மறுமை நம்பிக்கையும், உலக வாழ்வும்
அல்லாஹ் அறிவும், ஞானமும் உள்ளவன். நீதியாளன். எனவே இந்த உலகோடு வாழ்வை முடித்து விடாது, இன்னுமொரு உலகையும் அமைத்திருக்கிறான். இது தெளிவு. எனினும் முரண்பாடுகளும், குழப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிரைந்த இந்த உலக வாழ்வுக்குஎன்ன பொருள்? அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? இவ்விஷயத்தை மிக அழகான முறையில் அல்குர்ஆன் விளக்குகிறது. மனித வாழ்வுக்கு மிகச் சரியானதொரு அர்த்தத்தை அல்குர்ஆன் இங்கு கொடுக்கிறது.
வாழ்வு ஒரு சோதனை. அதாவது இந்த உலகை அல்லாஹ் ஒரு பரீட்சைக்களமாக ஆக்கினான். சோதனைக்கான அவ்வளவு ஒழுங்குகளையும் இங்கு செய்து வைத்தான். களத்தில் பரீட்சை எழுதுபவர்களாக மனிதர்களை அமர்த்தினான். மனிதன் அவன் ஏழையாக, பணக்காரனாக, நோயாளியாக, சுகதேகியாக, அரசனாக, குடிமகனாக, அறிஞனாக, அறிவில் குறைந்தவனாக எந்த நிலையில் இருந்தபோதும் நற்செயல்கள் புரிய வேண்டும். இதுதான் அவனுக்கான சோதனை. இச்சோதனையின் வெற்றி தோல்விகள் மறுமையில் தீர்மானிக்கப்பட்டு கூலிகள் வழங்கப்படும். எனவே இந்த உலகம் அடிப்படையில் கூலிக்குரியதல்ல. செயல்களுக்கு இங்கு விளைவுகள் இருக்கும். ஆனால் அவைகள் பூரணமாகக் கிடைக்கும் கூலிகள் அல்ல. அங்கு தான் பூரண கூலி கிடைக்கும். எனவே இந்த வாழ்வு என்பது வாழ்வின் ஒரு கட்டமே. சரியாகச் சொன்னால் வாழ்வுக்கான ஒரு பரிசோதனை மட்டுமேயாகும்.
உலக வாழ்வுக்கான சரியான கொள்கை இதுவே. வாழ்வு பற்றிய இக்கொள்கையே பிரபஞ்சத்தின் பொது அமைப்போடும் ஒத்துப் போவதாக அமைந்துள்ளது. இப்பிரபஞ்சம் அற்புதமானதொரு சமநிலையில் இயங்கி வருகிறது. சக்திகள், பொருட்களுக்கிடையிலான இச்சமநிலைத் தன்மையே இப்பிரபஞ்சத்தை சீராக இயங்க வைக்கிறது. மனிதன் எங்கு ஆராய்ந்தாலும், எவ்வளவு தான் ஆராய்ந்தாலும் இவ்வுண்மையைக் கண்டு பிரமித்துப் போக முடியுமேயன்றி குறை கண்டு பிடிக்க முடியாது. அந்த வகையில் இப்பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கும் மனித வாழ்வும் அச்சமநிலை கொண்டதாக அமைய வேண்டும். வாழ்வு ஒரு சோதனை என்பதுவே அந்த சமநிலைத் தன்மையை வாழ்வுக்கும் கொடுக்கிறது. இல்லாவிட்டால் நன்மை, தீமை, நீதி, அநீதி, உலகில் காணப்படும் வறுமை, செல்வம், அறிவு, அறிவின்மை, நோய், சுகவாழ்வு போன்ற பல்வேறு முரண்பாடுகள் வாழ்வை அர்த்தமற்றதாக சமநிலையற்ற முரண்பாடானதாகவே காட்டும். இக்கருத்தை ஸூரா முல்கின் ஆரம்ப வசனங்கள் அழகாகச் சொல்கின்றன:
