என்று இறைவன் கூறும் வசனம் எது? Continue reading
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
1609. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே ‘யமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு.
1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், ‘இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, ‘வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்’ என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!” என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, ‘அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை” என்று கூறினார். அபூதர், ‘நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை” என்று கூறிவிட்டு, பயண உணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூதர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ – ரலி – அவர்கள் அபூதர்ரிடம், ‘வீட்டுக்கு வாருங்கள்” என்று சொல்ல) அபூதர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். ‘தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?’ என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியம் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), ‘நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்” என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி), ‘அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்” என்று கூறினார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலி அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி), நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘நீங்கள் உங்கள் (கிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அபூதர், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்” என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். ‘உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ் (ரலி) அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள்.