11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.
ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, நம்பிக்கை இல்லாத செயலைப்போன்று குறையுடையதாகும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒருவன் இறைவனிடத்தில் வைக்கின்ற நம்பிக்கையை அவன் தனது அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தினாலன்றி அவன் ஈடேற்றமடைய முடியாது.
இஃது நம்பிக்கையின் ஏனைய பகுதிகளோடு ஈமானின் பிற பகுதிகளே முற்றாக பொருந்திப் போகின்றது. இறைவன் வெறும் வார்த்தைகளை மட்டும் பார்ப்பதில்லை என்பதையே இது காட்டுகின்றது. இன்னும், நம்பிக்கையை செயல்படுத்துவதில் உண்மையான நம்பிக்கையாளர் எவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. அதோடு ஒருவர் இன்னொருவருக்காக செயல்படவோ அல்லது அவருக்காக இறைவனிடத்தில் முறையிடவோ முடியாது என்பதையும் இது காட்டுகின்றது. (சான்றாக திருக்குர்ஆனின் 10:9-10, 18:30, 103:1-3 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)
12. இறைவன், மனிதனுக்கு நேரிய வழியை காட்டியிருந்தாலன்றி அவனை அவனது செயல்களுக்கு பொறுப்பேற்கும்படி பணிக்கமாட்டான் என்பதை ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.
இதனால் தான் இறைவன் பல தூதர்களையும், வேத வெளிப்பாடுகளையும் அனுப்பினான். மனிதனுக்கு நேர்வழியை காட்டுவதற்கு முன்பும், எச்சரிக்கை கொடுப்பதற்கு முன்பும் தண்டனைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் இறைவன் தெளிவாக்கியிருக்கின்றான்.
இறைவனுடைய வழிகாட்டுதல்களை அறியாதவர்களும், இறைத்தூதர்களை அறியாதவர்களும், புத்தி சுவாதீனமில்லாதவர்களும் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியத் தவறி விட்டால், அதற்காக அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. இறைவன் அவர்களை பொறுப்பாளிகளாக ஆக்குவதில்லை. இவர்கள் தங்களுடைய பொதுஅறிவு சொல்கின்றவற்றை செய்யாது விட்டால், அதற்காக மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் இறைவனின் சட்டங்களை, கட்டளைகளை, அவனது வழிகாட்டுதல்களைத் தெரிந்திருந்தும் மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (சான்றாக அல்குர்ஆன்: 4:165, 5:16,21, 17:15)
இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். இஸ்லாத்தைப் பற்றி கேள்வியே பட்டிருக்காத மக்கள், அதனைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த மக்கள் நேர்மையான சிந்தனையுடையவர்களாக இருக்கலாம். இஸ்லாத்தை அறிந்திடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் நல்ல முஸ்லிம்களாக ஆகலாம். இஸ்லாத்தை அவர்கள் அறியவில்லை என்றால், இஸ்லாத்தை அறிவதற்கு அவர்களுக்கு வாய்ப்பேதும் இல்லை என்றால், அவர்கள் முஸ்லிம்களாக இல்லாததற்கு அவர்கள் பொறுப்பாளியாக மாட்டார்கள்.
இஸ்லாத்தை சொல்லாலும், செயலாலும் இவர்களுக்கு எடுத்துச் சொல்லி அழைக்க தவறிவிட்டமைக்கு முஸ்லிம்களையே இறைவன் பொறுப்பாக்குவான்.
எனவே உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும், இஸ்லாத்தை போதிப்பது மட்டுமின்றி, தங்களது வாழ்க்கையில் இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்திக் காட்டிடவும் கடமைப்பட்டவர்கள் என்பதை இது அறிவுறுத்துகின்றது. (சான்றாக அல்குர்ஆன்: 3:104, 16:125 ஆகியவற்றை பார்க்கவும்.)
