1705. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை” எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினார்கள்.
1706. உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1707. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.