1713. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறை நினைவு.
மறுமை நாளின் அடையாளங்கள்.
1709. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .
1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1711. நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.
1712. ‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
மறுமை நாள் (அத்தியாயம்-3)
மறுமை நம்பிக்கையும், உலக வாழ்வும்
அல்லாஹ் அறிவும், ஞானமும் உள்ளவன். நீதியாளன். எனவே இந்த உலகோடு வாழ்வை முடித்து விடாது, இன்னுமொரு உலகையும் அமைத்திருக்கிறான். இது தெளிவு. எனினும் முரண்பாடுகளும், குழப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிரைந்த இந்த உலக வாழ்வுக்குஎன்ன பொருள்? அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? இவ்விஷயத்தை மிக அழகான முறையில் அல்குர்ஆன் விளக்குகிறது. மனித வாழ்வுக்கு மிகச் சரியானதொரு அர்த்தத்தை அல்குர்ஆன் இங்கு கொடுக்கிறது.
வாழ்வு ஒரு சோதனை. அதாவது இந்த உலகை அல்லாஹ் ஒரு பரீட்சைக்களமாக ஆக்கினான். சோதனைக்கான அவ்வளவு ஒழுங்குகளையும் இங்கு செய்து வைத்தான். களத்தில் பரீட்சை எழுதுபவர்களாக மனிதர்களை அமர்த்தினான். மனிதன் அவன் ஏழையாக, பணக்காரனாக, நோயாளியாக, சுகதேகியாக, அரசனாக, குடிமகனாக, அறிஞனாக, அறிவில் குறைந்தவனாக எந்த நிலையில் இருந்தபோதும் நற்செயல்கள் புரிய வேண்டும். இதுதான் அவனுக்கான சோதனை. இச்சோதனையின் வெற்றி தோல்விகள் மறுமையில் தீர்மானிக்கப்பட்டு கூலிகள் வழங்கப்படும். எனவே இந்த உலகம் அடிப்படையில் கூலிக்குரியதல்ல. செயல்களுக்கு இங்கு விளைவுகள் இருக்கும். ஆனால் அவைகள் பூரணமாகக் கிடைக்கும் கூலிகள் அல்ல. அங்கு தான் பூரண கூலி கிடைக்கும். எனவே இந்த வாழ்வு என்பது வாழ்வின் ஒரு கட்டமே. சரியாகச் சொன்னால் வாழ்வுக்கான ஒரு பரிசோதனை மட்டுமேயாகும்.
உலக வாழ்வுக்கான சரியான கொள்கை இதுவே. வாழ்வு பற்றிய இக்கொள்கையே பிரபஞ்சத்தின் பொது அமைப்போடும் ஒத்துப் போவதாக அமைந்துள்ளது. இப்பிரபஞ்சம் அற்புதமானதொரு சமநிலையில் இயங்கி வருகிறது. சக்திகள், பொருட்களுக்கிடையிலான இச்சமநிலைத் தன்மையே இப்பிரபஞ்சத்தை சீராக இயங்க வைக்கிறது. மனிதன் எங்கு ஆராய்ந்தாலும், எவ்வளவு தான் ஆராய்ந்தாலும் இவ்வுண்மையைக் கண்டு பிரமித்துப் போக முடியுமேயன்றி குறை கண்டு பிடிக்க முடியாது. அந்த வகையில் இப்பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கும் மனித வாழ்வும் அச்சமநிலை கொண்டதாக அமைய வேண்டும். வாழ்வு ஒரு சோதனை என்பதுவே அந்த சமநிலைத் தன்மையை வாழ்வுக்கும் கொடுக்கிறது. இல்லாவிட்டால் நன்மை, தீமை, நீதி, அநீதி, உலகில் காணப்படும் வறுமை, செல்வம், அறிவு, அறிவின்மை, நோய், சுகவாழ்வு போன்ற பல்வேறு முரண்பாடுகள் வாழ்வை அர்த்தமற்றதாக சமநிலையற்ற முரண்பாடானதாகவே காட்டும். இக்கருத்தை ஸூரா முல்கின் ஆரம்ப வசனங்கள் அழகாகச் சொல்கின்றன: Continue reading
யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுதல்.
1708. ”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
முத்தஸாபிஹாத் வசனங்கள் பற்றி….
1705. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை” எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினார்கள்.
1706. உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1707. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தைகள் இயற்கை மார்க்கத்தில் பிறக்கின்றன.
1702. ”ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.
1703. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனக் கூறினார்கள்.
1704. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் ‘அவர்களைப் படைத்த அல்லாஹ், அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன்” எனக் கூறினார்கள்.
விபச்சாரத்தில் ஆதமின் மகனின் பங்கு.
1701. விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி ஆதம் (அலை) நபி மூஸா (அலை) தர்க்கம்.
1700. (இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்” என்றார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் ‘மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; என மூன்று முறை ‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
தாயின் கருவறையில் சிசுவின் விதி நிர்ணயிக்கப் படுதல்.
1695. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்)என்று கூறினார்கள்.
1696. ‘அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், ‘யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது ‘அலக்’ (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது’ என்று கூறி வருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
1697. நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, ‘உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. அது தீய நிலையுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை’ எனக் கூறினார்கள். உடனே ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?’ என்றதும், நபி (ஸல்) அவர்கள், ‘நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும்; தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்” என்று கூறிவிட்டு, ‘தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்…” என்ற (திருக்குர்ஆன் 92:5,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
1698. ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?’ எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் (தெரியும்)” என்றார்கள். அவர் ‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘ஒவ்வொருவரும் ‘எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது ‘எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
1699. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்றார்கள்.
அல்லாஹ் நேசிக்கும் அடியானை வானவர்கள் நேசிப்பர்.
1692. உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1693. கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர் ‘நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!” என்றார்கள்.
1694. ”(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)” என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்” என்று கூறினார்கள்.