13. இறைவனால் படைக்கப்பட்ட மனித இயல்புகளில் தீயவற்றைவிட நல்ல இயல்புகளே அதிகம். மனிதன் தன்னை நல்ல முறையில் சீர்படுத்திக்கொள்ள முயன்றால், அந்த முயற்சியில் அவன் தோல்வியடைவதற்கான வாய்ப்புக்களை விட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். இவை இரண்டையும் ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.
இந்த நம்பிக்கைகள், இறைவன் மனிதனிடம் பொறுப்புக்கள் பலவற்றை ஒப்படைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கு அவனுக்கு வழிகாட்ட வேதங்களையும், இறைத்தூதர்களையும் அனுப்பினான் என்ற உண்மையிலிருந்து எழுகின்றது. இயற்கையிலேயே மனிதன் நம்பிக்கையற்றவனாகவும், சீர்திருத்த முடியாதவனாகவும் இருந்தால், எல்லாம் அறிந்த இறைவன் எவ்வாறு அவனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பான் அல்லது சிலவற்றை செய்யும்படியும், சிலவற்றை செய்ய வேண்டாமென்றும் எவ்விதம் அவனுக்கு கட்டளை இடுவான். இவையெல்லாம் வீண் என்று தெரிந்திருந்தால் இறைவன் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். மனிதனிடம் இறைவன் அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். அவனது நலத்திற்காக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான் என்ற உண்மைகளே, மனிதன் உதவியற்றவனோ அல்லது ஆதரவற்றவனோ அல்ல, மேலும் அவன் தீமையைவிட நன்மையை நாடுகிறவனும், நன்மையின்பால் நாட்டமுடையவனும் ஆவான் என்பதையும் மெய்ப்பிக்கின்றது.
இறைவன்மீது நாம் அழுத்தமான நம்பிக்கை கொண்டால், மனிதன் தன்பால் கொள்ளும் முறையான நம்பிக்கையாலும் நம்முடைய காலத்திலேயே பல அற்புதங்களை நிகழ்த்தலாம். இதனை நன்கு புரிந்துகொள்ள இது சம்பந்தமான இறை வசனங்களை ஆழ்ந்து படிப்பது அவசியம்.
14. இறைவன் மீதும், இறை வேதத்தின் மீதும், இறைத்தூதர்கள் மீதும், வானவர்கள் மீதும், மறுமையின் மீதும், இறுதி தீர்ப்பு நாளின் மீதும் (இன்னும் இதற்கு முன்னால் குறிப்பிட்டவைகள் மீதும்) வைக்கப்படும் நம்பிக்கை கண்மூடித்தனமானதாக இருத்தலாகாது. நம்பிக்கை வைப்பவர் தன் உள்ளத்தில் எள்ளளவும் சந்தேகம் இல்லாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் கொள்ளும் நம்பிக்கை பூரனமானதாக அமையும். நம்பிக்கை பூரணமானதாக அமைந்திட அது உளப்பூர்வமாக – ஐயத்திற்கிடமின்றி வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.
ஒருவர் ஏற்றுக் கொள்ளும் நம்பிக்கை, அவரை செயல்பட தூண்டிட வேண்டும். அவரது செயல்கள் அவரது நம்பிக்கையை பிரதிபலித்திட வேண்டும். அப்போதுதான் அவர் கொள்ளும் நம்பிக்கை நன்மை பயப்பதாக அமையும். பலாத்காரமாகத் திணிக்கப்படும் கொள்கைகள், நமிபிக்கைகள் இவற்றால் எந்த நன்மையுமில்லை. நம்பிக்கை செயலில் வரவேண்டுமானால், நம்பிக்கையும் செயலும் ஈடேற்றம் தரவேண்டுமானால் – அது ஐயங்களுக்கு அப்பாற்பட்டு உள்ளத்தில் ஆழப்பதிந்திட வேண்டும்.
