859. ”அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் மண்ணறைகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிற ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இத்கிர் எனும் புல்லைத் தவிர!” என்று கூறினார்கள்.
860. ‘அம்ர் இப்னு ஸயீது என்பவர் (யஜீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் இராணுவத்தை அனுப்பியபோது, ‘தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை என்னுடைய இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பின்னர் ‘இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித (நகர)மாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே இரத்தத்தை ஓட்டுவதோ, இதன் மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது. இறைத்தூதர் இங்கு (ஒரு சிறு) போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், (அவர் தெரிந்து கொள்ளட்டும்) நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டுமே) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. (இச்செய்தியை இங்கே) வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று நான் அவரிடம் கூறினேன். ‘அதற்கு அம்ர் இப்னு ஸயீது என்ன கூறினார் என கேட்டேன். ‘அதற்கு அம்ர் இப்னு ஸயீது என்ன கூறினார்? என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் கேட்டனர். ‘அபூ ஷுரைஹ்வே! உம்மைவிட நான் (இதைப் பற்றி) நன்கு அறிவேன்; நிச்சயமாக மக்கா நகர் ஒரு பாவிக்கோ, மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கோ, திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கோ பாதுகாப்பளிக்காது’ என்று கூறினார்’ என்றேன்” அபூ ஷுரைஹ் (ரலி) அறிவித்தார்.
861. அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறை நம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது
. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி), ‘இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இத்கிர் புல்லைத் தவிரத்தான்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.