575.நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, ‘கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், ‘என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் ‘என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள். உடனே நான் ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர” என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.
576.”என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அல்லது எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ…அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிட பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனை(க் கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவனைத் அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்” எனக் கூறினார்கள்.