அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்.

1623. மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே ‘ஜிஃரானா’ என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் – அவர்களிடம்) வந்து, ‘நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘நற்செய்தியைப் பெற்றுக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லி விட்டீர்களே!” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். ‘இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், ‘நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் பிறகு (எங்களிடம்), ‘இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, ‘உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, ‘(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.

புஹாரி : 4328 அபூமூஸா (ரலி).

1624. நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) ‘அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) ‘துரைத் இப்னு ஸிம்மா’வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, ‘என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?’ என்று கேட்டேன். ‘என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!” என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, ‘(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?’ என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), ‘உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு, (”என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு” என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. ‘என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு” என்று அபூ ஆமிர் (ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர்(ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, ‘இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், ‘எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) கூறினார்: (நபி – ஸல் – அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

புஹாரி : 4323 அபூமூஸா (ரலி).

1625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும்போது அவர்கள் குர்ஆன் ஒதும் ஒசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்கா விட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார் அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றார் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.

புஹாரி : 4232 அபூமூஸா (ரலி).

1626. அஷ்அரீ குலத்தினரின் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2486 அபூமூஸா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , . Bookmark the permalink.