1649. என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.
மனிதனின் வாழ்நாள் அதிகபட்ச அளவு.
1648. ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, ‘இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்’ என்று கூறினார்கள்” .
நபித்தோழர்களின் சிறப்பு.
1645. மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்கிற ஒரு காலம் வரும் அப்போது, ‘நபி (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு, இன்னொரு காலம் வரும். (அப்போதும் புனிதப் போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும். பிறகு இன்னுமொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் புனிதப் போருக்காகச் செல்வார்கள்.) அப்போது, ‘நபித் தோழர்களின் தோழருடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1646. மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்ராஹீம் நகயீ (ரஹ்), ‘(சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித் தோழர்கள்), ‘அஷ்ஹது பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டு சாட்சியம் அளிக்கிறேன்’ என்றோ, ‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ கூறினால் கடிந்து (கண்டித்து) வந்தார்கள்” என்று கூறினார்.
1647. உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), ‘இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார்(வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
குறைஷிப் பெண்களின் சிறப்பு.
1643. குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள் .இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பின்பு, ‘இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை” என்று கூறினார்கள்.
1644. ”இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?’ என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், ‘என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!” என்று பதிலளித்தார்கள்.
மனிதனை நாசப்படுகுழியில் தள்ளும் தீச்செயல்கள்.
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது. இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 6:70)
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்,பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 7:33)
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்? (அல்குர்ஆன்: 7:147)
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்ககாதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (அல்குர்ஆன்: 10:12)
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் – பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் – அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். (அல்குர்ஆன்: 10:30)
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 11:15)
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழமையாகக் கொடுப்பான் – நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 11:111)
நிச்சயமாக குர்ஆன் – அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் – நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான். (அல்குர்ஆன்: 13:31)
எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும். (அல்குர்ஆன்: 14:18)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் – ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் – ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் – இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல்குர்ஆன்: 16:63)
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். (அல்குர்ஆன்: 16:112)
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் – திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். (அல்குர்ஆன்: 17:13)
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன்: 17:36)
(அல்லாஹ்வாகிய) அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 21:23)
அன்ஸாரிகளில் சிறந்தோர்.
1633. ”அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனக் காண்கிறேன்” என்று கூறினார்கள். அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்” என்று சொல்லப்பட்டது.
1634. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். (‘வேண்டாம்’ என நான் மறுத்த போது) ‘அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை பார்த்திருக்கிறேன்; எனவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை” என்று ஜரீர் (ரலி) கூறினார்.
1635. அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! கிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
1636. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, ‘கிஃபார்’ குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ‘உஸைய்யா’ குலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது” என்று கூறினார்கள்.
1637. குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
1638. அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலங்களில் சிலரும் – அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும் அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1639. அக்ராஉ இப்னு ஹாபிஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர்களான அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தாம்” என்று கூறினார்கள். ‘மற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்’ என்றும் (நபியவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அபீ யஅகூப் சந்தேகத்துடன் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், ‘பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத், மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய குலங்களை விட அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி), ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (அஸ்லம், கிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தினரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத் மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய) அவர்களை விடச் சிறந்தவர்களே” என்று கூறினார்கள்.
1640. துஃபல் இப்னு அம்ர் அத்தவ்ª (ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) ‘தவ்ஸ்’ குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, ‘தவ்ஸ் குலத்தார் அழியட்டும்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
1641. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், ‘அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்” என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், ‘இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்” என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி” என்று கூறினார்கள்.
1642. மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அன்ஸாரிகளின் சிறப்புகள்.
1628. ”(உஹதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்…” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், ‘அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்” என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.
1629. அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.
1630. (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்” ஒரு மணவிழாவிலிருந்து வருவதை” என்று சொன்னதாக நினைக்கிறேன் – உடனே நின்று கொண்டு, ‘இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
1631. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று இரண்டு முறை கூறினார்கள்.
1632. ”அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரட்டை ஹிஜ்ரத் வாசிகள்.
