மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.

859. ”அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் மண்ணறைகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிற ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இத்கிர் எனும் புல்லைத் தவிர!” என்று கூறினார்கள்.

புஹாரி :1833 இப்னு அப்பாஸ் (ரலி).

860. ‘அம்ர் இப்னு ஸயீது என்பவர் (யஜீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் இராணுவத்தை அனுப்பியபோது, ‘தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை என்னுடைய இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பின்னர் ‘இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித (நகர)மாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே இரத்தத்தை ஓட்டுவதோ, இதன் மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது. இறைத்தூதர் இங்கு (ஒரு சிறு) போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், (அவர் தெரிந்து கொள்ளட்டும்) நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டுமே) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. (இச்செய்தியை இங்கே) வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று நான் அவரிடம் கூறினேன். ‘அதற்கு அம்ர் இப்னு ஸயீது என்ன கூறினார் என கேட்டேன். ‘அதற்கு அம்ர் இப்னு ஸயீது என்ன கூறினார்? என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் கேட்டனர். ‘அபூ ஷுரைஹ்வே! உம்மைவிட நான் (இதைப் பற்றி) நன்கு அறிவேன்; நிச்சயமாக மக்கா நகர் ஒரு பாவிக்கோ, மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கோ, திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கோ பாதுகாப்பளிக்காது’ என்று கூறினார்’ என்றேன்” அபூ ஷுரைஹ் (ரலி) அறிவித்தார்.

புஹாரி:104 அபூஷூரைஹ் (ரலி).

861. அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறை நம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது
. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி), ‘இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இத்கிர் புல்லைத் தவிரத்தான்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

புஹாரி :2434 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.

ஹஜ் உம்ரா அரஃபா தின சிறப்புகள்.

855. ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1773 அபூஹுரைரா (ரலி).

856. ”மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1819 அபூ ஹுரைரா(ரலி).


857. ”இறைத்தூதர் அவர்களே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?’ என நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அபூதாலிபின் மகன்) அகீல், தம் தங்கும் விடுதிகள் அல்லது வீடுகள் எவற்றையாவது விட்டுச் சென்றுள்ளாரா என்ன?’ எனக் கேட்டார்கள்.அபூ தாலிபின் சொத்துக்களுக்கு அம்லும், தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூ தாலிப் இறந்த போது) அகீலும், தாலிபும் இறை மறுப்பாளர்களாக இருந்தனர்.

புஹாரி :1588 உஸாமா பின் ஜைது (ரலி).

858. நமிர் அல் கிந்தீயின் சகோதரி மகனான சாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்களிடம் உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்), ‘முஹாஜிர், (ஹஜ் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டு மினாவிலிருந்து வந்த பிறகு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றிருக்கிறீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு சாயிப் (ரலி), மினாவிலிருந்து வந்த பின்பு மூன்று நாள்கள் (மக்காவில் தங்க) முஹாஜிருக்கு அனுமதியுண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற அலா இப்னு ஹள்ரமீ (ரலி) சொல்ல கேட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3933 அல் அலா பின் அல் ஹள்ரமி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் உம்ரா அரஃபா தின சிறப்புகள்.

நன்மை தீமை சிபாரிசின் பலன் என்ன?

கேள்வி எண்: 43. “எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்” இந்த வசனம் எந்த அத்தியாயத்தில் உள்ளது? அதன் வசன எண் எது?  Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on நன்மை தீமை சிபாரிசின் பலன் என்ன?

இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.

854. ஹஜ்ஜத்துல் விதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ‘எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் வலம் வரக்கூடாது’ என அறிவிக்கச் செய்தார்கள்.

புஹாரி : 1622 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.

ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது…

852. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர் (ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார்.

புஹாரி :1532 இப்னு உமர் (ரலி).

853. பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) ‘நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்” என்று (வானவரால்) கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போல் இப்னு உமரும் அங்கேயே தம் ஒட்டகத்தை உட்கார வைப்பார். அவரின் மகன் ஸாலிமும் அவ்வாறே செய்வார். முஅர்ரஸ் என்னுமிடம் பத்னுல் வாதியிலுள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவிலுள்ளது என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.

புஹாரி :1535 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது…

ஹஜ் அல்லது பிரயாணத்திலிருந்து திரும்பினால் என்ன கூறவேண்டும்?

851. நபி (ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது ஒவ்வொரு மேடான பகுதியில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை ‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள். பிறகு (பின்வருமாறு) கூறுவார்கள். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்லி ஷைஇன் கதீர். ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன, ஸதக்கல்லாஹு வஅதஹு வ நஸர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ். (பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன். நாங்கள் பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும் (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாகவும் (திரும்புகிறோம்.) அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவினான் தன்னந்தனியாகக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்.)

புஹாரி :6385 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் அல்லது பிரயாணத்திலிருந்து திரும்பினால் என்ன கூறவேண்டும்?

மஹ்ரம் இல்லாமல் பெண் ஹஜ் செய்யக்கூடாது.

847. ”எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1086 இப்னு உமர் (ரலி) .

848. நான் நபி (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) ‘கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!”

புஹாரி :1864 அபூ ஸயீத் (ரலி).

849. ”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1008 அபூஹுரைரா (ரலி).

850. ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3006 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மஹ்ரம் இல்லாமல் பெண் ஹஜ் செய்யக்கூடாது.

ஹஜ் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கடமை.

846. நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7288 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கடமை.

ஹஜ் பிறருக்காக (மரணித்தவருக்காக) செய்தல் பற்றி…

844. ஃபழ்ல் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது ‘கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்!” என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.

புஹாரி : 1513 இப்னு அப்பாஸ் (ரலி).

845. கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின்போது வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் ஹஜ் எனும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர்.

புஹாரி : 1854, பழ்ல் பின் அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் பிறருக்காக (மரணித்தவருக்காக) செய்தல் பற்றி…

கஃபாவின் வாசலும் அதன் கதவும்.

843. நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, ‘இது கஅபாவில் சேர்ந்ததா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்!” என்றார்கள். பிறகு நான் ‘எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!” என்று பதிலளித்தார்கள். நான் ‘கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்’ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 1584 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கஃபாவின் வாசலும் அதன் கதவும்.