பெருநாள் தினத்தில் வீர விளையாட்டுகள்

512. புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். ‘அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்” என்று கூறினார்கள்.

புஹாரி :952 ஆயிஷா (ரலி)


513. ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து ‘நபி (ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை நோக்கி ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்றனர். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறிவிட்டனர். ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ ‘நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ‘அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது ‘உனக்குப் போதுமா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.

புஹாரி: 949 950 ஆயிஷா (ரலி)


514. (ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தியோப்பியர்கள்) நபி (ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உமரே! அவர்களை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி: 2901 அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பெருநாள் தினத்தில் வீர விளையாட்டுகள்

முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

‘முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’  என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்) Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

பெருநாள் தொழுகைகளில் மாதவிடாய்ப் பெண்கள்

511. ‘இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்து வருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்’ என்றும் கட்டளையிடப்பட்டோம்.

நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?’ எனக் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்”.

புஹாரி :351 உம்மு அதிய்யா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பெருநாள் தொழுகைகளில் மாதவிடாய்ப் பெண்கள்

இரு பெருநாள் தொழுகைகள்

505. நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் மக்களைத் தம் கைகளால் அமரச் செய்தது இன்றும் நான் பார்ப்பது போலுள்ளது. பிறகு ஆண்களை (வரிசையினூடே) பிளந்து கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். ‘நபியே உம்மிடம் இறைநம்பிக்கையுள்ள பெண்கள் உறுதி மொழி எடுக்க வரும் போது” (திருக்குர்ஆன் 60:12) என்ற வசனத்தை ஓதினார்கள். ஓதி முடித்துவிட்டு ‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். எவரும் விடையளிக்கவில்லை. ஒரு பெண் மட்டுமே ‘ஆம்’ என்றார். அவர் யாரென்று அறிவிப்பாளர் ஹஸனுக்குத் தெரியவில்லை – பிலால் தம் ஆடையை ஏந்தினார்.’வாருங்கள்! என் தாய் தந்தையர் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் வாருங்கள்!’ என்று பிலால் கூறினார். மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்.

புஹாரி :979 இப்னு அப்பாஸ் (ரலி)


506. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்திவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கிப் பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள்.

புஹாரி: 978 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


507. நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் தொழ பாங்கு சொல்லப்பட்டதில்லை.

புஹாரி: 960 இப்னு அப்பாஸ் (ரலி)

508. நபி (ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.

புஹாரி: 959 அதா (ரலி)


509. நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர்.

புஹாரி :இப்னு உமர் (ரலி)

510. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது களர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் à®®à¯
€à®¤à¯ ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் ‘நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது’ என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் ‘மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை’ எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.

புஹாரி : 956 அபூஸைது அல் குத்ரி (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இரு பெருநாள் தொழுகைகள்

அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..

ஈயைக் கூட..

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து (ஒரு ஈ) ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே. (அல்குர்ஆன் – 22:73)

அற்ப உதாரணத்தின் மூலம்..

நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து, தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்;. ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, ”இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்;. இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான் – ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (அல்குர்ஆன் – 2:26)

பத்தொன்பது மூலம்..

அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை. காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் – வேதம் கொடுக்கப்பட்டவர்கள் – உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் – காஃபிர்களும்: ”அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்;. அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை, அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் – 74:30-31)

அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளி..

அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்). அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை : விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகின்றது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று, மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் – 24:35)

சாம்பலினைக் காற்று..

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது : அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை – புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது. இதுவே வெகு தூரமான வழிகேடாகும். (அல்குர்ஆன் – 14:18)

சிலந்திப் பூச்சியின் வீடு..

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம், சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது. அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது. ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (அல்குர்ஆன் – 29:41)

ஏடு சுமக்கும் (படித்து அறிய முடியாத) முட்டாள் கழுதை..

எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது : ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்;. எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் – 62:5)

சைத்தானின் பல்டி..

(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது. (அவன்) மனிதனை நோக்கி – ”நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் ”நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான். (அல்குர்ஆன் – 59:16)

இவ்வுலக வாழ்க்கையானது..

அறிந்து கொள்ளுங்கள் : ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்;. மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்;. (அதாவது 🙂 அது முளைப்பிக்கும் பயிர் – விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது.. ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; – பின்னர், அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே.. எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு’ (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை – ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் – 57:20)

அறுவடைக்காக காத்திருந்து..

