உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார்.
1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார்.
இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். அவனுடைய உதவிகளையே சார்ந்திருக்க வேண்டும். இந்த நம்பிக்கை மனிதனுக்கு கௌரவத்தை அளிப்பதோடு அவனை அச்சத்திலிருந்தும், விரக்தியிலிருந்தும், குற்றங்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
2. ஒரு முஸ்லிம் இறைவனின் தூதர்கள் அனைவரையும் நம்புகிறார். இறைவனின் தூதர்களுக்கிடையில் அவர் எந்தவித வேற்றுமைகளையும் பாராட்டுவதில்லை.
ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைவனிடமிருந்து ஒரு எச்சரிக்கையாளர் அல்லது ஒரு தூதர் வந்துள்ளார்கள். இத்தூதர்கள் நன்மையின் நனிசிறந்த போதகர்கள். நேர்மையின் உறைவிடங்கள். அவர்கள் மனித இனத்திற்கு அறிவூட்டுவதற்காகவும், இறைவனின் தூதை மனித இனத்திற்கு கொண்டு வந்து சேர்க்கவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு இறைத்தூதரோ அல்லது அதற்கு மேற்பட்ட இறைத்தூதர்களோ அனுப்பப்பட்டார்கள்.
சில காலங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறைத்தூதர்கள் ஒரே காலத்தில் ஒரே சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். இறைவனின் அருள்மறையாம் திருமறை குர்ஆன் 25 இறைத்தூதர்களின் பெயரைக் குறிப்பிடுகின்றது. முஸ்லிம்கள் இவர்கள் அனைவரையும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறைத்தூதர்களே என நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர ஏனைய நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்கோ அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எனத் தெரிகிறது. இருப்பினும் எல்லா இறைத்தூதர்களின் மார்க்கமும், அவர்கள் கொண்டுவந்த இறைத்தூதும் ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. அதுதான் ’இஸ்லாம்’. ஏனெனில் அது இறைவன் எனும் ஒரே ஆதாரத்திலிருந்து, ஒரே நோக்கத்திற்காக வந்தது. அதாவது மனித இனத்தை இறைவன் காட்டிய நேரிய பாதையில் வழி நடத்துவதாகும்.
விதிவிலக்குகள் எதுவுமின்றி இறைவனின் தூதர்கள் அனைவரும் மரணத்திற்கு உட்பட்ட மானிட பிறவிகளே! அவர்கள் வேத வெளிப்பாடுகளைப் பெற்றவர்கள், சில குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். இறைவனின் தூதர்களில் முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதியானவர். மகத்துவமிக்கவர்!.
இது தாமாக தமது வசதிக்காக வைத்துக்கொண்ட நம்பிக்கையல்ல. இஸ்லாத்தின் ஏனைய நம்பிக்கைகளைப்போல இதுவும் ஆதாரபூர்வமான, வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் அமைந்தது. இங்கு நூஹ், இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், ஆசிகளும் உண்டாவதாக!) போன்ற சில தூதர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றது:
அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்ற இவ்வேதத்தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாக்கூப், முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும், அருளப்பெற்ற யாவற்றையும், ஏனைய நபிமார்களுக்கு அருளப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்புகின்றோம். அவர்கள் எவரிடையேயும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. இன்னும் இறைவனுக்கே நாங்கள் அடிபணிகின்றோம். (அல்குர்ஆன்: 2:136) ஒப்புநோக்குக. (3:84, 4:163-165, 6:84-87)
3. மேலே சொன்னவற்றின் விளைவாக முஸ்லிம்கள் இறைவனின் எல்லா வேதங்களையும், வேத வெளிப்பாடுகளையும் நம்புகின்றார்கள். இவ்வேதங்கள் இறைவனின் நேரிய பாதையை தம் மக்களுக்கு காட்டுவதற்காக இறைத்தூதர்களால் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும். திருக்குர்ஆனில் இப்ராஹீம், மூஸா, தாவூத், ஈஸா ஆகியோருக்கு வழங்கப்பட்ட வேதங்கள்பற்றி குறிப்பாக சொல்லப்பட்டுள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வெளிப்படுத்தப் படுவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே இந்த வேதங்களில் சில தொலைந்து விட்டன. சில இடைச்செருகல்களுக்கு உள்ளாயின. மற்றவை மறக்கப்பட்டு விட்டன. அல்லது புறக்கணிக்கப்பட்டு விட்டன அல்லது மறைக்கப்பட்டு விட்டன. Continue reading →