1628. ”(உஹதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்…” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், ‘அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்” என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.
1629. அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.
1630. (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்” ஒரு மணவிழாவிலிருந்து வருவதை” என்று சொன்னதாக நினைக்கிறேன் – உடனே நின்று கொண்டு, ‘இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
1631. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று இரண்டு முறை கூறினார்கள்.
1632. ”அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.