நம்பிக்கை: (ஈமான்)
இறைவன் ஒருவனே என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம்பிக்கை (ஈமான்) என்பது இத்துணை குறுகியதன்று. அது இதனினும் விசாலமானது.
ஈமான் என்பது சில சடங்கு, சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. பெயரளவில் வைக்கப்படுகின்ற நம்பிக்கை ஈமானாகி விடாது. ஈமான் அல்லது நம்பிக்கை என்பது செயலில் நிலைநிறுத்தப்படுகின்ற ஒன்று. நேரான நடத்தையின் மூலமே ஈமானின் நிறைவான நிலையை அடைய முடியும்.
ஈமான் என்றால் என்ன? ஈமானின் நிலைகள் என்னென்ன? எந்தெந்த அடிப்படைகளின் மூலம் நல்ல ஈமானை நாம் நம்முள் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பனவற்றிற்கு திருக்குர்ஆனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் நல்ல இலக்கணங்களை வகுத்துத் தந்திருக்கின்றன.
இந்த வகையில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால்:
1. இறைவனை நம்புகின்றவர்கள், அவனது வானவர்களை நம்புகின்றவர்கள், அவனது வேதங்களை நம்புகின்றவர்கள், வேதங்களில் நிறைவானதும், இறுதியானதும் திருக்குர்ஆனே என நம்புபவர்கள், இறைவனின் தூதர்கள் அத்தனை பேரையும் நம்புபவர்கள். சங்கிலித் தொடரான இந்த வரிசையில் முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதியானவர் என உறுதியாக நம்புகின்றவர்கள்.
இறுதித் தீர்ப்பு நாளையும், இறைவனே எல்லாவற்றிலும் நிறைவான அறிவினை பெற்றவன் என்றும் நம்புகின்றவர்கள்.
2. எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனை நம்புகின்றவர்கள். அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
3. உயிர், உடமை, ஆரோக்கியம், அறிவு, அனுபவம் என்ற இறைவன் அருளியுள்ள செல்வங்களிலிருந்து அவனுக்காக அவன் வழியில் தாராளமாக செலவு செய்பவர்கள்.
4. தொழுகையை நிலைநாட்டுபவர்கள்.
5. இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஏழை வரியை (ஜகாத்) அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு தருபவர்கள். (ஜகாத்தைப் பெற தகுதியானவர்கள் தனிமனிதர்களாகவோ, அல்லது சமுதாய அமைப்புகளாகவோ இருக்கலாம்) இதன் அளவு நிகர வருமானத்தில் இரண்டரை சதவீதமாகும்.
6. நன்மையை செய்திடவும், நேரானவற்றை உலகில் நிலைநிறுத்திடவும் துணை நிர்பவர்கள், தீயனவற்றை தங்களால் இயன்றவரை தங்களிடம் இருப்பவைகளைக் கொண்டு தடுத்து நிறுத்துபவர்கள்.
7. இறைவனுக்கும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் பணிந்து நடப்பவர்கள். திருக்குர்ஆனை ஓதிடும்போது தங்களுடைய (நம்பிக்கை) ஈமான் பலம் பெறுவதாக உணருபவர்கள். இறைவனின் திருநாமம் அவர்கள் முன் மொழியப்படும்போது தங்களுடைய இதயத்தில் பணிவு கொள்பவர்கள்.
8. இறைவனையும், பெருமானார் (ஸல்) அவர்களையும் தங்களைப்போல் ஈமான் கொண்டுள்ள ஏனைய சகோதரர்களையும் இறைவனுக்காகவே நேசிப்பவர்கள்.
9. தங்களோடு வாழும் அண்டை வீட்டாரையும், உறவினர்களையும் நேசிப்பவர்கள். தங்களிடம் வந்த விருந்தினரை குறிப்பாக அன்னியர்களை அன்புடன் நடத்துபவர்கள்.
10. உண்மையையே பேசுபவர்கள், நல்லனவற்றையே பேசுபவர்கள், அல்லாதபோது மௌனம் சாதிப்பவர்கள்.
மேலே சொன்னவைகளிலிருந்து ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, ஈமான் என்பது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் செயல் வடிவில் ஊடுருவி நிற்பதாகும். இஸ்லாம் வழங்கும் கொள்கைகளின்படி உண்மையான ஈமான் என்பது ஆம்னீகம், உலகியல், தனிமனிதன் – சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
உண்மையான நம்பிக்கையாளர்களை திருக்குர்ஆன் எப்படி சித்தரிக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட, இங்கே சில எடுத்துக்காட்டுக்களை தருகின்றோம். திருமறையில் இதுபோன்ற எடுத்துக்காட்டுக்கள் எண்ணற்றவை காணக்கிடைக்கின்றன.
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும். அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும். இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள். அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன்: 8:2-4)
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் – அவற்றின் கழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு – அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது – அதுதான் மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன்: 9:71-72)
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் – இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். (திருக்குர்ஆன்: 49:15)
திருக்குர்ஆனிலிருந்து எடுத்துத் தரப்பட்ட இந்த ஆதாரங்களைப்போல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் பல எடுத்துக்காட்டுக்களை எடுத்துக் காட்டிட முடியும். உதாரணமாக:
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களில் எவரும் தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை அவர் உண்மையான நம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
ஈமானின் (நம்பிக்கையின்) பலத்தை எடுத்துக் காட்டிட மூன்று அறிகுறிகளுண்டு.
(1) இறைவனையும் அவனது தூதரையும் எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிப்பது.
(2) ஏனைய முஸ்லிம்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே விரும்புவது, அன்பு செலுத்துவது.
(3) ஒருவர் தான் தீயில் எடுத்தெறியப்பெற்றால் எந்த அளவுக்கு எதிர்ப்பாரோ அந்த அளவுக்கு, தான் இறை மறுப்பிற்கு வர நிர்பந்திக்கப்பட்டால் எதிர்த்து நின்றிட வேண்டும்.
இறைவனையும் இறுதித் தீர்ப்பு நாளையும் நம்புகின்றவர், தனது அண்டை வீட்டாருக்கு எந்தவொரு தீமையை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார். இன்னும் அவர் தன்னுடைய விருந்தினரிடம் குறிப்பாக அன்னியர்களிடம் பாசத்தோடும், பரிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளார். அவர் உண்மையையே பேச வேண்டும். அது முடியாதபோது மௌனமாக இருந்திட வேண்டும்.
மேலே சொன்னவைபோல் எண்ணற்ற ஹதீஸ்கள் இருக்கின்றன. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். மேலே திருக்குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் எடுத்துத் தரப்பட்ட மேற்கோள்கள், திருமறை, நபிமொழி இவற்றின் துல்லியமான மொழியாக்கங்கள் அல்ல. அவைகள் அரபுமொழியில் இருக்கின்ற வேகத்தையும், உணர்வையும் அப்படியே பிரதிபலிப்பவை அல்ல. இதற்கான காரணம் நாம் அறிந்ததே. திருக்குர்ஆனை அதன் எல்லா அழகோடும் இன்னொரு மொழியில் ஆக்கித் தருவதென்பது இயலாத ஒன்று. இறைவனே அதை அப்படி ஆக்கி வைத்திருக்கின்றான். இது பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கும் பெருமளவில் பொருந்தும்.