1627. நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா (ரஹ்) கூறினார்: ”என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்” என்றோ ‘ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம் என்றோ (என் தந்தை அபூ மூஸா (ரலி)) கூறினார்கள். நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கி விட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, ‘உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்” என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, ‘இவர் யார்?’ என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். ‘(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்” என்று ஹஃப்ஸா (ரலி), ‘இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘ஆம்” என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி), ‘உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்… அல்லது பூமியில்… இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவும் மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்” என்று கூறினார்கள். ‘அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்” என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு” என்று கூறினார்கள்.
மறுமை நாள் (Day Of Resurrection)
மறுமை நாள்
(Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.
வெளியீடு:
இஸ்லாமிய நிலையம் (Islam Presentation Committee)
குவைத்
முன்னுரை
மறுமை நாள் நம்பிக்கை அல்குர்ஆனில் மிக அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாக அது கொள்ளப்படுகின்றது. அல்லாஹ் நீதியாளன், யாருக்கும் அவன் அநியாயம் செய்வதில்லை என்ற இறை பண்பை விளக்குவதாக மறுமை வாழ்வு அமைகிறது. அத்தோடு அல்லாஹ் ஞானமும், அறிவும் கொண்டவன். அவன் செயல்களுக்கு அர்த்தமிருக்கும். வீணாக, விளையாட்டாக அவன் எதனையும் செய்வதில்லை என்ற கருத்தையும் மறுமை வாழ்வின் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மறுமை வாழ்வு என்று ஒன்றில்லாவிட்டால் இந்த வாழ்வுக்குப் பொருள் இருக்காது. வீணானதாகவும், அர்த்தமற்றதாகவுமே இந்த வாழ்வைக் கொள்ள வேண்டி வரும். இந்த வகையில் தான் மறுமை நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் விளைவாக அமைகிறது.
நபிமார்களின் அடிப்படைப் பணி நன்மாராயம் கூறுவதும், எச்சரிக்கை செய்வதுமாகும் என அல்குர்ஆன் அடிக்கடி சொல்கிறது. நன்மாராயங்களில் முதன்மையானது மறுமை நாளில் சிறந்த வாழ்வு கிடைப்பதாக நன்மாராயம் சொல்வதாகும். எச்சரித்தலில் நரக வேதனை பற்றி எச்சரித்தல் முதன்மை பெறுகிறது. அந்த மகிழ்ச்சியான சுக வாழ்வு அல்லது பயங்கர வேதனைகள் நிறைந்த துயர வாழ்வு நிரந்தரமானதாகும். நன்மாராயமும், எச்சரித்தலும் இவ்வகையிலும் பாரிய முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கருத்துப்படி மறுமை நம்பிக்கை ஈமானின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. அந்த நம்பிக்கையை உள்ளத்தில் பலப்படுத்திக் கொள்ளலும், மறுமை வாழ்வை நினைவு கூர்ந்தவாறு உலக வாழ்வைக் கொண்டு செல்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
இந்த வகையில் மறுஅமை நாளை விளக்கும் பல நூல்கள் குறிப்பாக, அல்குர்ஆனோடு (அரபு மொழி தெரியாததன் காரணமாக) நேரடித் தொடர்பு வைக்க முடியாத முஸ்லிம்களுக்கு மறுமை நாளின் பல்வேறு பகுதிகளையும் விளக்கும் வகையில் வெளிவருவது அவசியமாகும். அல்குர்ஆன் மறுமை நாள் குறித்து விளக்கும் வசனங்கள் ஊடாக மனித உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பாரியது. அல்குர்ஆனோடு நேரடி தொடர்புள்ளவன் மறுமை நாளின் காட்சிகளை விட்டு தன் உள்ளத்தை விலக்கிக் கொள்வது கடினம். அப்படியொரு கடும் மனத்தாக்கத்தை அல்குர்ஆன் மனித உள்ளத்தில் ஏற்படுத்தி, அன்றாட வாழ்வில் மறுமை நாளின் நினைவோடு முஸ்லிமை வாழ வைக்க முயல்கிறது.
