581.தம் தோழர்களில் ஒருவர் ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
தேவைக்குப் பின்னரே தானம்
அண்ணலாரின் ஏகத்துவ கடிதங்களை எடுத்துச் சென்ற நபித்தோழர்கள் யார்?
கேள்வி எண்: 34. ரோமப் பேரரசர் ஸீஸர், ஈரானிய மன்னன் குஸ்ரு பர்வேஸ் மற்றும் அபீஸீனிய மன்னர் நஜாஷி ஆகியோருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்களை எடுத்துச் சென்ற நபித்தோழர்கள் யாவர்? Continue reading
நல்லறங்களுக்கு தானம் செய்தால்..
580.வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்து விடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
ஈமானின் நிலைகள்-மறுமையை நம்புதல்
மறுமை நாளின் அடையாளங்கள்
உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம்
தஜ்ஜால் வருகை
மனிதனுடன் பேசும் பிராணி வருகை
சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்
ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல்
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை
கிழக்கே ஒரு பூகம்பம்
மேற்கே ஒரு பூகம்பம்
அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
எமன்; நாட்டிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு
இந்து பத்து அடையாளங்களும் உலகம் அழியும் மிக நெருக்கமான கட்டத்தில் ஏற்படுபவை. Continue reading
ஜகாத் கொடுக்காதவர் நிலை.
579.நான் குறைஷிகள் நிறைந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொரசொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, ‘(ஜகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்” என்று கூறினார். பிறகு திரும்பிவிட்ட அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் ‘தாங்கள் கூறியதை மக்கள் வெறுக்கிறார்களோ!” என்று கேட்டேன். அதற்கவர், ‘அவர்கள் விவரமற்றவர்கள்’ எனக் கூறினார்.”என் தோழர் என்னிடம் சொன்னார்…” என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும் போதே நான் (குறுக்கிட்டு) ‘உம்முடைய தோழர் யார்?’ எனக் கேட்டேன். ‘நபி (ஸல்) அவர்கள் தாம்’ எனக் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி பகல் முடிய இன்னம் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. ‘ஆம்” என்றேன். ‘உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன். மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்க மாட்டேன்” எனக் கூறினார்.
தான தர்மங்களை ஊக்குவித்தல்.
577.நான் நபி (ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ஹர்ராப் பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! (இந்த) உஹத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் ‘ஓர் இரவு’ அல்லது ‘மூன்று இரவுகள்’ கழிந்து செல்வதைக் கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர” என்றார்கள். -(இந்த இடத்தில் அபூதர்) தம் கையால் (வல, இட, முன் ஆகிய பக்கங்களில்) சைகை செய்து காட்டினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘(இம்மையில் செல்வம்) அதிகமானவர்களே, (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள். இப்படி இப்படியெல்லாம் (தம் செல்வத்தை இறையடியார்களிடையே) செலவிட்டவர்களைத் தவிர!” என்றார்கள். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்! நான் திரும்பி வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று கூறிவிட்டு நடந்து என்னைவிட்டு (சிறிது தூரம் சென்று) மறைந்துவிட்டார்கள். அப்போது ஒரு குரலைக் கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். நான் (குரல் வந்த திசையை நோக்கிப்) போகலாம் என எண்ணினேன். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று சொன்னது நினைவுக்கு வரவே அங்கேயே இருந்துவிட்டேன். (நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததும்,) ‘இறைத்தூதர் அவர்களே! ஏதோ குரலை கேட்டேன். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். (அங்கு வரலாம் என்று எண்ணினேன்.) பிறகு உங்களின் சொல்லை நினைவு கூர்ந்தேன். எனவே, (இங்கேயே) இருந்துவிட்டேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அது (வானவர்) ஜிப்ரீல் (அவர்களின் குரல் தான்). அவர் என்னிடம் வந்து ‘என் சமுதாயத்தாரில் இறைவனுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று தெரிவித்தார்’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் விபச்சாரம் புரிந்தாலுமா? அவர் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் (சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள்.
578.ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். எனவே, நான் நிலா (ஒளிபடாத) நிழலில் நடக்கலானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து ‘யார் அது?’ என்று கேட்டார்கள். நான் ‘அபூதர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே! (இங்கே) வாருங்கள்!” என்றார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் ‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)” என்றார்கள். இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்
னிடம் ‘இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சம வெளியில் என்னை அமரச் செய்தார்கள். ‘நான் உங்களிடம் திரும்பி வரும் வரை இங்கேயே அமர்ந்திருங்கள்” என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் நடந்து சென்றார்கள்.பிறகு அவர்களை நான் காணமுடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்து கொண்டே ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!” என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ஹர்ராப் பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?’ என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் ‘அது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். அவர் ஹர்ராப் பகுதியில் என் முன் தோன்றி, ‘(ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறப்பவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்” என்றார். நான் ‘ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். அவர் மது அருந்தினாலும் சரியே என்றார்.
தம்முடைய இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்களுக்கான இறைவேதனை
21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர்.
21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
21:38. “நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
21:39. தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
21:40. அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
21:41. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.
21:42. “உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக் கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால் அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
21:43. அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்கு தாமே உதவி செய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றபடுபவர்களும் அல்லர்.
21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
21:45. “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ (இறை செய்தி) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டே தான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும் செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள்.
21:46. உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்கு கேடுதான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
21:47. இன்னும், கியாம (தீர்ப்பு) நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை தீமையில்) ஒரு கடுகு அளவு எடை இருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.
ஜகாத் கொடுக்காதோர் தண்டனையில்..
575.நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, ‘கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், ‘என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் ‘என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள். உடனே நான் ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர” என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.
576.”என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அல்லது எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ…அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிட பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனை(க் கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவனைத் அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்” எனக் கூறினார்கள்.
ஜகாத் கொடுக்காவிட்டால் பாவம்.
574.குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த குதிரை, தன்னைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்குப் பசும்புல் வெளிகளில் அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நற்பலன் கிடைக்கும். அதன் கயிறு துண்டிக்கப்பட்டு, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடுகள் அளவிற்கும் அதனுடைய விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நற்பலன்கள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவன் மீதுள்ள பாவச் சுமையாகும். நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளின் ஜகாத் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. ‘எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனை (அதன் நற்பலனைக்) கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்” என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.
ஸதக்கத்துல் ஃபித்ர்.
570.முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
571. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரைஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள்.
572.நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம்.
573.நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு உலர்ந்த திராட்சையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுத்து வந்தோம். முஆவியா (ரலி)வின் ஆட்சியில் ஷாம் நாட்டு உயர் ரகக் கோதுமை தாராளமாகக் கிடைத்தபோது, இதில் (தீட்டிய உயர் ரகக் கோதுமையில்) ஒரு முத்து அதில் (தீட்டாத கோதுமையில்) இரண்டு முத்துக்கு ஈடாகும் என்று முஆவியா (ரலி) கூறினார்.