678. ”ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இயலாது!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. ‘இதை உம் சார்பாக வழங்குவீராக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் ‘எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!” என்று கூறினார். ‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
679. (ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் கரிந்து போனேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எதனால் அப்படி?’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியைப் புணர்ந்துவிட்டேன்” என்றார். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், ‘தர்மம் செய்!” என்றார்கள். அவர், ‘(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு காசிம் (ரஹ்) அவர்கள் ‘நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வந்த உணவு என்ன? என்பது எனக்குத் தெரியாது” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘கரிந்து போனவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இதோ நான் இங்குதான் இருக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொண்டுபோய் தர்மம் செய்!” என்றார்கள். அவர், ‘என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு” என்றார்கள்.