அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன?

கேள்வி எண்: 103) அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன?

பதில்: சூரத்துல் அஃராப்-ல்  205 வது வசனத்தில் “(நபியே) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரக்க சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டிருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் என்று விளக்குகின்றான்.

திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருக்க நம்மில் பலர் அறியாமையினால் திக்ரு செய்கிறோம் என்று கூறிக் கொண்டு மார்க்கத்தில் இல்லாத  பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் காட்டுக் கூச்சலிட்டுக் கத்திக் கொண்டும் இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர். அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காடடித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் ஒருபடி மேலே போய், அல்லாஹ் என்ற அழகிய திருநாமத்தை ஆஹ் என்றும் அஹ் என்றும், ஹு என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதை கேலிக் கூத்தாக்குகின்றனர்.

அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விடடுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்-7:180)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்கவில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள். அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி), ஆதாரம்: புகாரி

எனவே அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விடடு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ்  காடடித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சோத்தருள அல்லாஹ் போதுமானவன். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.