1692. உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1693. கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர் ‘நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!” என்றார்கள்.
1694. ”(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)” என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்” என்று கூறினார்கள்.