670. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றார்கள்.
671. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?’ என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்” என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.
672. ”தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விடையளித்தார்கள்.
673. நபி (ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர் நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், ‘எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாள்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர் நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர்நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபடுவர்கள் தங்களின் போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன்” என்றார்கள்.
674. நபி (ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்” என்று கூறினார்கள்.