ஒருவன் அல்லாஹ்வை நேசிக்கின்றவனாக ஆவதற்கு, அவனுடைய ரஸூலைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாபங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மன்னிப்போனும் மிக்க இரக்கமுடையோனுமாக இருக்கிறான் என்று (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்” (3:31)
‘உங்களில் எவரும் தனது தந்தையை விட, தனது பிள்ளையை விட உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் விட என்னை அதிகம் நேசிக்கும்வரை மூமினாக முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
‘நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததைப் பின்பற்றுவது கொண்டும், அவர்களுடைய ஏவலுக்கு வழிபட்டு, தடுத்ததை விட்டு விடுவது கொண்டுமே நாம் அல்லாஹ்வை நேசித்தவர்களாக ஆகமுடியும்’ என்பதை மேற்காட்டிய அல்குர்ஆன் வசனம் கூறுகின்றது.
நபியவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றுவது கொண்டும், அவர்களுடைய கட்டளைகளை ஏற்று நடப்பது கொண்டும் செயல்படுவதை விட்டுவிட்டு, அதிகமாகப் பேசுவது கொண்டு நேசம் ஏற்பட்டுவிட முடியாது.
ஒரு முஸ்லிமுடைய ஈமான் தனது தந்தை, பிள்ளை, உலகிலுள்ள மனிதர்கள் ஆகிய அனைவரைவிட, ஏன்? அவனது உயிரை விடவும் நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கும்வரை அவனுடைய ஈமான் பூர்த்தியாக மாட்டாது.
நபி (ஸல்) அவர்களுடைய ஏவல்களுடன் ஒருவனுடைய மனோஇச்சை, மனைவியுடைய விருப்பம், பிள்ளைகளுடைய ஆசை, தன்னைச்சூழ உள்ளவர்களின் விருப்பம் ஆகியவை குறுக்கிட நேர்ந்தால், நபியவர்களை உண்மையாக நேசிக்கின்றவன், அவர்களுடைய ஏவல்களுக்கே முதலிடம் கொடுப்பான். இவ்விஷயத்தில் தனது மனோஇச்சை, தனது குடும்பம், தன்னைச்சூழ உள்ளவர்களின் விருப்பத்துக்கு மாற்றமாக நடப்பான். அவன் பொய்யனாக இருந்தால், அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் மாறு செய்துவிட்டு, அவனுடைய ஷைத்தானுக்கும், மனோ இச்சைக்கும் பொருத்தமான முறையில் நடப்பான்.
‘நீர் நபி (ஸல்) அவர்களை நேசிக்கின்றீரா?’ என்று ஒரு முஸ்லிமிடம் கேட்டால், எனது உயிரும் பொருளும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்; நான் அவரை நேசிக்கிறேன் என்று பதிலளிப்பான். மீண்டும் அவனை நோக்கி, நீ உனது முகத்தில் தாடியை வளர்ப்பதற்குப் பதிலாக, அதனை வழித்து நபியவர்களுக்கு ஏன் மாறு செய்கிறாய்? வெளித்தோற்றத்திலும், பண்பாடுகளிலும், தௌஹீதிலும் ஏன் நபியவர்களுக்கு ஒப்பாக மாட்டாய்? என்று கேட்டால், அவன் ஆச்சர்யமானதொரு பதிலை உமக்களிப்பான்.
‘நேசம் என்பது உள்ளத்தில் உள்ளது; எனது உள்ளம் பரிசுத்தமானது’ என்று கூறுவான்.
நாங்கள் அவனுக்குச் சொல்வது என்னவென்றால், உனது உள்ளம் தூய்மையானதாக இருந்தால் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னது போன்று அது உனது உடலில் வெளியாகி இருக்கும்.
‘நிச்சயமாக உடலில் ஒரு மாமிசத் துண்டொன்று உண்டு. அது சீர் பெற்றால், உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது கெட்டு விட்டால் உடல் முழுவதும் கெட்டு விடும். அதுதான் இதயம்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நோயுற்றிருந்த ஒரு முஸ்லிம் வைத்தியரைச் சந்திதிக்கச் சென்றிருந்தேன். அவருடைய வீட்டுச் சுவரில் ஆண் பென் இருபாலாருடைய உருவப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. இதனை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பது பற்றி அவருக்குக் கூறினேன். அவர் அதனை அலட்சியம் செய்து கொண்டு, ‘இவர்கள் என்னுடைய பள்ளிபருவத்தின் போது என்னுடனிருந்த தோழர்களும் தோழிகளும் ஆவார்கள் என்று கூறினார்.
அவர்களில் அதிகமானவர்கள் காஃபிர்களாகவும், அவர்களுடனிருந்த பெண்கள் மறைக்கப்பட வேண்டிய தமது அங்கங்களை வெளிப்படுத்தி அலங்கரித்தவர்களாகவும் இருந்தனர் என்பதையும், அவர்கள் சோஸலிச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அந்த டாக்டர் அறிந்தவராகவே என்னிடத்தில் அவ்விதம் கூறினார்.
அந்த வைத்தியர் தனது முகத்தை வழித்திருந்தார். (தாடி வைக்குமாறு) அவருக்கு நான் அறிவுரை கூறினேன். அவர் உடனே கர்வங்கொண்டு முகத்தை வழித்த நிலையிலேயே தான் மரணிப்பதாகக் கூறினார்.
ஆச்சர்யம் என்னெவென்றால், நபி (ஸல்) அவர்களுடைய போதனைக்கு மாறு செய்கின்ற அந்த வைத்தியர் ‘தான் நபியவர்களை நேசிப்பதாகக் கூறினார்’ அத்துடன் அவர் ‘யா ரஸூலல்லாஹ்! அன பீ-ஹிமாக’ (ரஸூலுல்லாஹ்வே! நான் உங்களது பாதுகாப்பிலேயே இருக்கிறேன்) என்று கூறுமாறு எனக்கு அறிவுரை கூறினார்.
அப்பொழுது, ‘நீரோ நபியவர்களுடைய ஏவலுக்கு மாறு செய்கின்றீர்! பின்பு அவரிடத்தில் பாதுகாப்புத் தேடி, அவரிடத்திலேயே தஞ்சம் அடைகின்றீர். இந்த ஷிர்க்கை நபியவர்கள் அங்கீகரிப்பார்களா? நாங்களும், நபியவர்களும் அல்லாஹ்வுடைய பாதுகாவலிலேயே இருக்கின்றோம்’ என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.
நபி (ஸல்) அவர்கள் மீது வைக்கும் அன்பு, கூட்டங்களைக் கொண்டும், அலங்காரங்களைக் கொண்டும், பாட்டுக்கள், கவிகள் ஆகியவைகளைப் பாடுவது கொண்டும், இஸ்லாமிய அடிப்படைக்கு அப்பாற்பட்ட பித்அத்துகளைக் கொண்டும் ஏற்பட்டு விடாது. உண்மையான அன்பென்பது நபியவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றுவது கொண்டும் அவர்களது ஸுன்னாவைப் பற்றி பிடிப்பது கொண்டும் மட்டுமே ஏற்பட முடியும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.