ஸஹாபாக்களின் சமூகம் உன்னதமிக்க சமூகமாக மாறியமைக்கு இந்த மனத்தாக்கம் முக்கிய காரணிகளில் ஒன்று. மறுமை நாள் பற்றிய மிக ஆழ்ந்த எண்ணம் கொண்டவன் உலக வாழ்வு பற்றி பொறுப்புணர்வு மிகக் கொண்டவனாக மாறுகிறான். இந்த வாழ்வை அர்த்தமும், பொருளும் கொண்டதாக மாற்றிக் கொள்ள மிகுந்த முனைப்புடன் தொழிற்படுவான். ஒரு நிமிடத்தையேனும் வீணாகக் கழிக்க அவன் விரும்புவதில்லை. இத்தகைய தனி மனிதர்களைக் கொண்ட சமூகம் உன்னத சமூகமாக மாறுவதில் சந்தேகமில்லை. ஸஹாபாக்களின் சமூகத்தைப் பொறுத்தவரையில் நடந்தது இதுவேயாகும்.
இந்த வகையில் அல்குர்ஆன் மறுமை நாள் பற்றி விவரிக்கும் அமைப்பை ஓரளவுக்காவது அடுத்த மொழிகளில் கொண்டு வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் ஓர் எளிய ஆரம்ப முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறுமை நாள் குறித்த ஓர் அறிமுகமாக மட்டுமே இது கொள்ளப்பட முடியும். இதனைத் தொடர்ந்து அதன் பல்வேறு அம்சங்களையும் விளக்கும் நூல்கள் வெளிவர வேண்டும்.
குவைத் இஸ்லாமிய நிலையம் (Islam Presentation Committee) நிர்வாகத்தினர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோரைக் கவனத்திற் கொண்டு மறுமை நாள் பற்றிய ஒரு நூலை ஆக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர். அதனை வெளியிடும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றனர். அல்லாஹ் அவர்களுக்கு உரிய கூலியை வழங்குவானாக!
இந்த நூலை வாசித்து, தமது கருத்துக்களையும் சொல்லி, அதனை வெளியிடுவதற்குப் பொருத்தமாக அமையும் வரையிலான அனைத்து வேலைகளையும் சகோதரர்களான அஷ்ஷெய்க் ஏ.சீ. ஷாஜஹான் நளீமீ, அஷ்ஷெய்க் என்.எம்.எம். ஹுசைன் இஸ்லாஹி, மற்றும் (தமிழ் நாட்டைச் சேர்ந்த) மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., ஆகியோர் செய்தனர். இவர்களுடன் சகோதரர்களான அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அப்பாஸ் நளீமீ, அஷ்ஷெய்க் பீ.எம். ஸுல்பி இஸ்லாஹி மற்றும் எம்.ஏ. அப்துல் முஸவ்விர் Bsc., ஆகியோரும் இதற்குத் தூண்டுதலாக இருந்தனர். அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்! அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக!!!
இறையருளை எதிர்பார்க்கும் சகோதரன்
எம்.ஏ.எம். மன்ஸூர்
இஸ்லாமிய நிலையம், குவைத்
அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்.
1623. மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே ‘ஜிஃரானா’ என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் – அவர்களிடம்) வந்து, ‘நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘நற்செய்தியைப் பெற்றுக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லி விட்டீர்களே!” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். ‘இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், ‘நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் பிறகு (எங்களிடம்), ‘இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, ‘உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, ‘(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.
1624. நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) ‘அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) ‘துரைத் இப்னு ஸிம்மா’வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, ‘என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?’ என்று கேட்டேன். ‘என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!” என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, ‘(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?’ என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), ‘உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு, (”என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு” என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. ‘என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு” என்று அபூ ஆமிர் (ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர்(ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, ‘இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், ‘எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) கூறினார்: (நபி – ஸல் – அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.
1625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும்போது அவர்கள் குர்ஆன் ஒதும் ஒசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்கா விட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார் அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றார் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.
1626. அஷ்அரீ குலத்தினரின் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.