“அவன் உங்களில் யார் மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறார்களெனப் பரிசோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். அவன் யாவரையும் மிகைத்தவனாகவும், மிகவும் மன்னிப்பவனாகவும் உள்ளான். அவன் ஏழு வானங்களையும் தட்டுத்தட்டாகப் படைத்துள்ளான். அருளாளன் படைப்பில் எத்தகைய ஏற்றத்தாழ்வையும் நீ காண மாட்டாய். பார்வையை திருப்பிச் செலுத்திப்பார். ஏதும் ஓட்டைகளைக் காண்கிறாயா? திருப்பித் திருப்பிப் பார். பார்வை இழிவு பட்டதாக, இயலாமையுற்றதாக உன்னிடமே திரும்பி விடும்.” (ஸூரா முல்க்: 2-4)
இந்த வகையில் சோதனைக்கான எல்லா ஒழுங்குகளையும் இங்கே ஏற்படுத்தியுள்ளான். செயற் சுதந்திரமும், அறிவும், ஆன்மாவும், இச்சைகளும் கலந்த மனித அமைப்பு, கவர்ச்சி மிக்க உலகம், ஒரு குறிப்பிட்ட கால அளவே கொடுக்கப்பட்ட வாழ்க்கைச் சந்தர்ப்பம் மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள இவை அனைத்தும் சோதனைக்கான அடிப்படை விஷயங்களாகின்றன. இக்கருத்தை அல்குர்ஆன் கீழ்வரும் வசனங்களில் தருகின்றது:
“நாம் (செயற்சுதந்திரம்) என்ற பொறுப்பை வானங்கள், பூமி, மலைகள் என்பவற்றிடம் எடுத்துக் காட்டினோம். அதனை சுமக்க அவை மறுத்தன. அதனைப் பார்த்துப் பயந்தன. மனிதன் அதனைச் சுமந்து கொண்டான்.” (அஹ்ஜாப்: 72)
வானங்களும், பூமியும், மலைகளும் செயற்சுதந்திரத்தை சுமக்க மறுத்து விட்டன. எனவே இந்த சோதனை அவற்றுக்கு இல்லை. வெறுமனே வாழ்ந்து மனிதனுக்குப் பணி செய்து மடிவதே அவற்றின் விதியாயிற்று. ஆனால் மனிதன் அப்பொறுப்பை ஏற்றான். எனவே இப்பெரும் சோதனைக்கும் அவன் உட்பட்டான். இது சோதனைக்கான அடிப்படைத் தகுதியாகியது.
“அவர்களில் யார் மிகச் சிறந்த முறையில் செயற்படுகிறார்கள் என அவர்களை பரிசோதிப்பதற்காக பூமியில் உள்ளவற்றிற்கு நாம் அழகைக் கொடுத்தோம். (ஸூரா கஃப்: 7)
பூமி மிகுந்த கவர்ச்சியானது. மனிதனை முழுக்க தன்னுள்ளே வீழ்த்திவிட அது முயற்சி செய்யும். அப்போது மனிதன் நீதி வழுவாது, வரம்பு மீறாது, நன்மைகளே செய்து வாழ வேண்டும். அது அவனுக்கு பெரும் சோதனையாகியது. இதுவே சோதனைக்கான அடுத்த சாதனம்.
“அதற்கு அதன் தீமையையும், நல்ல தன்மையையும் உணர்த்தினான். அதனைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றியடைந்தான். பாவங்களால் அதனை மூடி விட்டவன் தோல்வியடைந்தான்.” (ஸூரா ஷம்ஸ்: 8-10)
உடல் இன்பங்கள் இயல்பானவை. அவையே தீமையின் பக்கம மனிதனை இழுத்துச் செல்பவை. நீதியையும், நன்மையையும் விரும்புவது மனித இயல்பு. இவ்விரு வகை இயல்பையும் கொண்டுள்ள மனிதன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி வெற்றியடைய வேண்டும். சோதனையாக அமைந்து விட்ட அடுத்த விஷயம் இதுவாகும்.