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தனது பெற்றோர்கள், மூதாதையர்கள், இவர்கள் முஸ்லிம்கள் ஆகவே நானும் முஸ்லிம் எனச் சொல்லுகின்றவர் இறைவனின் பார்வையில் முஸ்லிமாக மாட்டார். அதுபோலவே சில நிர்பந்தங்களினால் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால் அவரும் இறைவனின் பார்வையில் முஸ்லிமாக மாட்டார். முஸ்லிம்கள் நடப்பதைப்போல் நடப்பவர்கள், முஸ்லிம்கள் ஆடை அணிவதைப்போல் ஆடை அணிபவர்கள், இன்னும் இதுபோல் வெளிப்படையாகத் தெரிகின்ற சில சடங்குகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள், இவர்களும் இறைவனின் பார்வையில் முழுமையான முஸ்லிம்களாக மாட்டார்கள். சபலங்கள், சந்தேகங்கள், கருத்துக்குழப்பங்கள் இவைகளில்லாமல் உண்மையான நம்பிக்கையை தங்கள் இதயங்களில் இருத்திக் கொள்பவர்களே முஸ்லிம்கள்.
ஒருவர் தான் கொண்டிருக்கும் நம்பிக்கையில் தனக்கு சில ஐயப்பாடுகள் இருப்பதாக உணர்ந்தால், தான் கொண்டிருக்கும் நம்பிக்கையில் தனக்கு இன்னும் சரியான பிடிப்பு ஏற்படவில்லை என்ற சபலத்தோடு இருந்தால், அவர் தனது நம்பிக்கையை வலுவாக்கிக் கொள்ள இயற்கை எனும் புத்தகத்தை ஆராய்ந்து பார்க்கும்படி இறைவனால் அழைக்கப்படுகின்றார். அதோடு அவருக்கு இறைவன் தந்திருக்கும் பகுத்தறிவையும் பயன்படுத்தும்படி அழைக்கப்படுகின்றார். மேலும் அவன் திருமறையின் போதனைகளை ஆராய்ந்து பார்க்கும்படியும் பணிக்கப்படுகின்றான். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட இந்த உண்மையை (நம்பிக்கையின் அடிப்படைகளை) அவன் தேடிப்பார்த்தே ஆகவேண்டும். இந்த உண்மையை கண்டுபிடிக்கும்வரை அவன் தனது முயற்சியை கைவிட்டு விடக்கூடாது. அவன் தனது முயற்சியில் உண்மையுடையவனாக இருந்தால், அவன் அதில் ஆர்வமுடையவனாக இருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றே தீருவான். (சான்றாக 2:170, 43:22-24 ஆகிய திருமறை வசனங்களை பார்க்கவும்)
(இதனால் தான்) இஸ்லாம், தன்னை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒருவன் கொள்கையில் பற்றுள்ளவனாகவும், கொள்கையில் தடுமாற்றம் இல்லாதவனாகவும் இருந்திட வேண்டும் எனக் கோருகின்றது. கண்ணை மூடிக்கொண்டு தன்னை பின்பற்றுபவர்களை இஸ்லாம் எதிர்க்கின்றது. சிந்திக்கும் திறன் படைத்தவர்கள், தங்களது சிந்தனைத் திறனை முழுமையாக பயன்படுத்திட வேண்டுமென பணிக்கின்றது இஸ்லாம். ஆனால் ஒரு மனிதன் சிந்திக்கும் திறன் இல்லாதவனாக இருந்தால், அல்லது தனது திறமையில் சந்தேகம் உடையவனாக இருந்தால், அவன தனது திறமைக்கு உட்பட்ட அளவில்தான் தனது ஆராய்ச்சிகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்கள் தங்களது நம்பிக்கையை வலுவானதாக ஆக்கிக்கொள்ள (மார்க்கத்தின்) இஸ்லாத்தின் அதிகாரபூர்வமான ஆதாரங்களை நம்பலாம். அவைகளை குறைகாணும் பாங்கில் பெரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவைகளை பூரணமாக ஆராய்ச்சி செய்திடும் ஆற்றல் அவனுக்கில்லை.
