515. நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
மழைத் தொழுகையில் கைகளை உயர்த்துதல்..
516. நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும்போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள்.
மழைத் தொழுகையில் பிரார்த்தனை..
517. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி (ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) ‘கனாத்’ எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.