இவ்வாறு செயற்சுதந்திரம், உலகக் கவர்ச்சி, உடல் இன்பங்கள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அம்சங்களாக அமைந்து சோதனைக்கான அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. செயற்சுதந்திரமற்ற தாவரங்கள், மிருகங்கள் இந்த சோதனைக்கு உட்படுவதில்லை. செயற்சுதந்திரமோ, உடல் இன்பங்களோ, உலகக் கவர்ச்சிக்கு உட்படுவதோ அற்ற வானவர்களும் இந்த சோதனைக்கு உட்படுபவர்களல்ல. எனவே சோதனையின் அடிப்படை அம்சங்களாக இவை அமைகின்றன.
இவைத்தவிர ஒவ்வொரு மனிதனும் உலகில் அவன் பெரும் நிலை, பொறுப்பு, அந்தஸ்து என்ற பல வகையான அம்சங்களுக்கேற்ப மனிதனுக்கு மனிதன் சோதனையின் ஒழுங்கு வேறுபட்டு அமைய முடியும். அத்தோடு பெரும்பாலும் எல்லா மனிதர்களையும் பீடிக்கும் வாழ்க்கைக் கஷ்டங்களும் சோதனைப் பொருட்களாக அமைய முடியும். இக்கருத்தையும் அல்குர்ஆன் பல இடங்களில் விளக்கியுள்ளது. கீழே இக்கருத்தைக் காட்டும் சில வசனங்களை மட்டும் தருகிறோம்:
“உங்களுக்குத் தந்தவற்றில் உங்களை சோதிப்பதற்காக அவன் தான் பூமியில் உங்களை ஒருவர் பின் ஒருவராக வந்து நிர்வகிப்பவர்களாக ஆக்கி உங்களில் சிலரை விட சிலரை தரத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கியுள்ளான்.” (ஸூரா அன்ஆம்: 165)
“நிச்சயமாக நாம் உங்களை பயத்தாலும், பட்டினியாலும், செல்வத்தையும், ஆட்களையும், தானியங்களையும் குறைப்பதாலும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக.” (ஸூரா பகரா: 155)
“மனிதன் அவனை அவனது இரட்சகன் சோதித்து அவனைக் கண்ணியப்படுத்தி வாழ்க்கை வசதிகளைக் கொடுத்தால் எனது இரட்சகன் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்கிறான். அவனை சோதித்து வாழ்க்கை வசதிகளை வரையறுத்துக் கொடுத்தாலோ எனது இரட்சகன் என்னை இழிவு படுத்தி விட்டான் என்கிறான்.” (ஸூரா பஜ்ர்: 15,16)
இவ்வாறு செல்வம், வறுமை, சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள், வாழ்க்கையின் பல்வேறு துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் சோதனைகளாகின்றன. இவற்றை ஏற்று அவற்றிற்கான கடமைகளை சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதே இங்கு சோதனையாகின்றது.
எனவே மறுமை நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி. இவ்வுலக வாழ்வு ஒரு சோதனை என்ற இரு அடிப்படைகள் மீது எழும்புகிறது. இந்த வகையில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை மிகப்பெரும் அருளாளனாகவும் மிகுந்த நீதியாளனாகவும் காண்கிறான். மறுமை வாழ்வை இலக்காகக் கொண்டு இவ்வுலக வாழ்வை அவன் ஒழுங்குப் படுத்திக் கொள்கிறான்.
“சிருஷ்டிகளை அல்லாஹ்
எவ்வாறு ஆரம்பத்தில் படைத்தான்?
என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா?
அவ்வாறுதான் அவற்றை மீண்டும்
அவன் படைப்பான்.”
ஸூரா அல் அன்கபூத்: 19.
மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.