சுற்றிவளைத்து இங்கே நாம் விளக்கிட விரும்புவது இதுதான். அதாவது ஒருவர் இஸ்லாத்தை எந்த சந்தேகமும், சபலமும், கருத்து மாறுபாடும் இல்லாமல் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர் ஒரு முஸ்லிம் ஆவார். ஏனெனில் இஸ்லாம் தன்னளவில் பூரணமானது. அதே பூரண நிலையில் அதனை ஏற்றுக் கொள்பவர்களே முஸ்லிம்கள். இஸ்லாம் எவர்மீதும் திணிக்கப்படுகின்ற ஒன்றல்ல. அவ்வாறு இஸ்லாம் அடுத்தவர்கள் மீது திணிக்கப்படுவதை அதனை அருளிய இறைவன் விரும்புவதில்லை. அதை அவன் ஏற்றுக் கொள்வதுமில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ இஸ்லாம் மனிதனுக்கு உரிமை வழங்கியிருக்கின்றது. இதை நம்பிக்கை சுதந்திரம் எனலாம். ஒருவர் தனது அறிவுக்கு பொருத்தமுடையதாக இஸ்லாம் இருப்பதாக உணர்ந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையேல் தள்ளிவிடலாம். இந்த சுதந்திரத்தை எந்த கட்டுபாடுமின்றி இஸ்லாம் மனிதனுக்கு வழங்கி இருக்கின்றது. இப்படி ஒரு சுதந்திரம் இருந்ததால் தான், அன்றும், இன்றும் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் சுதந்திர மனிதர்களாக, தாங்கள் விரும்பிய கொள்கையை பின்பற்றுபவர்களாக வாழ்ந்திருக்கினர் – வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் ஆட்சியர்கள் இப்படியொரு சுதந்திரத்தை வழங்கியதற்கு காரணம், இஸ்லாம், மார்க்கத்தில் கட்டாயத்தை கண்டிக்கின்றது.
இஸ்லாம் என்பது மனித உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். அப்போதுதான் ஒரு முஸ்லின் தனது பொறுப்புகளை நிறைவேற்றிட உண்மையான முயற்சிகளை மேற்கொள்வார். தன்மீது சுமத்தப்படும் கடமைகளை கண்ணாய் காத்திருந்து நிறைவேற்றுவார். ஒவ்வொருவரும் ஒரு சுதந்திரமான சூழ்நிலையில், தானகவே தனது அறிவைப் பயன்படுத்தி உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதே இஸ்லாம்! இப்படிச் சொல்வதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க அறிவை தருவதற்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனப் பொருளாகாது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆற்றிட வேண்டிய கடமையிலிருந்து அவர்களை இது விடுவித்திடாது. அதுபோலவே தன்னைச் சார்ந்து வாழ்பவர்களுக்காக ஒருவர் ஆற்றிட வேண்டிய கடமையிலிருந்தும் அவரை விடுவித்திடாது. இஸ்லாம், கருத்து சுதந்திரத்தை, சிந்தனை சுதந்திரத்தைத் தருகின்றது அவ்வளவுதான். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள், தங்களைச் சார்ந்து வாழ்பவர்கள், இவர்கள் ஒரு வழுவான நம்பிக்கையுடைய – ஈமானுடைய – முஸ்லிம்களாக ஆக என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தையும் செய்திட வேண்டும்.
நம்பிக்கையை (ஈமானை) வலுவுள்ளதாக அமைத்துக் கொள்ள எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. ஒருவன் இந்த வழிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். ஒன்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது திருக்குர்ஆன், முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. இன்னொன்று பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது. பகுத்தறிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் அந்த ஏக இறைவனை ஏற்றுக் கொள்கின்ற வகையிலேயே முடியும். இப்படிச் சொல்வதால் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வழியில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்று தவறாகப் பொருள் கொண்டுவிடக் கூடாது. அதேபோல் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட வழியில் ஆன்மீகத்திற்கு அறவே இடமில்லை என்றும் பொருளாகாது. உண்மையில் ஒன்றுக்கு ஒன்று உதவியாகவே அமையும். உண்மையை கண்டுபிடிப்பதில் இவை இரண்டு வழிகளும் உற்றதுணையாக அமையும். ஒரு மனிதன் தனது சிந்திக்கும் ஆற்றலில் நம்பிக்கையுடையவனாக இருந்தால் அவன் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த வழியை மேற்கொள்ளலாம். அல்லது ஆன்மீக அடிப்படையில் அமைந்த வழியை பின்பற்றலாம். அல்லது அவன் இரண்டு வழிகளையுமே பின்பற்றலாம். இவற்றில் எந்த வழியைப் பின்பற்றினாலும் தான் கண்டெடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் என அவன் நம்பலாம்.
