நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு யாரையும் படைத்து விடுவதில்லை. நமக்கு இறைவனால் தரப்பட்டுள்ள உயிரும் வாழ்வும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அறிவுடைய மனிதர்கள் எவரும் இவைகளை விரயம் செய்திட மாட்டார்கள். சிந்திக்கும் திறன் படைத்த எவரும் இவைகளை பலனற்றதாக ஆக்கிட மாட்டார்கள்.
சில நேரங்களில் சிலர், விரக்தியின் காரணமாக தங்களுடைய பொன்னரிய உயிரை தற்கொலை மூலம் மாய்த்துக்கொள்ள முற்படுவதை பார்க்கிறோம். இவர்களும்கூட கடைசி நேரத்தில் மீண்டும் ஒருமுறை உயிர் பிழைத்து வாழும் வாய்ப்பு கிடைத்திடாதா என அங்கலாய்க்கக் காண்கின்றோம்.
மனிதனுக்கு உயிரை வழங்கியவன் வல்லான் இறைவனே! அதனை திரும்ப எடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அதனை அழிக்கும் உரிமை இல்லை. இதனாலேயே தான் இஸ்லாம் எல்லாவிதமான தற்கொலைகளுக்கும் தடை விதித்துள்ளது. ஒரு உயிர் உடலைப் பிரிந்து செல்லும்போது பொறுமையோடும் அமைதியோடும் இருக்கும்படி வேண்டுகின்றது இஸ்லாம்.
கொலை செய்த குற்றத்திற்காக ஒருவனின் உயிர் மரணதண்டனை தருவதன் மூலம் பிரிக்கப்படுகின்றது. இஃது இறைவனின் உரிமைப்படியே செய்யப்படுகின்றது. ஏனெனில் இறைவன் தந்த சட்டத்தின்படியே அவ்வாறு செய்யப்படுகின்றது.
இறைவன் மனிதனுக்கு உயிரைத் தரும்போது சில தனித்தன்மைகளையும், தகுதிகளையும் உடன் தருகின்றான். இவை விரயம் செய்யப்பட அல்ல. அதுபோலவே இறைவன் சில கடமைகளை நிறைவேற்றும்படி மனிதனை பணித்திருக்கின்றான். இதுவும் வீணுக்காக அல்ல. இவைகளின் மூலம் மனிதன் தனது வாழ்வின் இலட்சியத்தில் வெற்றிபெற இறைவன் உதவி செய்கின்றான். மனிதன் இந்த மண்ணிலே பயனுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்கு இறைவன் துணை செய்கின்றான்.
இன்னும் இப்படி சில தனித்தன்மைகளைத் தருவதன் மூலம், சில சிறப்புத் தகுதிகளை தருவதன் மூலம், சில கடமைகளை மனிதன் மீது பணித்திருப்பதன் மூலம் மனிதன் வாழ்வின் சுவையை பருகிட இறைவன் வழி காட்டுகின்றான்.
மனிதனின் உயிர், மனிதனிடம் இறைவன் தந்திருக்கும் ஒரு அடைக்கலப் பொருளே! அந்த அடைக்கலப் பொருளை மனிதன் பொறுப்புடன் வைத்துப் பேணிக்காத்திட வேண்டும்.
உலக வாழ்க்கை என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து மறு இடத்தில் முடியும் ஒரு பயணத்திற்கு ஒப்பாகும். அது மறுமை எனும் நித்திய வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் இடைப்பட்ட பயணமேயாகும். இந்த பயணத்தில் மனிதன் ஒரு பயணியே ஆவான். இந்த பயணத்தில் அவன் மறுமை எனும் நிரந்தர வாழ்வுக்கு என்னென்ன பயன்படுமோ அவற்றையே எடுத்துச் செல்ல வேண்டும்.
வேறு வார்த்தையில் சொல்வதானால் மனிதன் இந்த உலகில் என்னென்ன நல்லவைகளோ அவற்றையே செய்ய வேண்டும். அதோடு எந்த நேரமும் அவன் இந்த தற்காலிக உலகை விட்டு அந்த நிரந்தர உலகுக்கு சென்றிட தயாராக இருந்திட வேண்டும்.
இந்த உலகில் மனிதன் வாழும் வாழ்க்கை மிகவும் தற்காலிகமான ஒன்றேயாகும். அவனுக்கு தரப்பட்டிருக்கும் ‘கால அவகாசம்’ மிகவும் குறைவானது. அவன் இந்த உலகிலிருந்து எப்போதும் திரும்ப அழைக்கப்படலாம். ஆகவே இந்த குறுகிய கால இடைவெளிக்குள் அவன் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு உபயோகமானதாக ஆக்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு உபயோகமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவனுக்குத் தரப்பட்டுள்ள ‘கால அவகாசம்’ முடிந்து விட்டால் அவன் துளி நேரமும் அதைத் தாழ்த்திட முடியாது. மறுமை என்ற நித்திய வாழ்க்கைக்கு மனிதன் தன்னை தயார் படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பே இந்த உலக வாழ்க்கை.
இந்த உலக வாழ்க்கை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள இருக்கின்ற ஒரே வழி, நமது வாழ்வை இறைவனின் வழிகாட்டுதல் வழி அமைத்துக் கொள்வதே. நமது வாழ்வை இறைவன் காட்டிய முறையில் அமைத்து, மறுமை எனும் நிலையான வாழ்வுக்கு நம்மைத் தயாராக்கிக் கொள்வதே அறிவுடைமை! அதுவே வாழ்வை பயனுள்ள வகையில் பயன் படுத்துவதென்பதாகும்.
இந்த உலக வாழ்க்கை மறுமை எனும் முடிவுக்கு இட்டுச் செல்வதாக இருப்பதனால் தான் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறையை அமைத்துத் தந்துள்ளது. இந்த உலக வாழ்வில் மனிதன் எதைக் கொள்ள வேண்டும், எதைத் தள்ள வேண்டும், அவன் எதைச் செய்ய வேண்டும், எதை நாண வேண்டும் என்பனவற்றை இஸ்லாம் தெளிவாகக் கற்றுத் தருகின்றது.
எல்லா மனிதர்களும் இறைவனிடமிருந்து வந்தவர்களே! அவர்கள் அனைவரும் அந்த இறைவனிடமே மீளுவார்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
இந்த உலகில் ஒரு அன்னியரைப்போல் வாழுங்கள். இந்த உலகத்தை கடந்து செல்லுகின்ற ஒரு பயணியைப்போலவே வாழுங்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் அழகுற மொழிந்துள்ளார்கள்.