512. புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். ‘அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்” என்று கூறினார்கள்.
513. ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து ‘நபி (ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை நோக்கி ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்றனர். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறிவிட்டனர். ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ ‘நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ‘அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது ‘உனக்குப் போதுமா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.
514. (ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தியோப்பியர்கள்) நபி (ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உமரே! அவர்களை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.