ஒரு மனிதன் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவனாக இருந்தால் அல்லது தனது சிந்திக்கும் ஆற்றலில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தால், அவன் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வழியைப் பின்பற்றலாம். அல்லது அவன் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் அறிவோடு திருப்தி அடையலாம். (தனது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்)
ஒருவன் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த வழியைப் பின்பற்றினாலோ அல்லது ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வழியை பின்பற்றினாலோ அல்லது இரண்டையுமே பின்பற்றினாலும் அவனது இறுதி முடிவு ஒன்றாகத்தான் அமையும். அவை இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கே இட்டுச் செல்லும். இந்த வழிமுறைகள் எல்லாமே முக்கியமானவைகள் தான். அவைகள் அனைத்தும் இஸ்லாத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளே. (சான்றாக அல்குர்ஆன்: 5:16,17, 12:109, 18:30, 56:80 ஆகிய வசனங்களை பார்க்கவும்.)
15. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் என்றும், அது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது என்றும், அது வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வழி அருளப்பட்டது என்றும் ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார். திருக்குர்ஆன், பல்வேறு சந்தர்ப்பங்களில் சில கேள்விகளுக்கு பதில் தந்திடவும், சில பிரச்சனைகளுக்கு தீர்வு தரவும், சில சிக்கல்களை அவிழ்த்திடவும், இந்த உலகம் அழியும்வரை மனிதனுக்கு நேர்வழியைக் காட்டிடவும் இறைவனால் அருளப்பட்டது. அது ஒன்றே மனிதன் ஈருலகிலும் வெற்றியடைய வேண்டிய வழியைக் காட்டுவதாகும். திருக்குர்ஆனிலிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இறைவனுடையது. அதில் காணப்படும் ஒவ்வொரு எழுத்தும் இறைவனுடையது. அதன் ஒலி இறைவனின் குரலின் உண்மையான எதிரொலியாகும்.
திருக்குர்ஆனே இஸ்லாத்தின் முதல் மூல ஆதாரமாகும். அது அரபி மொழியில் அருளப்பட்டது. அது இன்றுவரை அருளப்பட்ட வடிவில், அப்படியே அணுவும் மாறிடாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. என்றென்றும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வரும். ஏனெனில் திருக்குர்ஆனை அது அருளப்பட்ட அரபி வடிவில் பாதுகாக்கின்ற பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான். அதனை மனிதர்கள் தங்களது போக்குக்கு தகுந்தபடி மாற்றிக் கொள்ள முடியாது. உலகம் உள்ளவரை மனிதனுக்கு வழிகாட்டியாக அது விளங்கும். அப்படி அது விளங்கும் என்பதற்கான உறுதியை இறைவனே தந்துள்ளான். அதற்கான பொறுப்பையும் அவனே ஏற்றுக் கொண்டுள்ளான். (சான்றாக அல்குர்ஆன்: 4:82, 15:9, 17:9, 41:41-44, 42:7, 52:53 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)
மேலே இறைவன் தந்துள்ள இந்த வாக்குறுதிக்கு இணங்க திருக்குர்ஆன் அன்று முதல் இன்று வரை அது அருளப்பட்ட அதே வடிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு புள்ளிக்கூட மாற்றத்திற்கு ஆளானதில்லை. திருக்குர்ஆன் பதிவு செய்யப்பட்ட விதத்திலோ அல்லது அதன் அத்தியாயங்கள் கோர்வைப்பட்ட விதத்திலோ எந்த மாற்றமுமில்லை. இவைகளை இன்றளவும் எவரும் சந்தேகித்ததே இல்லை. முஸ்லிம்கள் தான் சந்தேகப்படவில்லை என்றில்லை. முஸ்லிமல்லாத அறிஞர்கள் கூட இவைகளை ஐயுற்றதில்லை. இஃது ஓர் வரலாற்று உண்மையாகும்.
