1645. மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்கிற ஒரு காலம் வரும் அப்போது, ‘நபி (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு, இன்னொரு காலம் வரும். (அப்போதும் புனிதப் போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும். பிறகு இன்னுமொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் புனிதப் போருக்காகச் செல்வார்கள்.) அப்போது, ‘நபித் தோழர்களின் தோழருடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1646. மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்ராஹீம் நகயீ (ரஹ்), ‘(சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித் தோழர்கள்), ‘அஷ்ஹது பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டு சாட்சியம் அளிக்கிறேன்’ என்றோ, ‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ கூறினால் கடிந்து (கண்டித்து) வந்தார்கள்” என்று கூறினார்.
1647. உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), ‘இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார்(வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.