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது. (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளா(விளை)கின்றன. முடிவில் – பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தைப் பெற்றுக் கவர்ச்சியடைந்த பொழுது, அதன் சொந்தக்காரர்கள் – (கதிரை அறுவடை செய்துகொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்;. அச்சமயம், இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் – 10:24)

பாக்கியம் பெற்ற சுவர்க்கவாசி..

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது : அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன் இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகைய சுவர்க்கவாசிகள்) – நரகத்தில், எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்குர்ஆன் – 47:15)

நல்லடியார்களாக இருந்தபோதிலும்..

நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்;. இவ்விருவரு(பெண்களு)ம், ஸாலிஹான நம் நல்லடியார்களில் – இரு நல்லடியார்களின் மனiவியர்களாகவே இருந்தனர்;. எனினும், இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்;. எனவே, (அந்நல்லடியார்களான) அவ்விருவராலும் – (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் (அவ்விருபெண்களை விட்டும்) அல்லாஹ்விடமிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை. இன்னும், ”நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (அவ்விருவரு பெண்களுக்கும்) கூறப்பட்டது. (அல்குர்ஆன் – 66:10)

நாய்க்கு ஒப்பாக்கப்பட்டவன்..

(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்;. எனினும், அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான். அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் – அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான். நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்;. எனினும், அவன் இவ்வுலக வாழ்வை(யே பெரிதாக) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான். அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது.. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. (அல்குர்ஆன் – 7:175-176)

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும்..

அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்;. அப்பால் – ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன. அதன் வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கின்றது. (இதுபோன்றே) ஆபரணமோ, அல்லது (வேறு) பொருள் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் – அதைப் போல் நுரை உண்டாகின்றது. இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்;. அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது. ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது. இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான். (அல்குர்ஆன் – 13:17)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது..

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் – 2:261)

சத்தியத்தை முறிக்கும் விடயத்தில்..

இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் – அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாதை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான். (அல்குர்ஆன் – 16:91-92)

வழுக்கு பாறையைப் போல..

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல் – கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடையமாட்டார்கள்;. இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் – 2:264)

(குறிப்பு : இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு, அல்குர்ஆனை எடுத்து, அக்குறிப்பிட்ட வசனத்திற்கு முன்னரும், பின்னரும் வரக்கூடிய வசனங்களுடன் சேர்த்து, அதனுடன் தொடர்புடைய ஏனைய வசனங்களுக்கான விளக்கங்களையும் ஆய்வுக் குட்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்)
– தொகுப்பு : முஹம்மது மஸாஹிம் –
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..

ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?

504. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.

புஹாரி: 891 அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?

அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் எவ்வாறு நேசிப்பது?

ஒருவன் அல்லாஹ்வை நேசிக்கின்றவனாக ஆவதற்கு, அவனுடைய ரஸூலைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாபங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மன்னிப்போனும் மிக்க இரக்கமுடையோனுமாக இருக்கிறான் என்று (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்” (3:31)

‘உங்களில் எவரும் தனது தந்தையை விட, தனது பிள்ளையை விட உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் விட என்னை அதிகம் நேசிக்கும்வரை மூமினாக முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

‘நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததைப் பின்பற்றுவது கொண்டும், அவர்களுடைய ஏவலுக்கு வழிபட்டு, தடுத்ததை விட்டு விடுவது கொண்டுமே நாம் அல்லாஹ்வை நேசித்தவர்களாக ஆகமுடியும்’ என்பதை மேற்காட்டிய அல்குர்ஆன் வசனம் கூறுகின்றது. Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் எவ்வாறு நேசிப்பது?

இமாமின் குத்பா நடந்துகொண்டிருந்தாலும் 2 ரக்அத் தொழுதல்

502. ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து இரு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று கூறினார்கள்.

புஹாரி :930 ஜாபிர் (ரலி)


503. ”உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்’ என்று தம் சொற்பொழிவின்போது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

புஹாரி:1166 ஜாபிர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இமாமின் குத்பா நடந்துகொண்டிருந்தாலும் 2 ரக்அத் தொழுதல்

குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி

500. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.

புஹாரி: 936 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

501. நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றியபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர் மாலிக்கிடம்,) ‘யா மாலிக் – மாலிக்கே! ‘உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்’ என்று (அந்தக் குற்றவாளிகள்) சப்தமிடுவார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 43:77) இறைவசனத்தை ஓத கேட்டிருக்கிறேன்.
புஹாரி: 3230 யஃலா பின் உமைய்யா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி

ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..

499. நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.

புஹாரி :920- இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..