உண்மையை சொல்வதானால் திருக்குர்ஆன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற வாழும் அற்புதமாகும். மனித இனமே ஒன்று திரண்டு ஒரே முகமாக முயன்றாலும் திருமறையின் ஒரு அத்தியாயத்தைப் போன்றதொரு அத்தியாயத்தைக்கூட ஆக்கிட முடியாது. (சான்றாக அல்குர்ஆன்: 2:22-24, 11:13-14, 17:88-89.)
16. ஒரு உண்மையான முஸ்லிம் திருக்குர்ஆனுக்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வுக்கும், வாக்குக்கும் இருக்கும் தனித்தன்மைகளை பூரணமாக நம்புகிறார். திருமறை இறைவனின் வார்த்தைகளை – கட்டளைகளைக் கொண்டது. ஹதீஸ் எனப்படும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் திருக்குர்ஆனின் நடைமுறை விளக்கமாகும். முஹம்மத் (ஸல்) அவர்களின் பணி, தனக்கு அருளப்பட்ட அதே வடிவில் இறைவழி காட்டுதலை மனிதர்களுக்கு எடுத்துச் சொல்வதும், அதன்படி வாழ்ந்து காட்டுவதும்தான். முஹம்மத் (ஸல்) வாழ்வும், வாக்குமே ஹதீஸ் எனப்படுவது. இது இஸ்லாத்தின் இரண்டாவது ஆதாரமாகும். இந்த இரண்டாவது ஆதாரம் முதல் ஆதாரமான திருமறையின் நடைமுறை விளக்கமாகவும், முழுக்க முழுக்க அதை பிரதிபலிப்பதுமாகும். திருக்குர்ஆன் தான் முதல் ஆதாரம். அதுவே எல்லா செயல்களுக்கும் உரைகல்.
திருமறையோடு ஒத்துப்போகாத அத்தனையும் நிராகரிக்கப்படும். ஹதீஸ்களில் எதுவும் திருமறையிலிருந்து மாறுபடுமேயானால் அந்த ஹதீஸ் கேள்விக்குரியதாகவே கொள்ளப்படும். உண்மையான ஹதீஸ்கள் எதுவும் நிச்சயமாகத் திருமறைக்கு எதிராக இருக்காது.
சில குறிப்புகள்
(ஈமான்) நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாம் சற்று அதிகமான எண்ணிக்கையையே தந்திருக்கின்றோம். இது சாதாரண வழக்கத்திலிருந்து மாறுபட்டதே ஆகும். வழக்கமான ஆறு எண்களோடு நாம் நிறுத்திக் கொள்ளவில்லை. நாம் எத்தனை அடிப்படைகளை சேர்த்துக் கொள்ள முடியுமோ அத்தனை அடிப்படைகளை சேர்த்திருக்கின்றோம். நாம் சேர்த்திருக்கும் அத்தனையும் திருமறை, பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டவைகளே! இங்கே நாம் தந்திருப்பவைகளை விட அதிகமான திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகத் தந்திருக்க முடியும். இடப்பற்றாக்குறையின் காரணமாகவே ஆதாரங்களைக் குறைத்திருக்கின்றோம். எனினும் திருக்குர்ஆனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸும் நமக்கு எப்போதும் தயாராக இருக்கும் ஆதாரங்களாகும். ஐயங்கள் எழுந்தால் நாம் அவற்றின் துணையை நாடலாம்.