நாம் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

‘நான் உங்களுக்குக் கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை ஸியாரத் செய்வது உங்களுக்கு நன்மையாக அமைவதற்காக இப்பொழுது ஸியாரத் செய்யுங்களென்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்

அடக்கஸ்தலத்தில் நுழையும்போது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களுக்காக துஆ கேட்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

‘இங்கு அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் கப்றாளிகளான மூமின்களே! அஸ்ஸலாமு அலைக்கும்; இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வோம்; அல்லாஹ் எங்களையும் உங்களையும் (கப்றுடைய வேதனையிலிருந்து) பாதுகாக்க வேண்டுமென அவனிடம் வேண்டுகிறேன்’ (முஸ்லிம்) என்று ஸியாரத்தின் போது ஓதிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இதனையே நாமும் மொழிவது ஸுன்னத்தாகும். இதற்கு மாறாக இன்று நடைமுறையிலுள்ளவை அனைத்தும் ஸுன்னத்துக்கு முரணாகும்.

நபி (ஸல்) அவர்களின் வாக்குக்கமைவாக கப்றுகளின் மீது அமர்வதோ, அவற்றை மிதிப்பதோ கூடாது.

‘கப்றுகளை நோக்கித் தொழாதீர்கள்! அவற்றின் மீது அமராதீர்கள்!’ ஆதாரம்: முஸ்லிம்

வணக்கம் என்ற எண்ணத்துடன் கப்றைச் சூழ ‘தவாப்’ செய்தல் கூடாது. “(ஹஜ்ஜுக்குச் செல்லும் அவர்கள்) புராதன ஆலயத்தையும் ‘தவாப்’ செய்யவும்” (22:29) என்று குர்ஆனில் கூறப்படுவதன் மூலம் தவாப் செய்ய தகுதியுள்ள ஒரு ஆலயம் கஃபத்துல்லாஹ் மட்டுமேயாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். (பைத்துல் முகத்தஸ், மஸ்ஜிதுந்நபவி போன்றவைக்கூட இதற்கு உரித்தானவையல்ல)

குர்ஆனிலிருந்து எதனையும் அடக்கஸ்தலத்தில் ஓதக்கூடாதென பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

‘நீங்கள் உங்களுடைய வீடுகளை(க் குர்ஆன் ஓதாத) அடக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! எந்த வீட்டில் ஸூரத்துல் பகறா ஓதப்படுகிறதோ அந்த வீட்டைவிட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான்’ ஆதாரம்: முஸ்லிம்

அடக்கஸ்தலங்கள் குர்ஆன் ஓதும் இடமல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு சைக்கினையாக அமைந்துள்ளது. கப்றுகளுக்கு அருகில் குர்ஆன் ஓதுவதாக வந்துள்ள ஹதீஸ்கள் ஸஹீஹானவையல்ல .

கப்றுகளில் உள்ளவர்கள் நபிமார்களாகவோ, அல்லது அவுலியாக்களாகவோ இருப்பினும் அவர்களிடம் உதவி தேடுதல் பெரிய ஷிர்க்காகும். அல்குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.

“நபியே நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தைச் சதா திருப்புவாயாக! இணைவைத்து வணங்குவோரில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். ஆகவே உமக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (ஆண்டவன் என) நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அச்சமயமே அக்கிரமக்காரரில் நீரும் ஒருவராகி விடுவீர்” (10: 105,106)

கப்ரின்மீது மலர்வளையம் சாத்துவது தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இது கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான ஒரு செயலாகவும், பிரயோசனம் எதுவுமில்லாமல் பணத்தை வீணாகச் செலவுசெய்வதாகவும் இருக்கின்றது.

இதற்காக செலவு செய்யப்படும் பணம் ஸதகாவுடைய எண்ணத்துடன் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுமானால், இதன்மூலம் இறந்தவர்கள் பயனடைவதுடன், ஏழைகளும் பயனடைவார்கள்.

ஹதீஸில் வந்துள்ள தடைக்கமைவாக கப்றின் மீது கட்டிடம் அமைப்பதும், அதன்மீது மரணித்தவரின் பெயரோ, அல்லது குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், கவிகள் போன்றவைகளோ எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

‘கப்றின் மீது சாந்து பூசுவதையும் அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ ஆதாரம்:முஸ்லிம்

கப்றுடைய அடையாளத்தை அறிந்து கொள்வதற்காக ஒரு சாணளவு உயர்த்தி வைத்தல் போதுமானது. உத்மான் இப்னு மழ்ஊன் (ரலி) அவர்களுடைய கப்றின் மீது, நபியவர்கள் அடையாளத்துக்காக ஒரு கல்லை வைத்து விட்டு ‘எனது சகோதரனுடைய கப்றை அறிந்து கொள்ள அடையாளமிடுகிறேன்’ என்று கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத் (ஹஸன்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.