கேள்வி எண்: 84. நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?’ எனக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தை கூறுக. Continue reading
அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?
அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.
1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).
கால் நடைகள் முகத்தில் அடையாளமிடாதே.
1372. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள் ‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனுடைய வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம்” என்றார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ‘ஹுரைஸ்’ (அல்லது ‘ஜவ்ன்’) குலத்தார் தயாரித்த கறுப்பு நிறக் கம்பளி மேலங்கியை அணிந்துகொண்டு மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த தம் வாகன (ஒட்டக)த்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
புஹாரி : 5824 அனஸ் (ரலி).
கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.
1371. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர் (ரஹ்), ‘அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்’ என்று அபூ பஷீர் (ரலி) கூறினார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்கள்.
புஹாரி : 3005 அபூபஷீர் அல் அன்ஸாரி (ரலி).
நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.
1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி).
1364. ”(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என என்னிடம் அபூ தல்ஹா (ரலி) தெரிவித்தார்கள். புஸ்ர் இப்னு ஸயீத் (ரஹ்) அறிவித்தார்.
(ஒரு முறை ஸைத் இப்னு காலித் (ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களின் வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. எனவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், ‘இவர்கள் (ஸைத் (ரலி)), ‘இவர்கள் (ஸைத் (ரலி)) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம். ஆனால், ஸைத் (ரலி) (அதை அறிவிக்கும் போது) ‘துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் படத்)தைத் தவிர’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘கேட்கவில்லை” என்றேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்” என்று கூறினார்கள்.
புஹாரி : 3226 புஸ்ர் பின் ஸயீத் (ரலி).
1365. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.
புஹாரி : 5954 ஆயிஷா (ரலி).
1366. நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் ‘இது என்ன தலையணை?’ என்று கேட்டார்கள். ‘நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!” எனக் கூறினார்கள்.
புஹாரி : 2105 ஆயிஷா (ரலி).
1367. இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)” என (இடித்து)க் கூறப்படும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5951 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1368. ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.
புஹாரி : 5950 இப்னு மஸ்ஊத் (ரலி).
1369. நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, ‘அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), ‘நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!’ என்றார்.
புஹாரி : 2225 ஸயீத் இப்னு அபூஹஸன் (ரலி).
1370. நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி), ‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்” என்றார்கள்.
புஹாரி: 5953 அபூஜூரா (ரலி).
இஸ்லாம் முழங்குவது எதனை?
வணக்கத்துக்குரிய ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கும்படி இஸ்லாம் அழைக்கின்றது. மேலும், தன்னுடைய அறிவு ஞானத்தைக் கொண்டு சிந்தித்து உணருமாறு மனிதனுக்கு திரும்ப திரும்ப கட்டளையிடுகின்றது.
இஸ்லாம் பரவிய ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே உலகின் மாபெரும் நாகரிகங்களும், பல்கலைக்கழகங்களும் வளமானதொரு வாழ்வை நோக்கி நடைபோடத் துவங்கின.
“அறிவைத் தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமை” – எனும்
முஹம்மத் (ஸல்) அவர்களின் அமுதமொழி இம்மாபெரும் புரட்சிக்கு அடிகோலியது! இதன் விளைவாக, கிழக்கு மற்றும் மேற்குலக சிந்தனைகளின் கூட்டிணைப்பும், ஆக்கபூர்வமான பழைய கருத்தோட்டங்களை உள்ளடக்கிய புதிய சிந்தனைகளைக் கொண்டதொரு உலகம் உருவானது.
இதன் தாக்கத்தால் கலை, மருத்துவம், கணிதம், இயற்பியல், வானவியல், புவியியல், கட்டடக்கலை, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட மனித வாழ்வின் பல்வேறு துறைகளும் மாபெரும் வளர்ச்சியும் ஏற்றமும் கண்டன. அதுமட்டுமல்ல, அரேபிய எண் அமைப்பு, நவீன கணித வாய்ப்பாட்டு முறையான அல்ஜிப்ரா, கணிதத்தின் தோற்றுவாயான பூஜ்யம் இவைபோன்ற இன்னபிற பல்வேறு கண்டுபிடிப்புகள் அனைத்தும் மத்திய ஐரோப்பாவுக்குச் சென்றது இஸ்லாமிய உலகிலிருந்துதான் என்பது வரலாற்று உண்மை!
அதுமட்டுமல்ல, மிக நுணுக்கமான உபகரணங்கள் பல தயாரிக்கப்பட்டன. உதாரணமாக, ஐரோப்பிய கடற்படையினருக்கு பெரிதும் துணையாக அமைந்த உயர்வுமானி (Astrolabe) கோணமானி (Quadrant) மேலும், உயர்ரக கடற்ப்பயண வரைபடங்கள் ஆகியன பெரும் நவீனமடைந்தது இஸ்லாமிய உலகின் தாக்கத்தினால் தான்!
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.
யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்தல்.
1362. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3462 அபூஹுரைரா (ரலி).
ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.
1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
புஹாரி : 5846 அனஸ் (ரலி).
காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.
1360. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன்.
புஹாரி :475 அப்பாஸ் பின் தமீம் (ரலி).
காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.
1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி).
1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5856 அபூஹூரைரா (ரலி).