21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர்.
21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
21:38. “நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
21:39. தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
21:40. அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
21:41. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.
21:42. “உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக் கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால் அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
21:43. அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்கு தாமே உதவி செய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றபடுபவர்களும் அல்லர்.
21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
21:45. “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ (இறை செய்தி) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டே தான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும் செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள்.
21:46. உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்கு கேடுதான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
21:47. இன்னும், கியாம (தீர்ப்பு) நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை தீமையில்) ஒரு கடுகு அளவு எடை இருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.