577.நான் நபி (ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ஹர்ராப் பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! (இந்த) உஹத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் ‘ஓர் இரவு’ அல்லது ‘மூன்று இரவுகள்’ கழிந்து செல்வதைக் கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர” என்றார்கள். -(இந்த இடத்தில் அபூதர்) தம் கையால் (வல, இட, முன் ஆகிய பக்கங்களில்) சைகை செய்து காட்டினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘(இம்மையில் செல்வம்) அதிகமானவர்களே, (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள். இப்படி இப்படியெல்லாம் (தம் செல்வத்தை இறையடியார்களிடையே) செலவிட்டவர்களைத் தவிர!” என்றார்கள். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்! நான் திரும்பி வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று கூறிவிட்டு நடந்து என்னைவிட்டு (சிறிது தூரம் சென்று) மறைந்துவிட்டார்கள். அப்போது ஒரு குரலைக் கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். நான் (குரல் வந்த திசையை நோக்கிப்) போகலாம் என எண்ணினேன். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று சொன்னது நினைவுக்கு வரவே அங்கேயே இருந்துவிட்டேன். (நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததும்,) ‘இறைத்தூதர் அவர்களே! ஏதோ குரலை கேட்டேன். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். (அங்கு வரலாம் என்று எண்ணினேன்.) பிறகு உங்களின் சொல்லை நினைவு கூர்ந்தேன். எனவே, (இங்கேயே) இருந்துவிட்டேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அது (வானவர்) ஜிப்ரீல் (அவர்களின் குரல் தான்). அவர் என்னிடம் வந்து ‘என் சமுதாயத்தாரில் இறைவனுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று தெரிவித்தார்’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் விபச்சாரம் புரிந்தாலுமா? அவர் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் (சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள்.
578.ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். எனவே, நான் நிலா (ஒளிபடாத) நிழலில் நடக்கலானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து ‘யார் அது?’ என்று கேட்டார்கள். நான் ‘அபூதர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே! (இங்கே) வாருங்கள்!” என்றார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் ‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)” என்றார்கள். இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்
னிடம் ‘இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சம வெளியில் என்னை அமரச் செய்தார்கள். ‘நான் உங்களிடம் திரும்பி வரும் வரை இங்கேயே அமர்ந்திருங்கள்” என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் நடந்து சென்றார்கள்.பிறகு அவர்களை நான் காணமுடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்து கொண்டே ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!” என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ஹர்ராப் பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?’ என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் ‘அது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். அவர் ஹர்ராப் பகுதியில் என் முன் தோன்றி, ‘(ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறப்பவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்” என்றார். நான் ‘ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். அவர் மது அருந்தினாலும் சரியே என்றார்.