தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.

1728. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்” என்று கூறினார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, இருந்து கொண்டு, ‘லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் – அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது” என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!” என்று அழைத்தார்கள். ‘கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்” என்று கூறினார்கள். நான், ‘சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். (அந்த வார்த்தை,) ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது” என்று கூறினார்கள்.

புஹாரி : 4202 அபூமூஸா அல் அஷ்அரி (ரலி).

1729. என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது ‘இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :834 அபூபக்ர் அஸ்ஸித்திக் (ரலி).

1730. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க மாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறாய்!” என்று கூறுங்கள் என்றார்கள்.

புஹாரி : 7387 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

1731. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம மஸீஹுத் தஜ்ஜால், அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ
பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மிஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும், பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும்இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும் கடனிலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

புஹாரி : 6377 ஆயிஷா (ரலி).

1732. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மாமத்” என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

புஹாரி : 6367 அனஸ் (ரலி).

1733. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.

புஹாரி :6347 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.

திக்ரின் சிறப்புகள்.

1724. ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).

1725. ‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).

1726. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).

1727. இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on திக்ரின் சிறப்புகள்.

அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.

1723. நபி (ஸல்) அவர்கள் ‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

புஹாரி :6389 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.

அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.

1722. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனவான் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள். இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான்.

புஹாரி :6408 அபூ ஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.

அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன?

கேள்வி எண்: 103) அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன?

பதில்: சூரத்துல் அஃராப்-ல்  205 வது வசனத்தில் “(நபியே) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரக்க சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டிருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் என்று விளக்குகின்றான்.

திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருக்க நம்மில் பலர் அறியாமையினால் திக்ரு செய்கிறோம் என்று கூறிக் கொண்டு மார்க்கத்தில் இல்லாத  பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் காட்டுக் கூச்சலிட்டுக் கத்திக் கொண்டும் இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர். அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காடடித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் ஒருபடி மேலே போய், அல்லாஹ் என்ற அழகிய திருநாமத்தை ஆஹ் என்றும் அஹ் என்றும், ஹு என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதை கேலிக் கூத்தாக்குகின்றனர்.

அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விடடுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்-7:180)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்கவில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள். அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி), ஆதாரம்: புகாரி

எனவே அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விடடு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ்  காடடித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சோத்தருள அல்லாஹ் போதுமானவன். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன?

அல்லாஹ்வை நினைவு கூர்வதின் சிறப்பு.

1721. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on அல்லாஹ்வை நினைவு கூர்வதின் சிறப்பு.

அல்லாஹ்வைச் சந்திக்க நாடுவோரை….

1719. நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று கூறினார்கள்.

புஹாரி :6507 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி).

1720. அல்லாஹ்வைத் தரிசிக்க விரும்புகிறவரை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். எவர் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி :6508 அபூ மூஸா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அல்லாஹ்வைச் சந்திக்க நாடுவோரை….

நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.

1717. உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6351 அனஸ் (ரலி).

1718. நான் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது ‘மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் நான் மரணத்தை வேண்டிப் பிரார்த்தித்திருப்பேன்” என்று அவர்கள் கூறியதைச் செவியேற்றேன்.

புஹாரி : கைஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.

அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.

1715. நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6338 அனஸ் (ரலி).

1716. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப் படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6339 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.

அல்லாஹ்வின் திருநாமங்கள்.

1714. அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அல்லாஹ்வின் திருநாமங்கள்.