நோன்பில் மனைவியுடன் உடலுறவு கொண்டால்…

678. ”ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இயலாது!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. ‘இதை உம் சார்பாக வழங்குவீராக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் ‘எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!” என்று கூறினார். ‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1937 அபூஹூரைரா (ரலி).

679. (ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் கரிந்து போனேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எதனால் அப்படி?’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியைப் புணர்ந்துவிட்டேன்” என்றார். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், ‘தர்மம் செய்!” என்றார்கள். அவர், ‘(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு காசிம் (ரஹ்) அவர்கள் ‘நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வந்த உணவு என்ன? என்பது எனக்குத் தெரியாது” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘கரிந்து போனவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இதோ நான் இங்குதான் இருக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொண்டுபோய் தர்மம் செய்!” என்றார்கள். அவர், ‘என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு” என்றார்கள்.

புஹாரி : 6822 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பில் மனைவியுடன் உடலுறவு கொண்டால்…

நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.

677. ”நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”.

புஹாரி : 1930 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.

நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிட்டால்…

675. ”நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) சிரித்தார்கள்.

புஹாரி : 1928 ஆயிஷா (ரலி).

676. ”நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் எவரையும் விட தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!”

புஹாரி : 1927 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிட்டால்…

தொடர் நோன்பு நோற்க தடை.

670. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றார்கள்.

புஹாரி : 1962 இப்னு உமர் (ரலி).

671. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?’ என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்” என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.

புஹாரி : 1965 அபூஹூரைரா (ரலி).

672. ”தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விடையளித்தார்கள்.

புஹாரி : 1966 அபூஹூரைரா (ரலி).

673. நபி (ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர் நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், ‘எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாள்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர் நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர்நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபடுவர்கள் தங்களின் போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன்” என்றார்கள்.

புஹாரி : 7241 அனஸ் (ரலி).

674. நபி (ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்” என்று கூறினார்கள்.

புஹாரி ;1964 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தொடர் நோன்பு நோற்க தடை.

நாம் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

‘நான் உங்களுக்குக் கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை ஸியாரத் செய்வது உங்களுக்கு நன்மையாக அமைவதற்காக இப்பொழுது ஸியாரத் செய்யுங்களென்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்

அடக்கஸ்தலத்தில் நுழையும்போது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களுக்காக துஆ கேட்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

‘இங்கு அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் கப்றாளிகளான மூமின்களே! அஸ்ஸலாமு அலைக்கும்; இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வோம்; அல்லாஹ் எங்களையும் உங்களையும் (கப்றுடைய வேதனையிலிருந்து) பாதுகாக்க வேண்டுமென அவனிடம் வேண்டுகிறேன்’ (முஸ்லிம்) என்று ஸியாரத்தின் போது ஓதிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on நாம் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

நோன்பு திறக்கும் நேரம்.

668. ”சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1954 உமர் (ரலி).

669. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, ‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.

புஹாரி : 1941 இப்னு அவ்ஃபா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பு திறக்கும் நேரம்.

ஸஹர் செய்வதின் சிறப்பு.

665. ”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1923 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

666. நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.)’ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?’ என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்’ என்று பதிலளித்தார்கள் என அனஸ் (ரலி) கூறினார்.

புஹாரி : 575 அனஸ் (ரலி).

667. ”நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1957 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஸஹர் செய்வதின் சிறப்பு.

நோன்பின் ஸஹர் நேரம் பற்றி….

660. ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி: 1916 அதிபின் ஹாத்திம் (ரலி).

661. ”கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!” என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. ‘இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்” என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!”

புஹாரி; : 1917 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி)

662. ”பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.” இதை அறிவிக்கும் இப்னு உமர் (ரலி) ‘அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ் நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்’ என்று கூறினார்கள்.

புஹாரி: 617 இப்னு உமர் (ரலி).

663. பிலால் (ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!” என்று குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 1918 இப்னு உமர் (ரலி).

664. ”நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.

புஹாரி : 621 இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பின் ஸஹர் நேரம் பற்றி….

வேதக்காரர்களின் கூற்றோடு முற்றிலும் வேறுபடும் அல்லாஹ்வின் உண்மைச்சொல்!

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, (19:16)

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார். அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம். (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (19:17)

(அப்படி அவரைக் கண்டதும்,) ‘நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)’ என்றார். (19:18)

‘நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன் பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்’) என்று கூறினார். (19:19)

அதற்கு அவர் (மர்யம்), ‘எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?’ என்று கூறினார். (19:20)

‘அவ்வாறேயாகும். ‘இது எனக்கு மிகவும் சுலபமானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விஷயமாகும்’ என்று உம் இறைவன் கூறுகிறான்’ எனக் கூறினார். (19:21)

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். (19:22)

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: ‘இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா’ என்று கூறி(அரற்றி)னார். (19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து: ‘(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்’ என்று அழைத்து கூறினார். (19:24)

‘இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும். (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். (19:25)

‘ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன். ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறும். (19:26)

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: ‘மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!’ (19:27)

‘ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை’ (என்று பழித்துக் கூறினார்கள்). (19:28)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்¢ ‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?’ என்று கூறினார்கள். (19:29)

‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)

‘இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)

‘என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

‘இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்’ என்று (அக்குழந்தை) கூறியது. (19:33)

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). (19:34)

அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ‘ஆகுக!’ என்று தான் கூறுவான். (உடனே) அது ஆகிவிடுகிறது. (19:35)

அல்குர்ஆன்: ஸூரா மர்யம்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வேதக்காரர்களின் கூற்றோடு முற்றிலும் வேறுபடும் அல்லாஹ்வின் உண்மைச்சொல்!

மாதங்கள் 29 நாட்களாகவுமிருக்கும்…..

658. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் ‘காலையில்’ அல்லது ‘மாலையில்’ துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 5202 உம்மு ஸலமா (ரலி).

659. ”துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1912 அபூபக்ரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மாதங்கள் 29 நாட்களாகவுமிருக்கும்…..