847. ”எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
848. நான் நபி (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) ‘கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!”
849. ”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
850. ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.