அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் இவைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை மீறி நடந்ததே இல்லை. இந்த வகையில் அவர்கள் பாவங்களே செய்தவர்களல்ல எனக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தங்களை அறியாமல் சில தவறுகளைச் செய்திருக்கலாம். சில முடிவுகளில் அவர்கள் தவறி இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவன் வகுத்துத் தந்த வரையறைகளை மீறியதே கிடையாது.
இறைவன், இறைதூதர்களை அனுப்பி இருப்பது பூமிக்கும், சுவர்க்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதேபோல் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றது. இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி இருப்பது மனிதனை மாற்ற முடியும், அவனை பண்புடையவனாக ஆக்கிட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இன்னும், மனிதனிடம் தீமைகளை செய்யும் பண்புகளைவிட, நன்மையைச் செய்யும் பண்புகளே அதிகமாக இருக்கின்றன என்று பொருள்.
மனிதன் இயற்கையாகவே அறிந்திருப்பவற்றை உறுதிபடுத்திடுவது, அவனால் இன்னும் என்னென்னவற்றை புதிதாகத் தெரிந்திட முடியுமோ அவற்றை அறிவிப்பது, அவனுக்கு தெரியாதவற்றை தெரியத்தருவது இவைகளே இறைத்தூதின் நோக்கமாகும். மனிதனுக்காக இறைவன் தரும் நேரிய பாதையை அவனுக்கு தெரிவிப்பது இறைத்தூதின் இலட்சியமாகும். மனிதனை நன்மை செய்யத் தூண்டுவதும், தீமையைச் செய்வதிலிருந்து தடுப்பதும் இறைத்தூதின் இனியப் பணியாகும்.
இறைதூது – இறைவன் மனிதனுக்கு வழிகாட்டிகளை அனுப்புகின்றான் என்பது, மனிதனின் நலத்தின்பால் இறைவன் கொண்டுள்ள அன்பின் இணையற்ற எடுத்துக்காட்டேயாகும். இறைதூது மனிதனை நேர்வழியின்பால் நடத்த வேண்டும் என்ற இறைவனின் அக்கறையின் தெளிவான வெளிப்பாடேயாகும்.
இறைவன் மறுமையில் மனிதன் செய்கின்ற செயல்கள் குறித்து மனிதனிடம் கணக்கு கேட்கவிருக்கின்றான். அப்படி அவன் மனிதனிடம் கணக்கு கேட்க வேண்டுமானால் அவன் மனிதனுக்கு முதலில் மனிதன் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை தெளிவுபடுத்திடாமல், பின்னர் அவனிடம் கேள்வி கேட்பதும் தண்டிப்பதும் நியாயமாகாது. ஆகவே நீதிகளின் இருப்பிடமாய் இலங்கும் இறைவன் முதலில் தனது இறைத்தூதர்கள் மூலம் மனிதனுக்கு எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொல்லி விடுகின்றான். அதன் பின்னரே மனிதன் தன் வழிகாட்டுதல் வழி ஏன் ஒழுகவில்லை எனக் கேட்கின்றான். அதன் பின்னரே தண்டனை தருகின்றான். இப்படித் தனெக்கென வகுத்துக் கொண்டுள்ள இறை நியதியை இறைவன் இறைதூதின் மூலம் நிலைநாட்டுகின்றான்.
இறைவன் மனிதனுக்கு நேர்வழியைக் காட்டுகின்றான் என்பது மட்டுமல்ல. அவன் மனிதனுக்கு தனது இறைத்தூதர்கள் மூலம் எச்சரிக்கைகளையும் விடுகின்றான். மனிதன் நேரிய பாதையிலிருந்து தடம்புரண்டு, குழப்பங்களை விளைவித்து வழிகேட்டில் வீழ்வானேயானால் என்னென்ன அபாயங்களை அவன் எதிர்நோக்க வேண்டியதிருக்கும் என்பதையும் முன்னமேயே அறிவித்து விடுகின்றான் இறைவன். இத்தனை வழிகாட்டுதல்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும் பின்னரும் மனிதன் உண்மையை உணர்ந்துக் கொள்ளத் தவறினால் அவன் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றான். இப்படி இறைவன் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது அவன் மனிதன் மீது கொண்டுள்ள அக்கறையினால்தான். இது இறைவனின் பொதுநியதிக்கு முற்றிலும் ஏற்புடையதாக அமைகின்றது.
(இதுவரை இந்த உலகில் வந்த நபிமார்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 124 ஆயிரமென பேசப்படுகின்றது.)
இதுவரை வந்த இறைத்தூதர்கள் அனைவரையும் அனுப்பியவன் அந்த ஏக இறைவனே! இந்த இறைத்தூதர்கள் அனைவரும் வழங்கிய வழிகாட்டுதல்களும் அந்த ஏக இறைவனுடையதே!
இதுவரை வந்த இறைத்தூதர்களின் இலட்சியமும் ஒன்றேதான். அவர்கள் அனைவரும் பரப்பிய கொள்கையும் ஒன்றேதான். அவர்கள் அனைவரும் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்டவர்களே! அவர்கள் அனைவரும் இறைவனின் தூதை – வழிகாட்டுதலை – வாழ்க்கை முறையை மனிதனுக்கு எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே! அவர்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டி அநீதியை அழித்தொழிக்கவே அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மனிதனுக்கு வாழ்வின் உண்மையான இலட்சியம் என்ன என்பதை எடுத்து சொல்ல வந்தவர்களே! மனிதன் இந்த உலக வாழ்க்கையை எந்த வகையில் அமைத்துக் கொண்டால் அவன் ஈருலக வாழ்விலும் வெற்றியடைய முடியும் என்பதை எடுத்துச் சொல்லிட வந்தவர்களே இறைத்தூதர்கள்!.
மேலே சொன்ன இந்த கருத்துக்களை மனதில் கொண்டு தான் ஒரு முஸ்லிம் இறைவனின் தூதர்கள் அனைவரையும் எந்த பாகுபாடுமின்றி ஏற்றுக் கொள்கிறார். இந்த அடிப்படையிலே தான் முஸ்லிம்கள் இறைவன் இதுவரை அருளிய வேதங்கள் அனைத்தும் உண்மை என ஏற்றுக் கொள்கின்றார்கள்.