1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
1609. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே ‘யமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.