1669. நாங்கள் ‘ஒரு போரில்’ அல்லது ‘ஒரு படையில்’ இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி ‘அன்சாரிகளே! (உதவுங்கள்.)” என்று கூறினார். அந்த முஹாஜிர் ‘முஹாஜிர்களே! உதவுங்கள்!” என்று கூறினார். இந்தப் பேச்சை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, ‘இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள்.அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு ‘இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்” என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) எழுந்து, ‘என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.
அநீதி இழைப்பவனுக்கும் உதவி புரி.
அநீதி தவிர்.
1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்” என்று கூறிவிட்டு, பிறகு, ‘மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்” எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே.
1661. இறைத்தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.
1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்” என்று கூறினார்கள். நான், ‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை” என்று கூறினார்கள்.
1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி…
1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொறாமை கொள்ளாதே.
1658. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1659. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறவுகளைப் பேணுதல்.
1655. அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘என்ன?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்”என்று கூறியது. ‘உன்னை(உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), ‘நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
1656. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1657. ”ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமை நாள் (அத்தியாயம்-1)
மறுமை நாள் அவசியமா?
பூமி என்ற இச்சிறிய கோளில் மனித ஆயுள் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலம் மட்டுமே! ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசையோ அவனை விட்டு பிரிவதே இல்லை. நிரந்தரமாக அழியாது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனது உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட இயற்கை உணர்வு.
அவன் உள்ளத்தில் உள்ள ஆசைகளோ எல்லையற்றவை. நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகள், இலட்சியங்களோடு அவன் வாழ்கிறான். சொந்தங்களையும், உறவுகளையும், தோழர்களையும் உருவாக்கிக் கொள்கிறான். அவர்களை ஆழ்ந்து விரும்புகிறான். அவர்களை நிரந்தமாக பிரிய அவன் விரும்புவதில்லை.
வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித இயல்பாக இருக்க……..
எல்லையற்ற ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும்,
இலட்சியங்களையும் சுமந்திருக்க……………
பிரிய முடியாத உறவும் தோழமையும் இருக்க………
அவன் பிரிந்து செல்கிறான்……………….
மனிதன் மரணித்து விடுகிறான்.
இப்பிரிவுக்குப் பிறகு ஒரு சந்திப்பு இருக்காதா?…….
பிரிந்தவர்கள் ஒன்று கூடவே முடியாது போய்விடுமோ!!
அந்த இலட்சியங்களும், ஆசைகளும் அர்த்தமற்று அழிந்து
போவதுதானா?! இது ஒன்று!
மனிதன் நன்மையையும், தீமையையும், நீதியையும், அநியாயத்தையும் புரிந்து கொள்கிறான். இது மனித இயற்கை. அந்த நன்மைக்கு நன்மையும், தீமைக்குத் தண்டனையும், அநியாயத்திற்குக் கூலியும் கிடைக்க வேண்டும் என்று ஆழ்ந்து விரும்புகிறான், எதிர்பார்க்கிறான்.
தீமை வாழ்வதை, நன்மை ஒடுங்கிப் போவதை, நீதி பின் தள்ளப்படுவதை, அநியாயம் கோலோச்சுவதை அவனால் சகிக்க முடிவதில்லை.
எனினும் இந்தப் பூமியில் நன்மையும், தீமையும், அநியாயமும் அவற்றுக்கான கூலியை பெறுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் தீமை மாலை போட்டு வரவேற்கப்படுகிறது. அநியாயம் சிம்மாசனமேறி ஆள்கிறது.
இதுதான் முடிவா? தீமையும், அநியாயமும் அவற்றிற்கான தண்டனையைப் பெற மாட்டாதா?
நன்மையும், நீதியும் அவற்றிற்கான வெகுமதியைப் பெற முடியாது போய்விடுமா?!
மனித உள்ளத்தின் ஆழ்ந்த அங்கலாய்ப்பு இது. இது இரண்டாவது!!
மனிதன் இப்பிரபஞ்சத்தின் உயர்ந்த சிருஷ்டி. இதனை அவனால் சாதாரணமாகவே உணர முடிகிறது. அவனால் ஏனைய எல்லா உயிரினங்களையும், பொருட்களையும் பணிய வைத்துக் முடிகிறது. தனது நலன்களுக்கு பயன் படுத்திக் கொள்ள முடிகிறது.
முழுப் பிரபஞ்சமும் அவன் நலனுக்காக இயங்குவது போன்றே தெரிகிறது. அப்படியிருக்க, அவன் முடிவு ஒரு சாதாரண தாவரத்தைப் போல், ஒரு சின்னப் பூச்சி, ஒரு அற்ப மிருகத்தின்முடிவு போல் அமைய முடியுமா?
எல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போய் விடும்…….
இதுதான் முடிவா?! Continue reading
பெற்றோருக்குப் பணிவிடையில் முன்னுரிமை.
1654. மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!” என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அக்குழந்தை, ‘(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், ‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், ‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது – பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, ‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.
பெற்றோருக்குப் பரிவு காட்டுதல்.
பரிவு, நல்லுறவு, நல்லொழுக்கம்.
1652. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
புஹாரி : 5971 அபூஹூரைரா (ரலி).
1653. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாயும் தந்தையும் உயிருடனிருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம் (உயிருடனிருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)” என்று கூறினார்கள்.
புஹாரி :3004 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
பெர்ஸிய மக்களின் சிறப்பு. (பாரசீகம்)
1650. நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிஸீ (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.
1651. மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.