855. ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
856. ”மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
857. ”இறைத்தூதர் அவர்களே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?’ என நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அபூதாலிபின் மகன்) அகீல், தம் தங்கும் விடுதிகள் அல்லது வீடுகள் எவற்றையாவது விட்டுச் சென்றுள்ளாரா என்ன?’ எனக் கேட்டார்கள்.அபூ தாலிபின் சொத்துக்களுக்கு அம்லும், தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூ தாலிப் இறந்த போது) அகீலும், தாலிபும் இறை மறுப்பாளர்களாக இருந்தனர்.
858. நமிர் அல் கிந்தீயின் சகோதரி மகனான சாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்களிடம் உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்), ‘முஹாஜிர், (ஹஜ் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டு மினாவிலிருந்து வந்த பிறகு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றிருக்கிறீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு சாயிப் (ரலி), மினாவிலிருந்து வந்த பின்பு மூன்று நாள்கள் (மக்காவில் தங்க) முஹாஜிருக்கு அனுமதியுண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற அலா இப்னு ஹள்ரமீ (ரலி) சொல்ல கேட்டேன்” என்று பதிலளித்தார்கள்.