அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.

1614. நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், ‘இவர் சொர்க்கவாசி” என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, ‘மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்” என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி : 3812 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1615. நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், ‘இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார். அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், ‘இவர் சொர்க்கவாசி’ என்று கூறினர்” என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் – அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் – அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், ‘இதில் ஏறு” என்று சொல்லப்பட்டது. நான், ‘என்னால் இயலாதே” என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்தி விட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், ‘நன்கு பற்றிப் பிடித்துக் கொள்” என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, ‘அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறங்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) தாம்.

புஹாரி : 3813 கைஸ் பின் உபாத் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , , . Bookmark the permalink.