இரு பெருநாள் தொழுகைகள்

505. நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் மக்களைத் தம் கைகளால் அமரச் செய்தது இன்றும் நான் பார்ப்பது போலுள்ளது. பிறகு ஆண்களை (வரிசையினூடே) பிளந்து கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். ‘நபியே உம்மிடம் இறைநம்பிக்கையுள்ள பெண்கள் உறுதி மொழி எடுக்க வரும் போது” (திருக்குர்ஆன் 60:12) என்ற வசனத்தை ஓதினார்கள். ஓதி முடித்துவிட்டு ‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். எவரும் விடையளிக்கவில்லை. ஒரு பெண் மட்டுமே ‘ஆம்’ என்றார். அவர் யாரென்று அறிவிப்பாளர் ஹஸனுக்குத் தெரியவில்லை – பிலால் தம் ஆடையை ஏந்தினார்.’வாருங்கள்! என் தாய் தந்தையர் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் வாருங்கள்!’ என்று பிலால் கூறினார். மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்.

புஹாரி :979 இப்னு அப்பாஸ் (ரலி)


506. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்திவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கிப் பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள்.

புஹாரி: 978 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


507. நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் தொழ பாங்கு சொல்லப்பட்டதில்லை.

புஹாரி: 960 இப்னு அப்பாஸ் (ரலி)

508. நபி (ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.

புஹாரி: 959 அதா (ரலி)


509. நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர்.

புஹாரி :இப்னு உமர் (ரலி)

510. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது களர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் à®®à¯
€à®¤à¯ ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் ‘நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது’ என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் ‘மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை’ எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.

புஹாரி : 956 அபூஸைது அல் குத்ரி (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.